சுகம் தரும் சித்த மருத்துவம்: அல்சர், புற்றுநோயைத் தடுக்குமா சிவத்துருமம்..?

புற்றுநோய் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை கூடதான். ஊருக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனையும், வீதிக்கு பல புற்றுநோயாளிகளும் என்ற இன்றைய நிலைதான் நவீன வாழ்வியல் மாற்றத்திற்கு கிடைத்த பரிசு
சுகம் தரும் சித்த மருத்துவம்: அல்சர், புற்றுநோயைத் தடுக்குமா சிவத்துருமம்..?

அடுக்கடுக்காய் வளர்ந்த அறிவியலால் கூட இன்றளவும் எட்டாக் கனியாக இருப்பது புற்றுநோய்க்கான தீர்வுதான். அறிவியல் வளர்ச்சி எந்த அளவுக்கு அதிகமானதோ, அந்த அளவு புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதுமட்டுமா? புற்றுநோய் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை கூடதான். ஊருக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனையும், வீதிக்கு பல புற்றுநோயாளிகளும் என்ற இன்றைய நிலைதான் நவீன வாழ்வியல் மாற்றத்திற்கு கிடைத்த பரிசு என்றால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த புற்றுநோய் சிகிச்சை மையங்கள் இன்று அதிகமானதற்கு காரணம் நாம் மறந்துபோன பாரம்பரிய உணவு முறையும், பழக்க வழக்கமும், வாழ்வியல் நெறிமுறையும் தான். 

இயற்கையால் ஆன மண்பானை, உலோக பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதை மறந்த நாம், நாகரிக வளர்ச்சி என்று கருதி பிளாஸ்டிக் குடங்களை நாடியதும் கூட அதற்கான காரணமாகிவிட்டன.

அந்த வகையில் தொற்றா நோய்களில் இன்று உலகையே கவலைக்குள்ளாகி அச்சத்தில் ஆழ்த்தியுள்ள முக்கிய நோய் புற்றுநோய். காரணம் நிரந்தர தீர்வு இந்நோய்க்கு இல்லாதது தான். 

எவ்வளவு தான் செல்வம் சேர்த்து வைத்தாலும், அதை எல்லாவற்றையும் விட பெரிய செல்வம் ஆரோக்கியம் தான் என்ற பழமொழியின் விளக்கம் இந்நோயைப் பற்றி அறிந்தவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். சேமித்த செல்வங்கள் அனைத்தையும் இழந்தாலும், புற்றுநோயால் இழந்த ஆரோக்கியத்தை பெற முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். அந்த அளவுக்கு, மிகக் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் எமன் நோய்தான் இந்த புற்றுநோய். அத்தகைய புற்றுநோயை வராமல் தடுப்பதே சாலச் சிறந்தது.  

அந்த வகையில் குடல் புண்ணும், குடல் புற்றுநோயும் இன்றைய இளம் தலைமுறையினருக்கும், புதுயுகத்திற்கும் நிச்சயம் சவால் தான். 

ருசிக்காக உணவகத்தை நாடி வகை, வகையாய் சுவை கூட்டப்பட்ட உணவுகளோடு வாழ்வியலை அதிகம் விரும்புபவர்கள், பின்னாளில் குடல் புண்ணுக்காக மட்டுமின்றி குடல் புற்றுக்கும் மருத்துவமனையை நோக்கி நடையாய் நடக்க வேண்டியிருக்கும் என்பது தான் உண்மை. 

சுவையை அதிகரிக்க உணவில் சேர்க்கப்படும் பல்வேறு செயற்கை வேதிப்பொருள்கள் இயற்கையான உடலமைப்பை சிதைக்கும் தன்மை கொண்டவையே.

ஆக, குடல்புண் தொடங்கி குடல் புற்றுவரையில் வரவிடாமல் தடுக்கும் மூலிகை ஒன்று உண்டெனில் அது நிச்சயம் சுவை விரும்பிகளுக்கு அமிர்தம் தான். அந்த அமிர்தமான மூலிகையினை சிவன் கோவில்களில் நாள்தோறும் அர்ச்சனை செய்வதில் இருந்தே அதன் மருத்துவத் தன்மை பலருக்கு தெரியும்.

