அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!

முதல்வர் ஸ்டாலின் மகனும் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ஆதரவு உள்ளே வெளியே!!

முதல்வர் ஸ்டாலின் மகனும் பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தை செய்து வைத்தார்.

45 வயதாகும் நடிகரும், தயாரிப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி, இன்று அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருப்பதை கட்சியின் மூத்த தலைவர்களும், திமுக தொண்டர்களும் வரவேற்று கொண்டாடி வருகிறார்கள்.

திமுக மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் கூட, தங்களது பிள்ளை அமைச்சர் பதவியேற்றிருப்பது போலவே, உதயநிதிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். கட்சிக்குள் இது தொடர்பான ஒருமித்த கருத்து நிலவுவதே இதற்குக் காரணம்.

வெளியே சில பல எதிர்மறைக் கருத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. முக்கிய பதவிகளில் மகன்கள் மற்றும் மகள்களை நியமிப்பதை திமுக எப்போதும் தவறாக நினைத்ததில்லை என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஆளுநா் மாளிகையில் இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான அழைப்பு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள், முக்கிய பிரமுகா்களுக்கு பொதுத் துறையின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டது. 

பதவிப் பிரமாண நிகழ்வு நிறைவடைந்ததும், முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தவாறு, தலைமைச் செயலகம் வந்த உதயநிதி ஸ்டாலின், தனது அறையில் அமைச்சருக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மகனும் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவருமான டிஆர்பி ராஜா கூறுகையில், இருளை விரட்டும் சக்தி சூரியனுக்கே உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் தமிழக அரசின் புதிய சூரியனாக மிளிர்வார் என்று குறிப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவரான ராஜா, அமைச்சராக அவர் பல அற்புதங்களைச் செய்ய வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

உதயநிதிக்கு இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டு, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய துறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையை சுற்றுச்சூழல் துறை அமைச்சரான சிவ.வீ.மெய்யநாதன் கவனித்து வந்தார்.

உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பதன் மூலம், தமிழக அமைச்சரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்களின் எண்ணிக்கை 35-ஆக உயர்ந்துள்ளது. பேரவைத் தோ்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வென்றாா். திமுக இளைஞரணிச் செயலா் பொறுப்பையும் அவா் வகித்து வருகிறாா்.

இளைஞர்கள் என்றில்லை, கட்சியின் மூத்த தலைவர்களும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் - துர்கா தம்பதியின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றிருப்பதற்கு டிகேஎஸ் இளங்கோவன் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.

உதயநிதிக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் பலரின் ஆதரவு உள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மிகச் சிறப்பாக கடினமாக பணியாற்றி, பல தலைவர்களின் பாராட்டுகளையும் உதயநிதி பெற்றிருக்கிறார் என்று டிகேஎஸ் இளங்கோவன் குறிப்பிடுகிறார்.

மறுபக்கம் அதிமுகவும் பாஜகவும் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என்று கடும் விமரிசனங்களையும் முன் வைத்துள்ளன.

இது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் கூறுகையில், இளவரசர் தற்போது தமிழக அமைச்சராக்கப்பட்டுள்ளார், எதிர்காலத்தில் இவர் மன்னராக பதவியேற்பார் என்று கருத்திட்டுள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே, உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுக் கொள்வார், 2026ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றும் விமரிசித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருபாதி கூறுகையில், தேர்தலுக்கு முன்பு, ஸ்டாலின் அளித்த உறுதி மொழியில், எனது குடும்பத்தினர் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள், பதவி வகிக்க மாட்டார்கள் என்று கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, வாரிசு அரசியல் ஜனநயாகத்துக்கு நல்லதல்ல என்று தனது கருத்தை முன் வைத்துள்ளார்.

இந்த விமரிசனங்களுக்கு பதிலளித்திருக்கும் இளங்கோவன், இதனை வாரிசு அரசியல் என்று கூறுவதில் அர்த்தமில்லை, இது மக்களின் தொண்டர்களின் நம்பிக்கையை பொறுத்த விஷயம். திராவிட கொள்கையில் உதயநிதி உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com