வாழைப்பழத் தோலில் இத்தனை நன்மைகளா?

பழங்களில் வாழைப்பழத்துக்கு என்று எப்போதும் ஒரு மவுசு உண்டுதான். ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் பழம் என்பதாலும், சீசன் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்பதாலும் கூட.
வாழைப்பழத் தோலை தூக்கி எறிய வேண்டாம்
வாழைப்பழத் தோலை தூக்கி எறிய வேண்டாம்
Published on
Updated on
2 min read

பழங்களில் வாழைப்பழத்துக்கு என்று எப்போதும் ஒரு மவுசு உண்டுதான். ஏழை மக்கள் வாங்கி சாப்பிடும் பழம் என்பதாலும், சீசன் என்று இல்லாமல் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் என்பதாலும் கூட.

வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான சத்துக்களும், சாப்பிடுவதற்கு மிகவும் எளிதானது என்பதாலும் அது பலருக்கும் பிடித்த பழமாகவும் உள்ளது.

சரி.. வாழைப்பழத்தை நாம் எப்படி சாப்பிடுவோம்? பழத்தை எடுத்து தோலை உரித்து சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கிஎறிந்துவிடுவோம். அவ்வளவுதானே? தவறு... இது மிகவும் தவறு!

வாழைப்பழத்தை எடுத்து பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு, தோலை தூக்கி எறிவதால் நீங்கள் மிக முக்கிய பல சத்துக்களை தூக்கி எறிந்துவிடுகிறீர்கள் என்றுதான் சொல்லுவோம். இங்கே சில ஆச்சரியத்தக்க விஷயங்களை அறிந்து கொள்வோம்.

உண்மையில், வாழைப்பழத் தோலில், உடலுக்குத் தேவையான மிக முக்கிய சத்துகள் ஏராளமாக உள்ளது. இது பற்றி சத்துணவு நிபுணர்கள் கூறுவதையும் கேட்கலாம்.

தனியார் மருத்துவமனையில் சரிவிகித உணவுமுறை நிபுணர் சுஷ்மா கூறுகையில், வாழைப்பழத் தோல் சாப்பிடுவதற்கு உரியது மட்டுமல்ல, அதில் ஏராளமான பொட்டாசியம், நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான அமினோ என நிறைந்து உள்ளது. அது மட்டுமல்ல.. மக்கள் அனைவரும் தேடி அலையும் ஆன்டிஆக்ஸைடு அதிகம் நிறைந்துள்ளது. எனவே, வாழைப் பழத் தோலை சாப்பிடுவதன் மூலம் இதய நோய், நீரிழிவு, புற்றுநோய் என பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

வாழைப்பழத் தோலில் இருக்கும் அதிகப்படியான டிரிப்டோபான் மற்றும் அதனுடன் பி6 கலந்திருப்பது, மன அழுத்தத்தைப் போக்கவும் மனநலப் பிரச்னைகளுக்கு தீர்வாகவும் அமைந்துள்ளது.

வாழைப்பழத் தோலில் இருக்கும் பி6, நல்ல உறக்கத்துக்கு வித்திடும். எனவே மன அழுத்தம் போன்ற குறைபாடுகளுக்கு உறக்கம் நல்ல மருந்தாக அமைகிறது. நார்ச்சத்துக்கு அதிகம் நிறைந்த தோலை சாப்பிடுவதன் மூலம் செரிமாணக் கோளாறுகள் நீங்குகிறது. வயிற்று உபாதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்கிறார்.


வாழைப்பழத் தோலை எப்படி சாப்பிடுவது? 

இதற்கும் அவரே குறிப்புகளைத் தருகிறார். ஒருவர் வாழைப்பழத் தோலை சாப்பிடுவது என்று முடிவு செய்துவிட்டால், நன்கு பழுத்த பழங்களை தெரிவு செய்து கொள்ளுங்கள். இவை எப்போதும் மிக இனிப்புச் சுவையுடன் தோல் மிக மெல்லியதாக இருக்கும். எளிதாகவும் உரியும். அவ்வாறு உரித்த தோலை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்களுக்குப் பிடித்த உணவுகளோடு சேர்த்தும் சாப்பிடலாம். அல்லது ரொட்டியில் ஜாம் தடவி சாப்பிடுவது போல சாப்பிடலாம். அல்லது அதனை சமைத்துக் கூட சாப்பிடலாம். எப்படி, வேக வைத்து, ஆவியில் வைத்து, நன்கு வறுத்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிட எளிதான வகையில் மாற்றி அதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும் என்கிறார்.

சத்துணவு நிபுணர் சுஜாதா கூறுகையில், வழக்கமாக வாழைப்பழத் தோலை சருமப் பராமரிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனை சாப்பிடுவது என்று வந்தால் அதனை நீங்கள் சாப்பிடும் ஏதேனும் உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும், வெள்ளை அணுக்கள் உற்பத்தி பெருகும். வயிற்றுப் பிரச்னைகளுக்கு நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். வாழைப் பழத் தோலை நன்கு மசித்து உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்மைதானே என்று நினைத்து அதிகமாக சாப்பிட்டுவிட வேண்டாம். சாலட் போன்றவற்றில் கூட சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com