களைகட்டும் ஆடம்பர திருமணங்கள்: திருமண சேவைத் துறையினர் மகிழ்ச்சி

ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டன. இதனால் இந்த சேவைத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
களைகட்டும் ஆடம்பர திருமணங்கள்: திருமண சேவைத் துறையினர் மகிழ்ச்சி
களைகட்டும் ஆடம்பர திருமணங்கள்: திருமண சேவைத் துறையினர் மகிழ்ச்சி

கரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாதிப்புக்குள்ளான ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் மீண்டும் களைகட்டத் தொடங்கிவிட்டன. இதனால் இந்த சேவைத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டில் ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் நடப்பதால், திருமணம் நடத்துபவர்களுக்கு வேண்டுமானால் அதிக செலவு என்று வருத்தப்படலாம். ஆனால், ஆடம்பர திருமணங்கள் வாயிலாக ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது என்கிறார்கள் இந்த சேவைத் துறையில் இருப்பவர்கள்.

மிகப்பெரிய திருமண மண்டபங்களில் சுமார் ஆயிரம் விருந்தினர்கள் பங்கேற்கும் திருமண நிகழ்வுகள் தற்போது அதிகரித்திருப்பதால் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சமையல் கலைஞர்கள், அலங்காரப் பணிகள், நாற்காலி, பந்தல்போடுபவர்கள், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அச்சிடும் துறையில் இருப்பவர்கள் என பல்வேறு துறையினரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரே நேரத்தில் பணிவாய்ப்புப் பெறுகிறார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சரியான வருவாய் இல்லாமல் அவதிப்பட்டு வந்த இந்தத் துறையினர், கரோனா காலத்துக்கு முன்பிருந்ததைப்போல, ஆடம்பர திருமண நிகழ்ச்சிகள் மீண்டு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், அதிகரிக்கும் வாய்ப்புகளும் பல்வேறு கலாசாரங்களை நாமும் கைகொள்ளும் வகையில் மணப்பெண் அலங்காரம் முதல், மணமக்களின் ஆடைகளுக்கே சில லட்சங்கள் வரை செலவு செய்வது என்று மக்களின் மனநிலை மாறிவிட்டது. ஒரு நாளைக்கு ஏன் இவ்வளவு செலவு என்று யோசித்த தலைமுறையினர் மாறி, இப்போதில்லையென்றால் எப்போது? என்று நினைக்கும் தலைமுறையினரின் காலம் இது.

இதனால், ஆரம்பத்தில் ஒரு புகைப்படக் கலைஞர் என்றிருந்த நிலை மாறி, விடியோ பதிவு செய்பவர்கள், பிறகு மணமக்கள் வீட்டார் தரப்பில் இரண்டு புகைப்படக் கலைஞர் எனவும், கேண்டிட் கேமரா நிபுணரும், டிரோன்கள் மூலம் புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து திரைப்படங்களைப் போல பிரம்மாண்டமான திருமணங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில்தான் கரோனா பேரிடர் ஏற்பட்டு, ஒரு திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கு மேல் இடம்பெறக் கூடாது என்ற அளவுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திருமண சேவைத்துறைகள் கடுமையாக அடிவாங்கின. இந்த சேவைத் துறையில் பணியாற்றியவர்கள் பலரும் வேலை வாய்ப்பை இழந்தனர்.

கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் கூட, பலரும் மிக எளிமையான முறையிலேயே திருமணங்களை நடத்தி வந்தனர். வேலையிழப்பு, குடும்பங்களில் மரணங்கள் போன்றவற்றால் திருமண நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்பட்டது மறுபுரம் இந்தச் சேவைத் துறையினரை வெகுவாகப் பாதித்திருந்தது.

பொதுவாக ஒரு ஊரில் நூற்றுக்கணக்கான திருமண மண்டபங்கள் இருக்கும்பட்சத்தில் ஒரு சில 1000 விருந்தினர்களை எதிர்கொள்ளும் வகையிலும், 50க்கும் மேற்பட்டவை 500 விருந்தினர்களை எதிர்கொள்ளும் வகையிலும், பாதிக்கும் கீழ் 200 பேர் வரை எதிர்கொள்ளும் வகையில் இருக்கம்.

அந்த வகையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்வுகள் நடக்கும் போது நேரடியாக 200 முதல் 300 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள. இதைத் தவிர்த்து, மறைமுகமாக சமையல் பொருள்கள் விநியோகிப்பவர்கள், அலங்காரப் பொருள் விநியோகிப்பவர்களும் பயன்பெறுவார்கள்.

கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டே உணவு பரிமாறும் பணிகளை பகுதிநேரமாக செய்யும் ஏராளமான மாணவர்களுக்கு இந்த திருமண நிகழ்ச்சிகள் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வழக்கமான திருமண நிகழ்ச்சிகள் நன்கு களைகட்டின. இதனால் சமையல் கலைஞர்கள் முதல் உணவு பரிமாறுவோர் வரை பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. அடுத்து மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கும் போது நிச்சயம் திருமண நிகழ்ச்சிகள் அதிகரித்து முகூர்த்த நாள்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இந்தத் துறையில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

மார்கழி மாதத்தில் பெரிய  அளவில் திருமணங்கள் நடக்காது என்றாலும், சின்ன சின்ன நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி, பிப்ரவரியில் குறிப்பிட்ட சில முகூர்த்த நாள்களில் அதிகளவில் திருமணங்கள் நடக்கும் என்பதால், இந்தத் துறை ஊழியர்கள் இப்போதே அதிகப்படியான வேலை வாய்ப்புகளைப் பெற்று, கடந்த இரண்டு ஆண்டுகளில் இழந்ததை மீட்டுவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 700 பேருக்கு மேல் பங்கேற்கும் திருமண நிகழ்ச்சிகள் குறைவாகவே இருந்தன. தற்போது 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் திருமணங்கள் சராசரியாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் திருமணங்கள் அதிகரிக்கும் என்றும் அதற்கான ஆர்டர்கள் ஏற்கனவே பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com