சுகம் தரும் சித்த மருத்துவம்: உடலை காக்கும் சிறந்த காயகல்ப மருந்து எது தெரியுமா?

நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் திரிபலை ஒரு எளிமையான மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படலாம்
சுகம் தரும் சித்த மருத்துவம்: உடலை காக்கும் சிறந்த காயகல்ப மருந்து எது தெரியுமா?

நிலவேம்பு குடிநீர், கப சுர குடிநீர் போன்ற சித்த மருந்துகளுக்கு அடுத்தாற் போல், தமிழக மக்களுக்கு அதிக பரிட்சயமான ஒன்று இந்த ‘திரிபலை’யும் தான். இன்னும் சொல்லப்போனால் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, பாரம்பரிய மருத்துவத்தை அதிகம் விரும்பும் உலக மக்கள் அனைவருக்கும் இது மிக பரிட்சயமானது. 

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்று மூலிகையும் சேர்ந்த மருந்துகலவை தான் திரிபலை. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகளின் செய்முறைகளில் இந்த திரிபலை சேருகின்றது. காரணம் திரிபலை சிறந்த காயகல்ப மருந்து மட்டுமல்ல, சேரும் மருந்தின் செயல்தன்மையை அதிகரிக்ககூடியது.

காயகல்பம் என்பது என்ன? காயம் என்றால் உடல். கல்பம் என்றால் அழியாமல் காப்பது. அதாவது உடலை அழியாமல் காப்பது என்பது பொருள். எவ்வாறு அழியாமல் காக்கும்? சித்த மருத்துவ தத்துவத்தின் படி வாதம், பித்தம், கபம் இவை மூன்றும் சமநிலையில் இருத்தலே நோய்கள் அணுகாமல் இருக்க வழிவகை. இவை மூன்றில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளே 4448 நோய்நிலைகளுக்கும் காரணம் என்கிறது சித்த மருத்துவம். 

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்

இந்த மூன்று குற்றங்களும் அதிகமானாலும், குறைந்தாலும் நோய்கள் உண்டாகும் என உலகப் பொதுமறையாம் திருக்குறளும் கூறுகின்றது. ‘மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று’ என்ற திருக்குறளால் இதனை அறியலாம். இவை பாதிக்கப்படும் உறுப்புக்களை பொறுத்து குறிகுணங்களையும், நோய்களையும் உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இருப்பினும் ‘வாதமே’ அதில் முதன்மையானது. அதைத்தான் ‘வாதமலாது மேனி கெடாது’ என்கிறது தேரையர் சித்தரின் வாக்கு. ஆக, உடம்பினை அழியாமல் பாதுகாக்கும் காய கல்பமாக, மேலே சொன்ன மூன்று குற்றத்தையும் சீராக வைத்துக்கொள்ள சித்த மருத்துவம் எய்தும் ஒற்றை அம்பு தான் இந்த ‘திரிபலை’.

வாயில்பட்ட உடனே ஈறுகளை கூசச்செய்யும் துவர்ப்பு சுவையும், தொண்டையை கடக்கும் போது அதற்கே உண்டான தனி இனிப்பு சுவையும் கொண்டது திரிபலை. திரிபலையில் உள்ள நெல்லிக்காய் நம் உடலில் பித்தத்தையும், கடுக்காய் உடலில் கபத்தையும், தான்றிக்காய் வாதக் குற்றத்தையும் தன்னிலைப்படுத்தும். இதனை அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம். 'நெல்லிக்காய்க்கு பித்தம் நீங்கும் அதன் புளிப்பால்' என்ற பாடல் வரிகள் இதற்கு உதாரணம்.  

திரிபலையில் உள்ள முக்கிய மூலிகையான நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பலருக்கும் தெரியும். அதிகளவு பிளவனாய்டு எனும் வேதிப்பொருள்களை இந்த ‘திரிபலை’ கொண்டுள்ளது. முக்கியமாக இதன் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ தன்மை தான். நரை, திரை,மூப்பு இவற்றை தடுத்து இறக்கும் (சாகும்) நிலையை தள்ளிப்போடுவது. அதாவது வயது மூப்படைந்து கிழவனாவதை தள்ளிப் போடும். அதனால் தான் காய கல்ப மருந்து என்று கருதப்படுகிறது.  

திரிபலைப் பொடி

திரிபலையில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் இதன் பல்வேறு சிறந்த மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றன. திரிபலையில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி எனும் அஸ்கார்பிக் அமிலம், எலாஜிக் அமிலம், கேலிக் அமிலம், அத்துடன் செபுலினிக் அமிலம் மற்றும் பல வகை ஃபிளாவனாய்டுகள் அதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைக்கு உறுதுணையாக உள்ளன. 

மேலும் கடுக்காயில் உள்ள முக்கிய வேதிப்பொருள் பீட்டா சிட்டோஸ்டீரால் என்ற வேதிப்பொருள் நம் உணவில் உள்ள கொலெஸ்டீரால் குடலில் உட்கிரகித்தலை தடுத்து ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது.  

திரிபலையில் உள்ள மிக முக்கிய வேதிப்பொருள்களில் ஒன்று காலிக் அமிலம். இது ரத்த குழாயில் கொழுப்பு படிவதை தடுத்து ரத்த குழாயை பாதுகாக்கும் தன்மையும், இருதயத்தை பாதுகாக்கும் தன்மையும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், உடலில் உள்ள ஒட்டுமொத்த செல்களை பாதுகாக்கும் தன்மையும், அதி முக்கியமாக புற்று நோய்க்கு காரணமாகும் மரபணு மாற்றம் ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் உடையது. மேலும் இது இருதயத்தை பலப்படுத்துவதாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு சிறப்பு மிக்க திரிபலையை வாத, பித்த, கபத்தை சமப்படுத்த எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு வழிமுறையும் உள்ளது. வாதத்தை சமப்படுத்த திரிபலையை வெந்நீர் அல்லது இந்துப்புடன் கலந்து இரவு வேளைகளில் எடுக்கலாம். இது குடலை சுத்தம் செய்து மலமிளக்கியாக செயல்பட்டு வாதத்தை தணிக்கும். அதே போல பித்தத்தை சமப்படுத்த திரிபலையை நெய்யுடன் கலந்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்ள நற்பலனை தரும். கபம் சார்ந்த நோய்களுக்கு தேனில் கலந்து எடுத்துக்கொள்ள பலனைக் கொடுக்கும். இன்னும் நோய்களுக்கு ஏற்றாற் போல் திரிபலையுடன் அனுபானத்தை மாற்றி பயன்படுத்தலாம். 

இவ்வாறு ஒரே மருந்தை பல்வேறு நோய் நிலைகளுக்கு கையாள்வது சித்த மருத்துவத்தின் தனி சிறப்பு. இதனை ‘அனுபானத்தால் அவிழ்தம் பலிக்கும்’ என்கிறது சித்த மருத்துவம்.

நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் திரிபலை ஒரு எளிமையான மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படலாம் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. 

இத்தகைய சிறப்பு மிக்க திரிபலையின் மருத்துவ பயன்கள் ஏராளம். தினசரி ஒரு தேக்கரண்டி அளவு சித்த மருந்தாகிய திரிபலை சூரணத்தை நோய்க்கு தகுந்தாற் போல், அனுபானத்துடன் எடுத்துக்கொள்ள நோய்கள் நீங்குவதுடன் உடலுக்கு ஆரோக்கியம் தரும். உடலை அழியாமல் காக்கும் சிறந்த காயகல்ப மருந்து திரிபலை. 

(தொடரும்)

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com