இவர்கள் 4 பேரும் எங்கே செல்வார்கள்?

இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், விடுதலை செய்யப்பட்ட பிறகு, இந்த நால்வரும் எங்கே செல்வார்கள்? என்பதுவே.
விடுதலைக்குப் பின் நான்கு பேரும் எங்கே செல்வார்கள்?
விடுதலைக்குப் பின் நான்கு பேரும் எங்கே செல்வார்கள்?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகிய ஆறு பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

இவர்களில் முருகன் என்கிற ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையின்போது அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனை நிரூபிக்க அவர்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கவில்லை. 

இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், விடுதலை செய்யப்பட்ட பிறகு, இந்த நால்வரும் எங்கே செல்வார்கள்? என்பதுவே.

இவர்களில், இந்திய குடிமகள் நளினியை திருமணம் செய்து கொண்ட முருகன், இந்தியாவில் தங்கியிருக்க உரிமை பெறலாம். ஏன் என்றால், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955ன் பிரிவு 5(1)(சி)-ன்படி, இந்தியக் குடிமகனை/மகளை திருமணம் செய்யும் நபர், இந்தியக் குடியுரிமை கோரலாம் என்கிறது. ஆனால் இதுவும் சந்தேகம்தான். ஏனென்றால், நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் உரிமை கோர இயலாது.

மற்ற மூன்று பேரைப் போலவே, ஸ்ரீஹரன் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து, தங்கியிருந்தார். எனவே, இவர்கள் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டால் எங்குச் செல்வார்கள்? எங்கே செல்ல வாய்ப்பு இருக்கிறது? என்பது குறித்து ஆராய்ந்ததில் கிடைத்த சில தகவல்கள்..

நான்கு பேரும் சிறையில் இருந்து வெளியே வந்ததும், இந்திய குடிமக்களில் யாரேனும் ஒருவர், இவர்களுக்காக உறுதிப்பத்திரம் வழங்கி, இலங்கை அகதிகள் முகாம் இருக்கும் மாவட்டத்தின் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு விண்ணப்பம் அளித்து, இவர்கள் அனுமதி அளிக்கும்பட்சத்தில், நால்வரையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், இவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பதில், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட இதர விவகாரங்களைக் கருத்தில் கொண்டுதான் மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் அனுமதி அளிக்க முடியும்.

சாந்தன்
சாந்தன்

இரண்டாவது, சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்ததுமே, அவர்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, உடனடியாக இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படலாம். உரிய ஆவணங்கள் இன்றி, இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, இலங்கை முகாம்களில் தங்கியருக்கும் இதர குடிமக்களுடன் ஸ்ரீஹரன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் தங்கவைக்கப்படலாம்.

மூன்றாவது, இலங்கை அரசு, இவர்கள் நான்கு பேரும், தங்கள் நாட்டு குடிமக்கள் என்பதற்கான விவரங்கள் மற்றும் ஆவணங்களை அளித்து, முறைப்படி அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துமாறு கோரிக்கை விடுக்கலாம். அவ்வாறு கோரிக்கை விடுத்தால், நால்வரின் சம்மதம் பெற்று நால்வரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம். ஆனால், இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வாழும் மக்களே அகதிகளாக இந்தியாவுக்கு வரும் நிலையில், இவர்கள் நால்வரும் இலங்கைச் செல்ல விரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான்.

நான்காவதாக, இவர்கள் இந்தியா அல்லது இன்னபிற நாடுகளுக்கு தஞ்சம் கோரி கடிதம் அனுப்பலாம். இந்தியா அல்லது வேறு எந்த நாடு இவர்களை தஞ்சமடைய அனுமதிக்கிறதோ, அந்த நாட்டுக்கு இவர்கள் நால்வரும் முறைப்படி அனுப்பி வைக்கப்படலாம்.

அல்லது, இவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள், எங்கேச் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்திருப்பது குறித்து தமிழக அரசு கவனத்தில் எடுத்து, சட்டத்திட்டங்களுக்கு உள்பட்டு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

விடுதலை.. விடுதலை..

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

அவா்களின் தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய நளினி, ரவிச்சந்திரன் மட்டுமின்றி சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோரும் விடுதலை செய்யப்பட உள்ளனா். 

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, இந்த 6 பேரின் விவகாரத்திலும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. 

இது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி. ஆா். கவாய் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் அமா்வு, ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் தீா்மானம் அனைவருக்குமானதுதானே என கேட்டனா்.

அதற்கு தமிழக அரசின் தரப்பின் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘தமிழக அரசின் பரிந்துரையானது பேரறிவாளன் உள்பட ஏழு பேருக்குமானதுதான்’ என்றாா். 

அப்போது, மனுதாரா்கள் தனிமைச் சிறையில் 30 வருடங்கள் இருந்தனரா என நீதிபதி அமா்வு கேட்டது. அதற்கு நளினி வழக்குரைஞா் ஆனந்த செல்வம், ‘இந்த வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடைபெற்றதால், மனுதாரா்கள் அனைவரும் தனிமைச் சிறையில்தான் வைக்கப்பட்டிருந்தனா்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து நிகழாண்டு மே 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு இந்த விவகாரத்திலும் பொருந்தும் என நீதிபதிகள்அமா்வு கூறியது.

6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும்

இது தொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘பிரிவு 302-இன் கீழ் தண்டனைபெற்ற மேல்முறையீட்டு மனுதாரரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநா், மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவா் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த வழக்கில் அனைத்து மனுதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை தீா்மானித்துள்ளது. ஆகவே, ஏ.ஜி. பேரறிவாளனை விடுதலை செய்த போது, இந்த நீதிமன்றத்தின் முக்கியமான காரணிகள் தற்போதைய மனுதாரா்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறோம். அனைத்து மேல்முறையீட்டு மனுதாரா்களும் குற்றம் தொடா்பான தங்களது தண்டனையை அனுபவித்திருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே, வேறு எந்த வழக்கிலும் தேவைப்படாவிட்டால் அவா்கள் (6 பேரும்) விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்’என்று தெரிவித்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com