புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் ஈரோடு சித்த மருத்துவமனை

மாற்றுமுறை மருத்துவம் மூலம் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது ஈரோட்டில் உள்ள அருள் சித்த மருத்துவமனை.
சித்த மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்
சித்த மருத்துவமனையில் காத்திருக்கும் நோயாளிகள்

ஈரோடு: மாற்றுமுறை மருத்துவம் மூலம் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது ஈரோட்டில் உள்ள அருள் சித்த மருத்துவமனை. இதனால் நோய் பாதிக்கப்பட்ட மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஈரோட்டில் குவிந்து வருகின்றனர்.

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் உயிர்க்கொல்லி நோய் என அஞ்சப்படும். அனைத்து தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோய்.

ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒரு சிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் உள்ளது. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்த அச்சம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது.

மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்கள் ஒன்றும் செய்யமுடியாமல் கைவிரித்து விடுகின்றனர்.

      டி. அருள்நாகலிங்கம், அருள் சித்த மருத்துவமனை நிறுவனர்      
      டி. அருள்நாகலிங்கம், அருள் சித்த மருத்துவமனை நிறுவனர்      

ரத்தப் புற்று நோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய், பல் ஈறுகள், வயிறு(குடல்), கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய் என அனைத்து உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கு ஆங்கில முறை மருத்துவம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. நோய்த் தாக்குதல் முதல் அல்லது இரண்டாம் நிலையில் இருந்தாலே பெரும்பாலும் குணப்படுத்திவிடலாம்.  10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொருளாதார பிரச்னையால் சிகிச்சையை தொடர முடியாத நிலை இருந்தது. இப்போது முதல்வர் காப்பீட்டு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனைகள் கூட இலவசமாக சிகிச்சை அளிக்கின்றன.
 
நம்பிக்கையூட்டும் சித்த மருத்துவம்

புற்றுநோய் சிகிச்சைக்கு ஆங்கில முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் பலரும், சித்த, ஆயுர்வேத முறையிலான மருந்துகளையும் சேர்த்தே எடுத்துக்கொள்கின்றனர். ஆங்கில மருத்துவத்தில் கைவிடப்பட்ட பலரும் சித்த மருத்துவத்தை நாடி வருகின்றனர்.

புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து வாங்க தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மாதந்தோறும் சென்று வருகின்றனர். யுடியூப், வாட்ஸப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சித்த மருத்துவ முறையிலான சிகிச்சை நிலையங்கள் பிரபலமாகி வருகின்றன.  அதேபோன்றுதான் வாட்ஸப் மூலம் பகிரப்பட்ட தகவல் வாயிலாக ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்கும் சித்த மருத்துவமனை இருப்போது உலக அளவில் தெரியவந்துள்ளது.

ஈரோடு-கரூர் சாலையில் கொல்லம்பாளையம் பகுதியில் மோளகவுண்டம்பாளையம் பிரிவு சாலையில் அருள் சித்தா கிளினிக் என்ற பெயரில் இயங்கும் இந்த மருத்துவமனையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் தினமும் குவிந்து வருகின்றனர்.  இங்கு புற்றுநோய்க்கு ரூ.3,200 மதிப்பிலான மருந்து ரூ.1-க்கு வழங்கப்படுகிறது.

டாகடர் எஸ். சிவானந்தம்
டாகடர் எஸ். சிவானந்தம்

இது எப்படி சாத்தியம், குணம் அடைந்தவர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கு அந்த மருத்துவமனையின் நிறுவனரான டி.அருள் நாகலிங்கம் கூறியதாவது:

நான் இங்கு 16 ஆண்டுகளாக இங்கு மருத்துவமனையை நடத்தி வருகிறேன். மருத்துமனையை நிர்வாகம் செய்வது மட்டுமே என் பொறுப்பு தவிர என்னுடைய தேடலில் கிடைத்த மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை இங்கு பணியாற்றும் சித்த மருத்துவர் எஸ்.சிவானந்தம் நோயாளியின் நோய் பாதிப்பு தன்மையை அறிந்து மருந்து வழங்கி வருகிறார்.

