சுகம் தரும் சித்த மருத்துவம்: வாத நோய்களை பறக்க விடும் ‘சிற்றாமுட்டி’ !

வாத நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் தனி பங்களிப்பு உண்டு. எலும்பும், நரம்பும், மூட்டுகளும், தசைகளும் வாதத்திற்கு அடிப்படையானவை.
சுகம் தரும் சித்த மருத்துவம்: வாத நோய்களை பறக்க விடும் ‘சிற்றாமுட்டி’ !

மென்பொருள் துறையில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்வது என்ற நிலை தற்போது அதிகம் உருவாகிவிட்டது. இதனால் உட்கார்ந்த இடத்திலேயே பணிகளைச் செய்வதன் காரணமாக உடல் எடை கூடுவதால், எழுந்து நடப்பதற்கே அவர்களுக்கு சிரமம் உண்டாகிவிடுகிறது. அப்படியே எழுந்து நடந்தாலும் மூட்டுகளில் வலியும், சிரமமும், ஒருவித வேதனையும் பலருக்கு ஏற்படுகின்றது. 

இது ஒருபுறமிருக்க கணினியும், அலைபேசியும் அதிகம் பயன்படுத்துவதால் பலருக்கு கழுத்தில் வலியும், சிரமமும் ஏற்படுவதாக உள்ளது. அத்தகைய வலியுடனும், சிரமத்துடனும், அன்றாட அலுவலகப் பணிகளை செய்துக்கொண்டு சலிப்புடன் பலர் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு செல்கின்றனர் என்பது தான் உண்மை. 

அத்தகைய மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி ஆகியவைகளுக்கு உடல் பருமனும், வேலைப்பளுவும் காரணமாக இருப்பதால், பலருக்கு இளம் வயதிலே மூட்டுகளில் தேய்மானம் ஏற்பட்டு விடுகின்றது. அத்தகைய தேய்மான நோய்நிலைகளுக்கு சித்த மருத்துவம் கூறும் காரணம் நம் உடலில் அதிகரித்த வாதத்துடன் பித்தமோ, கபமோ சேர்வது தான்.  

‘வாதமலாது மேனிக்கெடாது’ என்கிறது சித்த மருத்துவம். அந்த வகையில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் மாறுபடும் போது அதிகரிக்கும் குற்றத்தைப் பொறுத்து, நோய்களை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இதற்காகவே  நம் உடலில் உள்ள வாதத்தினை சீராக்க, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேதி மருந்து எடுத்துக்கொள்ள சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

வாதத்தைக் குறைத்து, மூட்டுகளில் உள்ள தேய்மானத்தையும் சீர்செய்து, இன்றைய நவீன வாழ்வியலில் இளம் வயதிலேயே ஏற்படும் இத்தகைய நோய்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு சித்த மருத்துவம் பல்வேறு எளிய மூலிகைகளைக் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் மூட்டுகளின் தேய்மானத்தைக் குறைத்து மூட்டுகளை பாதுகாக்கும்படியாக உள்ள எளிய சித்த மருத்துவ மூலிகை ‘குறுந்தொட்டி’ அல்லது ‘சிற்றாமுட்டி’.

துவர்ப்பு சுவையை முதன்மையாகக் கொண்ட செம்பருத்தி பூக்குடும்பத்தை சார்ந்த சிறு செடியினம் தான் சிற்றாமுட்டி. அதன் பெயர்க்காரணத்தை ஆராய்ந்தால் அதன் மருத்துவ தன்மை எளிதில் விளங்கிடும். 

சிற்றாமுட்டி

சிற்றாமுட்டியை சிற்று+ஆம்+முட்டி என பிரிக்கலாம். அதாவது மூட்டுகளில் தங்கிய ஆமத்தை நீக்கும் சிறுசெடி என்று பொருள்படுவதாக உள்ளது. மூட்டுகளில் தங்கும் ‘ஆமம்’ என்பது வீக்கத்தையும், தேய்மானத்தையும் உண்டாக்கும் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகின்றது.

வயிற்றில் சேரும் ஆமமே சுரங்களை உண்டாக்குவதாகவும் சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆகவே தான் வயிற்றின் நலம் பேணுவது அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நோய்களுக்கு மருந்தளிக்கும் முன் பேதி மருந்தினை சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.

மூட்டுகளில் உள்ள ஆமத்தை போக்கும், சிற்றாமுட்டி மூலிகை வலி நிவாரணியாகவும், மூட்டுகளில் வீக்கமுருக்கியாகவும் செயல்படக்கூடியது. மேலும், இது உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், புண்களை ஆற்றுவதாகவும், நரம்பு தேய்மானத்தை தடுப்பதாகவும், நடுக்கு வாதத்தை குறைப்பதாகவும், மூட்டு வாதத்தை போக்குவதாகவும், ஆண்மையைப் பெருக்குவதாகவும் உள்ளது. உடலைத் தேற்றும் செய்கையும் இதற்குண்டு. 

