ராஜராஜசோழன் நினைவிடம்: தொடரும் புதிர்!

தமிழர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் நினைவிடம் எங்கு இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே தொடர்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூரிலுள்ள தோட்டத்தில் ராஜராஜசோழன் நினைவிடமாக வழிபடப்படும் சிவலிங்கம்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூரிலுள்ள தோட்டத்தில் ராஜராஜசோழன் நினைவிடமாக வழிபடப்படும் சிவலிங்கம்.

தஞ்சாவூர்: தமிழர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் ராஜராஜசோழனின் நினைவிடம் எங்கு இருக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே தொடர்கிறது.

கி.பி. 985 முதல் 1014 ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசை ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழன் கடல் கடந்து சென்று இலங்கை, லட்சத்தீவு, மாலத்தீவு என பல நாடுகளை வென்று தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்துத் துறைகளும் சிறந்து விளங்கின.

மிகப்பெரும் பேரரசை கட்டியமைத்த ராஜராஜ சோழனின் நினைவிடம் எங்கிருக்கிறது என்கிற புதிர் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இவரது நினைவிடம் கும்பகோணத்துக்கு தெற்கே 6 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றூரான உடையாளூரில் இருப்பதாக ஆய்வாளர்களிடையே வலுவான கருத்து நிலவுகிறது.

உடையாளூரில் உள்ள கைலாசநாதர் கோயிலின் முகப்புத் தோற்றம்.
உடையாளூரில் உள்ள கைலாசநாதர் கோயிலின் முகப்புத் தோற்றம்.

இதற்கு சான்றாக பால்குளத்து அம்மன் கோயில் தூணில் உள்ள கல்வெட்டு தகவல் ஆதாரமாகக் குறிப்பிடப்படுகிறது. மொத்தம் 17 வரிகள் கொண்ட இக்கல்வெட்டில், "ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு நாற்பத்திரண்டாவது ஸ்ரீ சிவபாதசேகர மங்கலத்து எழுந்தருளி நின்ற ஸ்ரீராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகர தேவர் திருமாளிகை முன்பில் பெரிய திருமண்டப முன்பில் எடுப்பு ஜீநித்தமையில் இம்மண்டபம் எடுப்பித்தார்" என்ற வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன் மூலம், உடையாளூரில் சிவபாதசேகர திருமாளிகை மண்டபம் இருந்துள்ளது என்றும், பழுதடைந்த நிலையில் இருந்த அந்த மண்டபத்தை முதலாம் குலோத்துங்க சோழன் செப்பனிட்டுள்ளார் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், கால வெள்ளத்தில் மறைந்துவிட்ட அந்த மண்டபம் எங்கிருந்தது என்ற கேள்வி வரலாற்று ஆய்வாளர்களிடையே தொடர்கிறது.

இக்கல்வெட்டு ஏற்கெனவே உடையாளூரிலுள்ள பெருமாள் கோயிலில் இருந்ததாகவும், பின்னாளில் பால் குளத்து அம்மன் கோயில் திருப்பணியின்போது மண்டபத் தூணாக நிறுவப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, இக்கல்வெட்டு வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளதால், ராஜராஜசோழனின் பள்ளிப்படை கோயில் எங்கிருந்தது என்பதில் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இதனிடையே, இக்கல்வெட்டு சான்றுகள் அடிப்படையில் உடையாளூரில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் ராஜராஜசோழனின் பள்ளிப்படை கோயில் என்கிற வாதத்தை சில ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ்ச் சங்கத் தலைவரும், கல்வெட்டு அறிஞரும், வரலாற்று ஆய்வாளருமான கோ. தெய்வநாயகம் தெரிவித்தது:
கைலாச உடையார் கோயில் என்பதுதான் இக்கோயிலின் பெயராக இருந்தது. ராஜராஜ சோழ உடையார் எழுந்தருளிய ஊர் என்பதே, காலப்போக்கில் உடையாளூர் என மருவியுள்ளது. இப்போது, இக்கோயில் கைலாசநாதர் கோயில் என அழைக்கப்படுகிறது. இக்கோயில் ராஜேந்திர சோழன் காலத்துக் கலைபாணி. எனவே, இக்கோயிலை மாமன்னன் ராஜேந்திரன் சோழன்தான் கட்டியிருக்க வேண்டும்.

