சுகம் தரும் சித்த மருத்துவம்: சோரியாசிஸ் படைகளுக்கு பயனளிக்குமா 'சோற்றுக்கற்றாழை'..?

நாம் பரம்பரையாக பழகி வந்த வழக்குமுறைகள் பலவும் இன்று வழக்கொடிந்து போவதும் கூட பல்வேறு நோய்நிலைகளுக்கு ஓர் முக்கிய காரணம்.
சோரியாசிஸ்
சோரியாசிஸ்

காலம் காலமாக பெண்கள் முகத்திற்கு பூச்சாக பயன்படுத்தி வந்த மஞ்சளைக் கூட பயன்படுத்தக்கூடாது என்று சொல்லும் நவீன அறிவியல் உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ‘டாக்டர், மஞ்சள் பூசிக்கொள்ளக்கூடாது, தலையில் எண்ணெய் வைக்கக்கூடாது என்று நான் சிகிச்சைக்கு சென்ற தோல் சிகிச்சை நிபுணர் கூறிவிட்டார்’ என்று பலர் கூறுவது வருத்தமளிக்கக்கூடியது தான். 

நாம் பரம்பரையாக பழகி வந்த வழக்குமுறைகள் பலவும் இன்று வழக்கொடிந்து போவதும் கூட பல்வேறு நோய்நிலைகளுக்கு ஓர் முக்கிய காரணம். ஆனால் நம்ம ஊர் மஞ்சளையும், சந்தனத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள், டப்பாவில் அடைத்து சந்தைப்படுத்துவது என்பது வணிக நோக்கம் தானே. 

மறுபுறம் பார்த்தால், ‘அறிவியல் வளர்ந்துவிட்டது இன்னும் கூட எண்ணெய் குளியலா?’ என்று கேட்பவர்கள் அதற்கும் ஆராய்ச்சி தரவுகள் இருக்கிறதா? என்பதும் பாரம்பரியத்திற்கு சவாலான நிலை தான். “உடல் ரொம்ப உஷ்ணமா இருக்கு, உட்கார்ந்திருந்த இடம் நெருப்பு போல சூடாக இருக்கு’என்று சொன்னதும் முதலில் நல்லெண்ணையில் சீரகம் சேர்த்து காய்ச்சி எண்ணெய் தேய்த்துக் குளித்தால் எல்லாம் சரி ஆகிடும் என்று நாம் பாரம்பரியமாக பாட்டி வைத்தியமாய் பழகி வந்த எண்ணெய் குளியல் கூட, இன்று எதிரியாகி விட்ட அவலநிலை. 

வாதம், பித்தம், கபம் தான் நோய்களுக்கு முக்கிய காரணம் என்கிறது சித்த மருத்துவம். இது உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு உடல் செல்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தோல் என்பது நம் உடலில் பரந்து விரிந்த மிகப்பெரிய உறுப்பு. அதில் வாத, பித்த, கப ஏற்றத்தாழ்வுகள் வரவொட்டாமல் தடுக்க உதவுவது தான் ‘எண்ணெய் குளியல்’ என்கிறது சித்த மருத்துவம். 

அது ஒருபுறமிருக்க, காலம் முழுதும் நீங்காமல் உடல் வேதனையை விட, அதிக மன வேதனையை தந்து பலரை வருந்தச் செய்யும் தோல் நோய் தான் சோரியாசிஸ். வறண்ட தோலும், உறுத்தலும் மட்டுமின்றி படைகள் தோறும் செதில் செதிலாய் உதிரும் தன்மை கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கும் சரும நோய் இது. 

கன்ம வியாதிகள் என்று அகத்திய மாமுனிவரால் கருதப்பட்ட சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகள் தீரும் வாய்ப்பில்லை என்றும், பருவநிலை மாறுபாட்டிற்கும், உணவு முறைக்கும், மன உளைச்சலுக்கும் தகுந்தாற்போல் அவை உடலில் மறைந்திருந்து, அவ்வப்போது தோலில் வெளிவந்து துன்புறுத்தும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது. 

‘டாக்டர் மாதந்தோறும் ஆயிரம் ஆயிரமாக செலவு செய்தும் எனது சோரியாசிஸ் தோல் மாறுவது போல் தெரியவில்லை, மருந்துகள் நாள்பட உட்கொண்டால் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் வருமா?’ என்ற பயமும் உள்ளுக்குள்.  இவ்வாறு பணத்தையும், மனத்தையும் இழந்து சோகத்தில் உள்ளவர்களுக்கு தீர்வு தரும் தமிழ் மருத்துவ மூலிகை தான் ‘கற்றாழை’

சித்த மருத்துவத்தில் குட்ட நோய் என்ற பெயரில் பல்வேறு தோல்நோய்களை பற்றி குறிப்பிட்டு மூலிகைகளும், மருத்துவமும் கூறப்பட்டுள்ளது. அதில் வறட்சியான நிலப்பகுதியில் வளர்ந்து, நீர்ப்பசையை தாங்கி, உடலில் வறண்ட தோல் வியாதிகளையெல்லாம் போக்கும் தன்மையுடைய ஒரு மூலிகை ‘சோற்றுக்கற்றாழை’. 

