ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்துவருகின்றன. 
ஒண்ணுமே புரியல! குஜராத்தில் ஒரேமாதிரி வாக்குறுதிகளை அளித்த கட்சிகள்!

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஆளும் பாஜகவும், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் ஒரே மாதிரியான வாக்குறுதிகளை அளித்துவருகின்றன.  மக்களோ யார் என்ன சொல்கிறார்கள், யார் என்ன செய்வார்கள் என்று குழம்பிப் போயிருக்கிறார்கள்.

182 உறுப்பினா்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான பிரசாரம் நாளை(நவ.29)யுடன் ஓய்கிறது. 

குஜராத்தில் பாஜக ஆட்சி இருந்து வரும் நிலையில் தில்லி, பஞ்சாபைத் தொடர்ந்து குஜராத்தைக் கைப்பற்றும் முனைப்பில் ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது. அதுபோல ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் காங்கிரஸுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் அங்கு பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

குஜராத் தேர்தலையொட்டி மூன்று கட்சிகளும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், இந்த மூன்று கட்சிகளும் ஒரேமாதிரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

உதாரணமாக, குஜராத்தில் பெண் குழந்தைகளுக்கு கே.ஜி. வகுப்பு முதல் முதுநிலைப் படிப்பு வரை இலவசக் கல்வி என பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் ஒரே தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளன. 

அதுபோல, 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியை ஒரு கட்சி அல்ல, இரண்டு கட்சிகள் (காங்கிரஸ், ஆம் ஆத்மி) தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இதே இரண்டு கட்சிகளும், ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு மற்றும் பஞ்சாயத்துச் சட்டம் (PESA), 1996 -ன் அட்டவணை 5-யை செயல்படுத்துவதாகக் கூறியுள்ளன. இதன்படி பழங்குடியின மக்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்வதை இச்சட்டம் ஒழுங்குபடுத்தும். 

ரூ. 10 லட்சம் வரை இலவச மருத்துவம் என்ற வாக்குறுதியை பாஜக, காங்கிரஸ் கட்சிகள் அளித்துள்ளன. 

விவசாயிகளுக்கென அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாக உள்ளன. 

விவசாயப் பொருள்களின் விற்பனைக்கான மண்டிகள், குளிர்பதனக் கிடங்குகளுக்கு 10,000 கோடி, பாசன வலையமைப்புக்கு 25,000 கோடி என பாஜகவும், 

இலவச மின்சாரம், பால் உற்பத்தியாளர்களுக்கு 5 ரூபாய் மானியம், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸும்,

ஒரு பசுவைப்பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ. 40 மற்றும் ரூ. 2 லட்சம் வரை கடன் தள்ளுபடி என ஆம் ஆத்மியும் அறிவித்துள்ளது. 

கல்வியைப் பொருத்தவரை 20,000 பள்ளிகளை சிறந்த பள்ளிகளாக மாற்றுவது, ரூ. 20 லட்சம் வரை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் என மிகப்பெரிய வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில், 300 புதிய ஆங்கில வழிப் பள்ளிகள் மற்றும் ரூ 500 முதல் ரூ. 20,000 வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தரமான கல்வி மற்றும் கூடுதல் பள்ளிகளுக்கு ஆம் ஆத்மியும் உறுதியளித்துள்ளது.

பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில், பெண்களுக்கு இலவசக் கல்வி, இலவச இரு சக்கர வாகனம்/ சைக்கிள், இலவச பேருந்துப் பயணம், ஒரு லட்சம் வேலை என பாஜகவும் பெண்களுக்கு இலவசக் கல்வி, தொழில்முறை படிப்புகளுக்கு இலவச லேப்டாப், 5 லட்சம் வேலைவாய்ப்புகள் என காங்கிரஸும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவி என ஆம் ஆத்மியும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. 

இவ்வாறு மூன்று கட்சிகளும் ஒரேமாதிரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்தது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com