காய்ச்சல், வலிப்பு, கண்நோய்கள், வாத நோய்கள், பெருங்குடல் மற்றும் நரம்பு கோளாறுகள் போன்ற பல வியாதிகளில் இது நல்ல பலன் தருவதாக உள்ளது. புண்கள் மற்றும் மூட்டு வலிகளில் இதன் எண்ணெய் பல்வேறு நாடுகளில் மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றது.  

இதன் தைலத்தை வாத நோய் மற்றும் கீல்வாதம் ஆகியவற்றிற்கு மேற்ப்பூச்சாக பயன்படுத்த நன்மை தரும். இது சிறுநீரைப் பெருக்குவதாகவும், மலத்தை இளக்குவதாகவும் உள்ளது. தசைகளுக்கு வன்மை தரும் மருத்துவ தன்மையும் இதற்குண்டு.

சிற்றாமுட்டி மூலிகையில் பல்வேறு விதமான வேதிப்பொருட்கள் கலந்து அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாகின்றன. எபிடெரின், வாசிசின், ஆகிய அல்கலாய்டுகள், பால்மிடிக் மற்றும் ஸ்டியரிக் அமிலங்கள், பீட்டா சிட்டோஸ்டிரால், சப்போனின்கள், கொழுப்பு அமிலங்கள், பீட்டா பினேன்தைலமின் ஆகியன வேதிப்பொருள்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.    

இதில் உள்ள ‘வாசிசின்’ வகை வேதிப்பொருள்கள் மூச்சுக்குழாய் அழற்சியை போக்குவதால் மூச்சுக்குழாய் விரிவடைய செய்யும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி (ப்ராங்கைட்டிஸ்), காய்ச்சலோடு உள்ள மூட்டு வலி முதலியனவற்றுக்கு சிற்றாமுட்டி வேருடன், இஞ்சி சேர்த்து கசாயமிட்டு கொடுக்க நல்ல பலன் தரும். நரம்பு மண்டலத்தின் நோய்களில் இதன் பயன்பாடு அளப்பரியது. முகவாதம் மற்றும் சியாட்டிக் வலி போன்ற பல்வேறு வாத நோய்களை குணப்படுத்துவதில் திறன் வாய்ந்தது.

இதன் இலைகளில் முக்கியமாக எபிடெரின் மற்றும் சூடோஎபிடெரின் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளது. இந்த வேதிப்பொருள்கள் பல்வேறு மருத்துவ தன்மைக்கு காரணமாக இருப்பினும் சில பக்க விளைவுகளை உடையதால் மேற்கத்திய நாடுகளில் தவிர்க்கப்படுகின்றது. ஆனால் சித்த மருத்துவ முன்னோர்கள் இதனை நாம் பயன்படுத்தும் வண்ணம் மருந்தாக்கி பாதுகாப்பாக நமக்கு அளித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு. 

சித்த மருத்துவத்தில் சிற்றாமுட்டி வேரினை மருத்துவமாக பயன்படுத்துவதற்கான முறைகளைக் கூறியுள்ளது. ‘சிற்றாமுட்டி தைலம்’ என்ற சித்த மருந்து மூட்டு வாத நோய்களை நீக்குவதில் சிறப்பு மிக்கது. வாதத்தை போக்க சித்த மருந்துகளை தயாரிக்கும் போது சிற்றாமுட்டி விறகுகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிற்றாமுட்டி வாதத்தை போக்கும் பல்வேறு குடிநீர்களிலும் சேருவது சிறப்பு.

வாத நோய்கள் என்றாலே சித்த மருத்துவத்தில் தனி பங்களிப்பு உண்டு. எலும்பும், நரம்பும், மூட்டுகளும், தசைகளும் வாதத்திற்கு அடிப்படையானவை. இவற்றில் உண்டாகும் வாத நோய்களை நீக்கும் பல்வேறு வகைப்பட்ட மருந்துகளில் சிற்றாமுட்டி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு வாத நோய்களை பறக்க விடும் சிறப்பு வாய்ந்த மூலிகையை, கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, சியாட்டிக் வலி போன்ற எலும்பு தேய்மான வாத நோய்களில் சிக்குண்டுள்ள மென்பொருள் பணியில் உள்ளவர்களும், மற்றவர்களும்  ஆலோசனைப்படி பயன்படுத்தி பயனடைய வேண்டுதல் அவசியம். சித்த மருத்துவத்தில் நோய்க்கு மட்டும் மருந்தல்ல. நோயின் காரணத்திற்கும் மருந்து என்பது தனிச்சிறப்பு.

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com