சுகம் தரும் சித்த மருத்துவம்: ஒவ்வாமை, கடி நஞ்சினை நீக்குமா நாகவல்லி…?

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஒவ்வாமை, கடி நஞ்சினை நீக்குமா நாகவல்லி…?

விருந்து, மருந்து இவை இரண்டிலும் ஒரே பொருள்களை பயன்படுத்த நம் சித்த மருத்துவத்தால் மட்டுமே முடியும்.  இதனால்தான் ‘உணவே மருந்து’என்கிறது சித்த மருத்துவம்.

வாழை இலை எனும் மருத்துவ குணமுள்ள மூலிகையில் தொடங்கும் விருந்து, நாகவல்லி எனும் மருத்துவ குணமுள்ள மூலிகையில் முடிவது பலருக்கும் தெரிந்ததுதான். விருந்து, மருந்து இவை இரண்டிலும் ஒரே பொருள்களை பயன்படுத்த நம் சித்த மருத்துவத்தால் மட்டுமே முடியும்.  இதனால்தான் ‘உணவே மருந்து’என்கிறது சித்த மருத்துவம்.

இவ்வாறு தமிழர்களின் பாரம்பரியத்தோடும், வாழ்வியலோடும் ஒன்றிணைந்தது நம் சித்த மருத்துவம். 

அந்தவகையில், தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த மூலிகைகளுள் ஒன்று ‘நாகவல்லி’. பார்ப்பதற்கு படமெடுத்து நிற்கும் நாகத்தை (பாம்பினை)போன்று தோற்றமளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.

மேலும், நாகம் முதலான விஷக்கடிகளுக்கு பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருவதால் நாகவல்லி என்ற பெயர் பெற்றதாகவும் தெரிகிறது. ‘தாம்பூலவல்லி’ என்று இதற்கு மற்றொரு பெயரும் உண்டு. தாம்பூலம் தரிப்பதற்கு பாக்குடன் சேர்த்து பயன்படுத்தப்படும் மூலிகையும் இது. வேறு என்ன மூலிகையாக இருக்கமுடியும் ‘வெற்றிலை’தான்.

‘டாக்டர் ஏதோ கடிச்ச மாதிரி இருக்கு, உடம்பு முழுவதும் தடிப்பு தடிப்பா மாறுது, பூச்சி கடிச்சி ஒருவாரம் மேல ஆகிடுச்சு, என்ன என்னமோ வைத்தியம் பண்ணிபாத்தும், இருப்பினும் எந்த பலனும் இல்லை’என்று ஒவ்வாமை, கடி நஞ்சுக்கு மாற்று மருத்துவம் தேடுபவர்கள் ஏராளம். 

வெற்றிலை

‘டாக்டர்கிட்ட போனேன், அவர்கொடுக்கும் மாத்திரையை போடும்போது, அப்போதைக்கு நல்லா இருக்கு, ஆனால், திரும்ப திரும்ப வருகிறது’என்று தீர்க்க முடியாத நோயாக இதை எண்ணி வருந்துபவர்கள் அணுக வேண்டியது இந்த எளிய வெற்றிலைஎனும் சித்த மருத்துவ மூலிகையைத் தான்.

வெற்றிலை, பல்வேறு நாடுகளின்பாரம்பரிய மருத்துவமுறைகளில், பல்லாண்டு காலமாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. காரச்சுவையும், வாயில் பட்டவுடனே விறுவிறுப்புத்தன்மையும், தனிமணமும் கொண்ட வெற்றிலை பல்வேறு மருத்துவ குணங்களை உடையது. 

குழந்தைகளின் மார்புசளிக்கு வெற்றிலையை எண்ணையில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பில் இடுவது தென் தமிழகத்தில் இன்றளவும் உள்ள வழக்கம். இருப்பினும், வெற்றிலையை மருந்தாக உள்கொள்ள அதன் நுனி நரம்பு, நடு நரம்பு, காம்பு இவற்றை நீக்கி பயன்படுத்தல் சிறந்தது என்கிறது சித்த மருத்துவம்.

பல நாடுகளில் வெற்றிலையை மெல்லும் பழக்க வழக்கம் உள்ளது. அதனாலே இதற்க்கு ‘மெல்லிலை’ என்ற பெயரும் தமிழில் உண்டு. இவ்வாறு வெற்றிலையை மெல்லுவது வாய் துர்நாற்றத்தைத் போக்கவும், ஈறுகளை வலுப்படுத்தவும், பற்களைப் பாதுகாக்கவும், செரிமான உறுப்புகளைத் தூண்டவும் போன்ற எண்ணற்ற நன்மைகளை பயக்கும் வண்ணம் உள்ளது. 

பாரம்பரிய மருத்துவ முறைகளில்,வெற்றிலையை தாய்லாந்தில் வாய் கொப்பளிப்பதற்கும், மலேசியாவில் பல் பிரச்னைகள், தலைவலி மற்றும் மூட்டுவலிக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் வெற்றிலைச்சாறு, தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்ப யன்படுகிறது. 