என்னுடைய குடும்பம் மூன்று தலைமுறைகளாக பாரம்பரிய வைத்திய முறையில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என்னுடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயினால் இறந்துவிட்டார். இறக்கும் தருவாயில் அவர் புற்றுநோய்க்கு சித்த மருத்துவ முறையில் மருந்து கொடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனால் 100-க்கும் மேற்பட்ட சித்தர்களை சந்தித்து இந்த மருந்தை கண்டுபிடித்து கடந்த 5 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.  இங்கு வைத்தியம் பார்த்து குணமடைந்த ஒருவர் சில மாதங்களுக்குப் பிறகு பதிவிட்ட வாட்ஸ்ஆப் பதிவால் கடந்த 3 மாதங்களாக மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

கூட்டம் அகிகரித்துள்ளதால் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் தேதி ஒதுக்கி சிகிச்சை அளித்து வருகிறோம். இப்போது தினமும் 50 பேருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கிறோம். சுமார் 3,000 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இங்கு கொடுக்கும் மருந்தில் குணமடைந்து விடுவீர்கள் என யாருக்கும் சொல்வதில்லை. ஏற்கனவே எந்த முறையால் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தாலும், இங்கு கொடுக்கும் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறோம். தவிர மாதத்திற்கு ரூ.3,200 மதிப்புள்ள மருந்தை ரூ.1-க்கு கொடுக்கிறோம்.  நோயாளியை நேரில் பார்த்துவிட்டு தான் மருந்து கொடுக்கிறோம்.

மாதம் ரூ.3 லட்சம் வரை மருந்துக்கு செலவாகிறது. சிகிச்சைக்கு வருபவர்களில் வசதியுள்ளவர்கள், நோய் குணமானவர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் மருந்து வாங்கிக்கொள்ள முடிகிறது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று பாடிய வள்ளலார் வழியை பின்பற்றி வாழ்பவன் நான், இதனால் யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதால் இங்கு வரும் அனைவருக்கும் மதிய உணவு இலவசமாக வழங்குகிறோம்.

இப்போது கர்நாடகம், கேரளம் செல்லும் மக்கள் இங்கு வருகின்றனர். தவிர மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து வந்து மருந்து வாங்கிச்செல்கின்றனர். தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் இருந்து தமிழர்கள் பலரும் உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என மருந்து கேட்கின்றனர்.

3 மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் வருவதால் முன்பதிவு கட்டாயம் ஆக்கியுள்ளோம். 9385941299, 6382525456 என்ற செல்லிடபேசி எண்களில் வாட்ஸ்ஆப் மூலம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு எப்போது வர வேண்டும் என்ற தகவலை செல்லிடபேசி மூலம் தெரிவிப்போம் என்றார்.

வாழ்வேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

இங்கு மாதம்தோறும் மருந்து வாங்கிச்செல்லும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான சென்னை மதுரவாயிலைச் சேர்ந்த மும்தாஜ்(59) கூறியதாவது:

கடந்த 4 ஆண்டுகளாக கருப்பைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளேன். சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவனை மருத்துவர்களே கைவிரித்து விட்டனர். தவிர ரூ.10 லட்சம் அளவுக்கு செலவும் செய்துவிட்டேன். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இந்த சித்த மருத்துவமனை குறித்து அறிந்து மாதம் தோறும் வந்து மருந்து வாங்கிச்செல்கிறேன். கரோனா காலத்தில் போக்குவரத்து இல்லாத 3 மாதங்களாக மருந்து வாங்க முடியவில்லை. இப்போது மாதந்தோறும் மருந்து வாங்கிச்செல்கிறேன். குணமாகிவிட்டது என்று சொல்ல முடியாது. வேதனைகள் குறைந்துள்ளது, உடல் செயல்பாடுகள் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதை உணர முடிகிறது. இதனால் மேலும் சில ஆண்டுகள் உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தவிர போக்குவரத்து செலவை தவிர, இங்கு வேறு செலவு இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது என்றார்.

மக்களின் நம்பிக்கை

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சிகிச்சை முறையில் குணமடைந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கில மருத்துவம், சித்தா, ஆயுர்வேதா என அனைத்து சிகிச்சை நிலையங்களுக்கும் செல்கின்றனர். புற்றுநோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவமனைகள் ஏராளமானவை இருந்தாலும் பெரும்பாலனவை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றன.  அருள் சித்த மருத்துவமனையில் இலவசமாக மருந்து அளிக்கப்படுவதும், சிலர் நோய் பாதிப்பு குறைந்துள்ளதை உணர்வதும் மூலம் தான் இந்த சித்த மருத்துவமனை உலக அளவில் பிரபலமாகி வருகிறது. 

கட்டுரை: மீள்பதிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com