சுகம் தரும் சித்த மருத்துவம்: கப நோய்களுக்கு ‘தாளிசபத்திரி’ பலன் தருமா? 

கோடையும், குளிரும் ஆகிய இரு பருவநிலைகள் மாறி வருவது என்பது இயற்கையின் அற்புதம். இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்றார் போல நம் உடலும் அவ்வப்போது மாற வேண்டியது அவசியம்.
தாளிசாதி
தாளிசாதி

கோடையும், குளிரும் ஆகிய இரு பருவநிலைகள் மாறி வருவது என்பது இயற்கையின் அற்புதம். இந்த பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்றார் போல நம் உடலும் அவ்வப்போது மாற வேண்டியது அவசியம். பூமியின் தட்ப வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப, நம் உடலில் சித்த மருத்துவம் கூறும் ஆதாரங்களான வாத, பித்தம், கபம் இவை மூன்றும் மாறிமாறி நம் உடலை பருவநிலை சார்ந்த நோய்நிலைகளுக்கு ஆட்படுத்தும். வெயிலில் பயணித்துக் கொண்டிருந்த நாம் திடீரென குளிருக்கு பயணிக்கும் போது, நம் உடலில் பித்தம் குறைந்து, கபம் கூடி கபம் சார்ந்த நோய்களை உண்டாக்கும்.

இந்த வாத, பித்தம், கபம் ஆகிய மூன்று குற்றங்களே நோய்களுக்கு முதன்மை காரணமென்கின்றது சித்த மருத்துவ நூல்கள். ‘கபமல்லாது காசம் சுவாசம் காணாது’ என்கிறது தேரையர் சித்தரின் பிணிகளுக்காண முதல் காரணப் பாடல் வரிகள். பருவநிலை மாறும்போது அதாவது வெப்பம் தட்பமாக மாறும்போது, உடலில் அதிகரிக்கும் கபம் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்நிலைகளை உண்டாக்கும். 

அதென்ன கபம்? அதனால் எப்படி நோய்கள் ஏற்படும்? என்று பலருக்கு ஐயப்பாடு தோன்றும். வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபம் கொடிய பல நோய்களை உண்டாக்கக் கூடியது. வாதம், பித்தம், கபம் இவை மூன்றுமே அது சேரும் இடத்தை பொறுத்து நோய்களையும், அதன் குறிகுணங்களையும் மாற்றக்கூடியது. உதாரணமாக நம் உடலில் அதிகரித்த கபமானது ரத்த குழாய்களில் கொழுப்பாக படியும், அதுவே நுரையீரலில் சளியாக கோர்த்து நோய் நிலையை ஏற்படுத்தும் என்கிறது சித்த மருத்துவம். இன்றைய நவீன அறிவியல் கூறும் நோய்க்காரணங்கள் அனைத்தையும் சித்த மருத்துவம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றினுள் அடக்குகிறது என்பது தனிச்சிறப்பு.

அவ்வாறு நுரையீரலில் அதிகரித்த கபமும், அதனால் உண்டாகும் குறிகுணங்களும் நோய்த் தொற்றுக்குக் காரணமாகி நம்மை வதைக்கக் கூடியன. தொண்டையில் சேரும் கபமானது தொண்டைக்கட்டு குரற்கம்மலை உண்டாக்கும். மேல்சுவாசப் பாதையில் சேரும் கபம் மூக்கடைப்பையும் மூக்கு நீர் ஒழுகலையும், கீழ்சுவாசப் பாதையில் சேரும் கபமானது இருமலில் தொடங்கி, நாள்பட்ட நிலையில் ஆஸ்துமா போன்ற நோய்நிலைகளை உண்டாக்கக்கூடியதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. 

சாதாரணமாக சேரும் கபத்தினால் இவ்வளவு கொடிய நோய்நிலைகள் உண்டாகிறதா? என்று பலருக்கும் வியப்பை தரும். உண்மையில் இந்த கபம் தான் இறுதி நிலையில் நம் உயிரை போக்கக்கூடியது. பித்தம் அடங்கி கபம் கூடிவிட்டால் பேசாமல் இந்த உலகத்தை விட்டு போய்விடு என்கிறது சித்த மருத்துவம். 