இக்கோயிலில் அம்மன் சன்னதி, மணி மண்டபம், கொடி மரம் போன்றவை கிடையாது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது. பள்ளிப்படைக் கோயிலாக இருந்தால்தான் இதுபோல கட்டப்படுவது அக்கால மரபு. சோழ மரபில் சிவ தீட்சை பெற்ற ராஜயோகிகளை அமர்ந்த நிலையில் புதைப்பதே வழக்கமாக இருந்தது. எனவே, இந்தக் கோயில்தான் ராஜராஜசோழனின் சமாதி உள்ள பள்ளிப்படைக் கோயில் என்கிறார் தெய்வநாயகம்.

இதையும் படிக்க | சோழர் கால அரண்மனை எங்கே?

ஆனால், இக்கல்வெட்டை அடிப்படையாகக் கொண்டு தொல்லியல் துறையினர் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்தனர். "இதில், இக்கல்வெட்டுக்கும் இக்கோயிலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சவன்மாதேவி பள்ளிப்படைக் கோயில் குறித்த தகவல் கிடைக்கிறது. ஆனால், ராஜராஜசோழன் பள்ளிப்படைக் கோயில் குறித்த தகவல் கிடைக்கவில்லை. பால்குளத்து அம்மன் கோயில் கல்வெட்டிலும் திருமண்டபம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்து ராஜராஜசோழனின் பள்ளிப்படைக் கோயில் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. சரியான ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை" என்கின்றனர் தொல்லியல் துறையினர்.

இதனிடையே, உடையாளூரில் வாழைத்தோப்புக் கிடையே சாய்ந்த நிலையில் இருந்த சிவலிங்கத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று ஆய்வாளரான மறைந்த குடந்தை சேதுராமன் கண்டறிந்து, இதுதான் ராஜராஜசோழனின் நினைவிடம் எனக் குறிப்பிட்டார். தற்போது, இச்சிவலிங்கச் சிலை நிமிர்த்தி வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சதய விழாவின்போது இந்த இடத்தில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்த இடம் குறித்தும் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே, சில ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையினர் நவீன ஸ்கேன் கருவிகளைக் கொண்டு வந்து ஆய்வு செய்தனர். ஆனால், அது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை.

தஞ்சாவூரில் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாமன்னன் ராஜராஜசோழனின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது, உடையாளூரில் ராஜராஜசோழனின் நினைவிடம் கட்டுவதற்கான முயற்சியை அப்போதைய அரசு தொடங்கியது. ஆனால், ஆய்வாளர்களிடையே இரு வேறு கருத்துகள் எழுந்து, சர்ச்சைக்குள்ளானதால் அம்முயற்சியும் கைவிடப்பட்டது.

தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த பிறகு, ராஜராஜசோழன் சமாதி குறித்த கேள்வி பரவலாக எழுந்துள்ளது. உடையாளூரில் கைலாசநாதர் கோயிலையும், சிவலிங்கம் உள்ள இடத்தையும் தேடி ஏராளமான வரலாற்று ஆர்வலர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

எனவே, உடையாளூரில் குறைந்தது 5 அடி ஆழத்தில் அகழாய்வு செய்தால், அங்கு ராஜராஜசோழனின் பள்ளிப்படை கோயில் இருந்ததா? - இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியும். அல்லது வேறு சான்றுகளாவது கிடைக்கும் என்பதால், அதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வரலாற்று ஆர்வலர்களிடையே மேலோங்கியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com