கசப்பு தன்மையும், குளிர்ச்சி வீரியமும் உள்ள கற்றாழை வாத, பித்த குற்றங்களை தோலில் மட்டுமில்லாது உடலிலும் தன்னிலைப்படுத்தும் தன்மை உடையது. ‘குமரி தைலம்’ என்ற சித்த மருந்தினை இவ்விரு குற்றங்களை சமப்படுத்த எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம்.

இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரீஸ், எகிப்து, மெக்சிகோ, ஜப்பான், சீனா போன்ற பல்வேறு நாடுகளின்  பண்டைய கலாச்சாரங்களில் கற்றாழை மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எகிப்து நாட்டு ராணிகள், பேரழகுக்காக வருணிக்கப்படும் கிளியோபாட்ரா ஆகியோர் கூட தங்கள் சருமத்தைப் பராமரிக்க கற்றாழையை பசையாக்கி பயன்படுத்தினர் என்கிறது வரலாறு. 

கிரேக்கத்தின் வரலாற்று வீரர் அலெக்சாண்டர் ‘தி கிரேட்’, தனது வீரர்களின் காயங்களுக்கு சிகிச்சையளிக்க இதைப் பயன்படுத்தினார் என்கிறது மற்றொரு வரலாற்றுக் குறிப்புகள்.

1800-களில் அமெரிக்காவில், மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க கற்றாழை பயன்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே ‘குமரி எண்ணெய்’ என்ற மருந்தினை மலச்சிக்கலுக்கும், மூல வியாதிக்கும் சித்த மருத்துவம் பரிந்துரை செய்துள்ளது என்பது, உலகிற்கே நம் மருத்துவம் தான் முன்னோடி என்று விளங்க வைக்கிறது. 

சோற்றுக்கற்றாழையில் உள்ள மடலை நீக்கி உள்ளே உள்ள பசை போன்ற பகுதியில் நீர், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், லிப்பிடுகள், ஸ்டீரால்கள், டானின்கள் மற்றும் என்சைம்கள், பீனாலிக் கலவைகள், சபோனின், ஆந்த்ராகுயினோன்களையும் கொண்டுள்ளது. இதில் உள்ள சி-கிளைகோசைடுகள் மற்றும் அலோ-எமோடின், அலோசின், போன்ற ஆந்த்ராகுயினோன்கள் இதன் மருத்துவ குணத்திற்குக் காரணமாக உள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மேலும், வைட்டமின்-பி12, ஃபோலிக் அமிலம், கோலின் போன்றவையும் உள்ளன.

கற்றாழையில் உள்ள வேதி மூலக்கூறுகளால் காயங்களை ஆற்றும் தன்மையும், பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்ப்பதாகவும், மலமிளக்கியாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக, உடலில் கட்டிகளை கரைப்பதாகவும், புற்றுநோயை வரவிடாமல் தடுப்பதாகவும், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் தன்மையும், செரிமானத்தை தூண்டுவதாக, வயிற்றுப்புண்ணை ஆற்றுவதாகவும் உள்ளது. மேலும், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து சிறுநீரகக் கல்லைத் தடுக்கவல்லது. அத்தகைய சிறப்பு மிக்க கற்றாழையை மடல் நீக்கி, சளி போன்ற பிசினை 7 முறை அலசிய பின் பயன்படுத்த வேண்டுமென சித்த மருத்துவம் அறிவுறுத்துகின்றது. 

கற்றாழையில் உள்ள மியூகோபாலிசாக்கரைடுகள் தோலில் ஈரப்பதத்தை உறிஞ்சி சோரியாசிஸ் நோயில் தோல் வறட்சி வராமல் தடுக்கக்கூடியது. அதில் உள்ள சாலிசிலிக் அமிலம் என்ற வேதிப்பொருள் சோரியாசிஸ் நோயில் தோல் அழற்சிக்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிளாண்டின் ஈ-2 உற்பத்தியை தடுத்து அழற்சியை நீக்கி பளப்பான சருமத்தை ஏற்படுத்த உதவுகிறது.  

இன்று சோற்றுக்கற்றாழை இல்லாத சவுக்கார கட்டிகளோ (சோப்பு), முகப்பூச்சிகளோ இல்லை என்றே ஆணித்தரமாக சொல்லலாம். ஆக, இன்றைய நவீன அறிவியல் உலகம் அணுக நினைக்கும் பலவற்றையும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அணுகி அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவது நம் சித்த மருத்துவம். அதனை முறையோடு பயன்படுத்தி வாழ்ந்தால், நலம் தேடும் உலக மக்களுக்கு நாம் முன்னோடியாக திகழ முடியும்.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com