மேலும், பல நாடுகளில் வேகவைத்த வெற்றிலைகளை இருமல் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

வெற்றிலையில் மருத்துவ குணம் வாய்ந்த அல்கலாய்டுகள், கிளைகோ சைடுகள், டானின்கள், பினோலிக்கலவைகள், ஃபிளாவனாய்டுகள், டெர்பீன்கள் போன்ற பல்வேறு வகையான தாவர வேதிப்பொருள்களை உள்ளடக்கியதாக உள்ளது. 

வெற்றிலையின் இலைகளில் இருந்து நறுமணம் வருவதற்கு காரணம் அதில் உள்ள நறுமண எண்ணெயில் அதிக அளவு டெர்பீன்கள் மற்றும் பீனால்கள் இருப்பதால் தான். வெற்றிலைக்கொடியில் உள்ள சாவிகால், ஹைட்ராக்ஸி சாவிகால், யூஜெனால், மெதில்யூஜெனோல், ஹைட்ராக்ஸிகேட்டகால் ஆகிய பல முக்கிய வேதிப்பொருள்கள் மருத்துவ தன்மைக்கு ஆதாரமாக உள்ளது.

வெற்றிலைக்கு வயிற்றில் துள்ளி குதிக்கும் பூச்சிகளை கொல்லும் தன்மையும், மேலும், பசியைத் தூண்டுவதாகவும், ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டுதல், மாதவிடாயைத் தூண்டுதல், மலமிளக்கியாக, ஈறுகளை வலுப்படுத்துதல், நரம்புகளை வலுப்படுத்துவது, வெப்பம் உண்டாக்கியாக செயல்படுவது ஆகிய எண்ணற்ற மருத்துவ செய்கைகள் உள்ளன.

'பத்துமிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்பது பழமொழி. அத்தகைய சிறப்புமிக்க மிளகினை, வெற்றிலையுடன் சேர்த்து கஷாயம் எனும் குடிநீராக்கி எடுத்துக்கொள்ள ஒவ்வாமை, பூச்சி கடியினால் ஏற்படும் நஞ்சு இவற்றை நீக்கி இயல்பான நிலைக்கு மாற்றும். இதனை 'மெய்யின் கடியின் குணம்போகும் கார வெற்றிலைக்கு' என்ற அகத்தியர் குணவாகடப் பாடலால்அறியலாம்.

வெற்றிலையில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் ஒவ்வாமையை உருவாக்கும் ஹிஸ்டமின் மற்றும் இம்முனோகுளோபுலின்-இபோன்ற வேதிப்பொருளை தடுப்பதாகவும், ஒவ்வாமை எதிர்வினையால் தூண்டப்படும் இன்டெர்லூக்கின்-8 எனும் ஒவ்வாமையைத் தூண்டும் சுரப்பைத் தடுப்பதாகவும் இன்றைய நவீன ஆய்வு முடிவுகள் கூறுகின்றது. மிளகில் உள்ள பைப்பரின் என்ற வேதிப்பொருளும் இதேபோல் ஒவ்வாமைக்கு காரணமான வேதிவினையைத் தடுத்து கடி நஞ்சினை நீக்கும் தன்மையுடையது.

மேலும், வெற்றிலைக்கு கட்டிகளை கரைக்கும் தன்மையும், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் புற்றுநோயைத் தடுக்கும் தன்மையும், மனஅழுத்தத்தை போக்கும் தன்மையும், வீக்கமுருக்கி தன்மையும், வலி நிவாரணியாகவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையும், கல்லீரல் மற்றும் இருதயம் ஆகிய உறுப்புகளை பாதுகாக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும், ஆஸ்துமா எனும் இரைப்பு நோயினைத் தடுப்பதாகவும் உடையது இதன் சிறப்பு. 

உண்ட மயக்கம் தீர வெற்றிலையை மெல்லுவது வெறும் சீரணத்துக்காக மட்டுமல்ல, அதிகரிக்கும் சர்க்கரை அளவை குறைக்கவும் தான் என்பது இதில் அறிய வருகின்றது.  

வேதகாலத்தில் ‘சப்தசிரா’ என்ற பெயருடன் வலம்வந்த வெற்றிலை, காமசூத்திரத்தில் பாலுணர்வைத் தூண்டும் பண்புகளைக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழை இலை விருந்து உண்ண புதுமணத் தம்பதியினரை அழைத்து, இறுதியில் வெற்றிலையை கொடுப்பது ஆண்களின் இச்சையை தூண்டி இயல்பான கருத்தரிப்பை உண்டாக்கத்தான். இவ்வாறு தமிழர்களின் கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் சித்த மருத்துவம் ஒளிந்திருந்து. ஆரோக்கியத்தை பெருக்கி, இயற்கையான வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறது.

‘இந்தியாவின் பச்சை தங்கம்’ என்று வருணிக்கப்படும் வெற்றிலை பல்வேறு தரப்பில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது.  வெற்றிலை விருந்தை அலங்கரிக்கும் உணவுப்பொருளாக மட்டுமல்லாமல், மருந்துப்பொருளாகவும் உள்ளது. வெற்றிலை பயன்படுத்தப்படுவது ‘உணவே மருந்து’என்பதற்கு சிறந்த உதாரணம். சித்த மருத்துவம் நம் பாரம்பரியத்தின் அடையாளம் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

மருத்துவரின் தொடர்புக்கு... இமெயில்– drthillai.mdsiddha@gmail.com மற்றும் +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com