நடைபாதைகளில் குத்திக் கிழிக்கும் அறிவிப்புத் தகடுகள்!

பொது இடங்களில், சாலையோரங்களில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகைகள் யாவும் மக்களை வழிநடத்தவும் உதவி செய்யவுமே. ஆனால், அப்படியா இருக்கின்றன?
நடக்க இடமில்லை, கிழிக்கத் தகடு உண்டு!
நடக்க இடமில்லை, கிழிக்கத் தகடு உண்டு!

பொது இடங்களில், சாலையோரங்களில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகைகள் யாவும் மக்களை வழிநடத்தவும் உதவி செய்யவுமே.

இத்தகைய அறிவிப்புப் பலகைகள் பெரும்பாலும் ஆள் உயரத்துக்கு - குறைந்தபட்சம் 6 அல்லது 7 அடி - மேற்பட்டதாகவே இருக்கும்.

இவற்றில் அறிவிப்பு எழுதப்பட்டுள்ள பகுதியும் பெரும்பாலும் வட்டமாகவே இருக்கும். ஏதேனும் இடித்துக்கொள்ள நேரிட்டாலும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படாது.

முற்றிலும் புதுமையாக, ஏதோ தோட்டங்களில், மலர்க் கூட்டத்துக்கு நடுவே வைக்கப்படுவதைப்போல, சென்னையில் மக்கள் நடந்துசெல்லும் தடத்தின் மீதே வைக்கப்பட்டிருக்கின்றன, படத்திலுள்ளதைப் போன்ற அறிவிப்புத் (ஆபத்து) தகடுகள்.

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது முதன்மைச் சாலையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கும் இரும்புத் தகட்டாலான இந்தப் பலகைகள் அத்தனையும் ஐந்தடி உயரம்கூட இல்லை. இவையெல்லாம் பாதையோரத்திலும் இல்லை. பாதைக்கு நடுவிலேயே நடப்பட்டுள்ளன.

ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் இந்தச் சாலையோரங்களில்தான் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் அலுவலகங்களுக்கும் பணியிடங்களுக்கும் நடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். 

மேடும் பள்ளமுமாகக் கிடக்கும் இந்த நடைபாதையில் ஒவ்வொரு நாளும் யாரேனும் ஒருவர் இரும்பினாலான இந்தச் சதுர வடிவத் தகட்டில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். கூர்மையான மூலைப் பகுதி மோதிக் கொள்பவர்களைப் பதம் பார்த்துவிடுகிறது. சட்டையைக் கிழித்துக் கொள்வது, முகத்தில் கீறிக் கொள்வது, பெண்களின் துணிகள் சிக்கிக் கொண்டு கிழிவது என இந்தப் பலகைகள் வைத்த நாளிலிருந்து கடந்த சில வாரங்களாக மக்கள் சொல்லொணா தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் கடந்துசெல்லும் ஒவ்வொருவரும் முணுமுணுத்துச் செல்கின்றனர்.

பாதையை மறித்து வைக்கப்பட்டுள்ள இந்தப் பலகைகளால் பார்வைத் திறனற்ற மாற்றுத் திறனாளிகளின் நிலைமைதான் படுமோசம். வெள்ளைக் குச்சியை மட்டுமே வைத்துத் தரையைத் தட்டி வழியை உறுதி செய்துகொள்வோருக்கு இப்படியொரு விபரீதம் காத்திருப்பதை உணர முடிவதில்லை. பெரும்பாலும் இடித்துக் கொள்கிறார்கள். சில நேரங்களில் இந்தப் பகுதிகளைக் கடப்பவர்கள் எச்சரித்துத் தப்பிக்கச் செய்கிறார்கள்.

இந்த அறிவிப்புத் தகடுகளில் சிட்கோ மற்றும் சிஏஏஐஐயுசி ஆகியவற்றின் இலச்சினைகள்  குறிக்கப்பட்டுள்ளன.

மக்களைப் பெரிதும் துன்புறுத்தும் இத்தகைய அறிவிப்புத் தகடுகள் இரண்டாம் முதன்மைச் சாலையில் பல இடங்களில்  இருக்கின்றன.  இதே பாணியில் இன்னும் வேறு எங்கெங்கெல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

நடக்கும் பாதைகளில் இத்தகைய அபாயகரமான அறிவிப்புத் தகடுகளை வைக்காமல் உடனடியாக அகற்றி, மக்கள் மோதிக் கொள்ளாத அளவில் உயரமாகவும் ஓரமாகவும் வைக்க வேண்டும் என்கிறார்கள் இந்தச் சாலைகளில் நடந்துசெல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கும்  மக்கள்.

இவ்வாறு மக்கள் புழங்கும் பகுதிகளில் வைக்கப்படும் அறிவிப்புப் பலகைகள் அல்லது தகடுகள் எந்த அளவில், எவ்வளவு உயரத்தில், எத்தகைய வடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை வரையறை செய்து வழிகாட்டி நெறிகளை உள்ளாட்சி அமைப்புகள் அறிவிப்பதுடன் அனுமதியும் பெற வேண்டும் என்றாக்கினால் ஒழுங்காக அமையும் வாய்ப்புகள் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com