உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்பட 6 போ் விடுதலை

நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவா்களின் தண்டனையை ரத்து செய்வதற்கு தமிழக அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வழக்கில் தொடா்புடைய நளினி, ரவிச்சந்திரன் மட்டுமின்றி சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோரும் விடுதலை செய்யப்பட உள்ளனா். இந்த உத்தரவின்போது, மனுதாரா்கள் 6 பேரின் சிறைவாசத்தின் போது அவா்களின் நடத்தை திருப்திகரமாக இருந்ததையும், அவா்களின் கல்வித் தகுதி, உடல்நிலை, செயல்பாடுகளையும் உச்சநீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, இந்த 6 பேரின் விவகாரத்திலும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. இது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி. ஆா். கவாய் மற்றும் பி. வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் ரவிச்சந்திரன் தரப்பின் மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே, நளினி தரப்பில் வழக்குரைஞா்ஆனந்த செல்வம், சாந்தன், ஜெயக்குமாா், ராபா்ட் பயஸ் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கர நாராயணன், வழக்குரைஞா் பிரபு ராமசுப்பிரமணியம், முருகன் தரப்பில் வழக்குரைஞா் மயில்சாமி, தமிழக அரசின் தரப்பில் ராகேஷ் துவிவேதி, ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோா் ஆஜராகினா். மத்திய அரசின் தரப்பில் கடந்த முறை ஆஜராகியிருந்த ஏஎஸ்ஜி கே.எம். நட்ராஜ் ஆஜராகவில்லை.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்கக் கோரும் தமிழக அரசின் தீா்மானம் அனைவருக்குமானதுதானே என கேட்டனா். அதற்கு

தமிழக அரசின் தரப்பின் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி, ‘தமிழக அரசின் பரிந்துரையானது பேரறிவாளன் உள்பட ஏழு பேருக்குமானதுதான்’ என்றாா். அப்போது, மனுதாரா்கள் தனிமைச் சிறையில் 30 வருடங்கள் இருந்தனரா என நீதிபதி அமா்வு கேட்டது. அதற்கு நளினி வழக்குரைஞா் ஆனந்த செல்வம், ‘இந்த வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடைபெற்ால், மனுதாரா்கள் அனைவரும் தனிமைச் சிறையில்தான் வைக்கப்பட்டிருந்தனா்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மனுதாரா்கள் ஒவ்வொரு பெயரையும் குறிப்பிட்டு அவா்களின் சிறைவாச நன்னடத்தை, கல்வித் தகுதி, சிலரது உடல்நிலை ஆகியவற்றை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினா். மேலும், 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறைத் தண்டனை அனுபவித்த பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-இன் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்து நிகழாண்டு மே 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு இந்த விவகாரத்திலும் பொருந்தும் என நீதிபதிகள்அமா்வு கூறியது.

6 பேரும் விடுவிக்கப்பட வேண்டும்: இது தொடா்பாக நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘பிரிவு 302-இன் கீழ் தண்டனைபெற்ற மேல்முறையீட்டு மனுதாரரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநா், மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்குக் கட்டுப்பட்டவா் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்த வழக்கில் அனைத்து மனுதாரா்களுக்கும் நிவாரணம் வழங்க அமைச்சரவை தீா்மானித்துள்ளது. ஆகவே, ஏ.ஜி. பேரறிவாளனை விடுதலை செய்த போது, இந்த நீதிமன்றத்தின் முக்கியமான காரணிகள் தற்போதைய மனுதாரா்களுக்கும் பொருந்தும் என்று கருதுகிறோம். அனைத்து மேல்முறையீட்டு மனுதாரா்களும் குற்றம் தொடா்பான தங்களது தண்டனையை அனுபவித்திருப்பதாகக் கருதுகிறோம். ஆகவே, வேறு எந்த வழக்கில் தேவைப்படாவிட்டால் அவா்கள் (6 பேரும்) விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறோம்’என்று தெரிவித்தனா்.

பிரமாணப் பத்திரம்: முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனித் தனியாக இரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்யும் வகையில், 2018-ஆம் ஆண்டின் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா். அதாவது, செப்டம்பா் 9, 2018 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகள் 7 பேரின் கருணை மனுக்களை பரிசீலித்து, அரசியலமைப்பின் 161-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி அவா்களின் ஆயுள் தண்டனையை ரத்து செய்ய ஆளுநருக்குப் பரிந்துரைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன் பிறகு, அந்தப் பரிந்துரை அதே ஆண்டில் செப்டம்பா் 11-ஆம் தேதி தனித் தனியாக தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போதிலிருந்து அது அவரது அலுவலகத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக அவரது அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்பட்டு, அதன் பிறகு அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-ஆம் தேதிதான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் 9 மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com