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கபத்திடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள, நோய்களை தடுத்துக்கொள்ள பல மூலிகைகளை சித்த மருத்துவம் கூறியுள்ளது.

அந்த வகையில் கப  நோய்களுக்கு சிறந்த பயன் தரும் ஒரு சித்த மருத்துவ மூலிகை தான்  ‘தாளிசபத்திரி’.

கார்ப்பு சுவையுள்ள தாளிசபத்திரி மூலிகை சித்த மருத்துவத்தில் சுவாசப்பாதை, நுரையீரல் இவற்றில் பற்றும் கபத்தை போக்கும் அநேக மருந்துகளில் சேருவது குறிப்பிடத்தக்கது. "நாசி களப்பிணிகள் நாள்பட்ட காசம் சுவாசம் அருசி" ஆகிய பிணிகள் இதனால் நீங்கும் என்கிறது சித்த மருத்துவ நூலான அகத்தியர் குணவாகடம். இதன் இலைக்கும், பட்டைக்கும் மருத்துவ குணங்கள் உண்டென்றாலும் இலையே சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

தாளிசபத்திரி இலையில் உள்ள ‘பேக்லிடாக்சால்’ எனும் வேதிப்பொருள் பல்வேறு மருத்துவ குணங்களை உடையதாக வெளிநாடுகளில் கண்டறிந்து பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புமிக்க ஒன்று. குறிப்பாக உலகை அச்சுறுத்தும் அரக்க நோயான புற்றுநோய் நிலைகளில் பேக்லிடாக்சால் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பு. 

மேலும், இதில் உள்ள மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு கிளைகோசைடுகள், பைட்டோ-ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள் ஆகியன இதன் சிறப்பான மருத்துவ தன்மைக்குக் காரணமாகின்றன. 

இத்தகைய வேதிப்பொருள்களின் தன்மையால் தாளிசபத்திரி இலை வீக்கங்களை குறைக்கும் தன்மையும், சுரத்தை குறைக்கும் தன்மையும், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் தன்மையும், இருமலை குறைக்கும் தன்மையும், பாக்டீரியாவுக்கு, வைரஸுக்கு எதிராக செயல்படும் கிருமிக்கொல்லி தன்மையும், புற்றுக்கட்டிகளை கரைக்கும் தன்மையும் கொண்டுள்ளது.

தாளிசபத்திரி இலையை முதன்மையாகக் கொண்டு உருவாகும் தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் ஆகிய சித்த மருந்துகள் தொற்றுநோய் காலங்களில் தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான ஒன்று. இயற்கை பருவநிலை மாற்றத்தின்போது ஏற்படும் சுவாசப்பாதை தொற்றுகளைத் தடுக்கவும், கபத்தை அதிகரிக்காமல் தடுத்து நோய்களில் இருந்து காத்துக்கொள்ளவும் இது சிறந்த பயன் தரும்.

அவ்வப்போது இந்த வடகத்தை வாயிலிட்டு சுவைத்து வந்தாலோ அல்லது சூரணத்தை தேனில் கலந்து எடுத்துக்கொண்டால் போதும் சுவாசப்பாதை தொற்றுக்களை தடுக்க முடியும். இதில் சேரும் சுக்கு, மிளகு, சித்தரத்தை போன்ற இன்னும் பல மூலிகைகளும் கபத்தை அறுத்து இருமல், ஆஸ்துமா முதலிய நோய்களை தீர்க்கும்படியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக, பருவ நிலை மாறி நம்மை நோய்வாய்ப்படுத்தும் தருணங்களில், முக்கியமாக பனிக்காலங்களில் சித்த மருத்துவ மூலிகையான தாளிசபத்திரியை தனியாகவோ அல்லது அது சேரும் சித்த மருந்தினையோ பயன்படுத்த கபத்தை உடலில் சேராமல் தடுத்து கபம் சார்ந்த நோய்களிடம் இருந்து உடலைக் காத்து ஆரோக்கியமான வாழ்வு என்ற இலக்கை அடைய முடியும். சித்த மருத்துவம் நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்தது. அதனோடு பயணித்தால் நலம் நம்மை நாடி வரும். நாம் நலம் நாட தேவையில்லை.    

மருத்துவரின் ஆலோனை மற்றும் தொடர்புக்கு.... +91 8056040768; இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com