சிவத்துருமம் என்று கடவுள் பெயராலே நம்மை காக்க வந்துள்ள சித்த மருத்துவ அமிர்த மூலிகைதான் ‘வில்வம்’.

வில்வத்தின் சிறப்பு என்னவெனில் இலை, பிஞ்சு, பூ, காய், பழம், வேர் இவை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. 

துவர்ப்பும், கசப்பும் உடைய இதன் இலைத்தளிர் சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு பயன்படுத்தப் படுகிறது. இது சிவனுக்கே குளிர்ச்சி தருவதாக புராணங்கள் கூறுகின்றது. அப்போது நமக்கு இல்லாமலா என்ன? ஆம். பித்தம் சார்ந்த நோய்களை நீக்குவதில், சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் வில்வ இலை மிகச் சிறந்தது என்று சித்த மருத்துவம் கூறுகின்றது. இதனை “வில்வத்தின் வேருக்கு வீறு குன்மம் வாயுகபம், சொல்லவொணா பித்தம் தொடர்சோபை நீங்கும்” என்ற அகத்தியர் குணவாகப் பாடல் வரிகளால் அறியலாம். 
  
வில்வ இலையில் உள்ள பிளவனாய்டு வேதிப்பொருளால் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையும், கிருமிக் கொல்லியாகவும், முக்கியமாக பாக்டீரியா மற்றும் வைரஸ்-க்கு எதிராக செயல்படும் தன்மையும், வயிற்றுப் போக்கினை நீக்கும் தன்மையும், இரைப்பையை பாதுகாக்கும் தன்மையும், பெருங்குடல் அழற்சி(புண்) போக்கும் தன்மையும், கல்லீரலை மற்றும் இருதயம் பாதுகாக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், வீக்க முருக்கியாகவும், மூட்டுவாதத்தை குறைப்பதாகவும், தோல் ஒவ்வாமையை தீர்ப்பதாகவும் உள்ளது.

மேலும், வில்வ பழம் நாள்பட்ட வயிற்றுப் போக்கு, வயிற்றுப்புண் சிகிச்சையிலும், மலமிளக்கியாகவும், பல்வேறு நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றது.

வில்வத்தில் முக்கியமாக லிமோனீன், லினாலூல், α-கியூப்பீன், சினியோல், β-காரியோஃபிலீன் போன்ற நறுமணம் தரும் உயிர் வேதிச்சேர்மங்களை கொண்டுள்ளது. ஏஜெலின், ஏஜெலினைன், மார்மெலின், புரோகூமரின் மற்றும் மார்மெலோசின், டார்டாரிக்அமிலம், லினோலிக் அமிலம், டானின்கள், அந்தோ சயனின்கள் மற்றும் பிளாவனாய்டு கிளைகோசைடுகள் ஆகியவையும் உள்ளது. இவைகளே, இதன் தனித்துவமான மருத்துவ குணத்திற்கு காரணம்.

மேலும், வில்வ பழத்தில் தண்ணீர், புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், கரோட்டின், தையமின், ரிபோஃப்ளேவின்(பி2), நியாசின், அஸ்கார்பிக்அமிலம் (சி) போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் மற்றும் டார்டாரிக் அமிலமும் உள்ளது. 

மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத தாதுஉப்புக்களும் உள்ளன.

வில்வத்தில் உள்ள பல்வேறு தாவர வேதிப்பொருள்கள் அதன் வயிற்றுப் புண்ணை ஆற்றுவது முதல் புற்றுநோய் வருவதை தடுக்கும் தன்மையுடையதாக உள்ளன. வயிற்று புற்றுநோய் என்பது அதிகம் ஏற்படும் புற்றுநோய் வகைகளில் 5 ஆவது இடத்தில் உள்ளது. இதுவே 3 ஆவது மிகவும் ஆபத்தான புற்றுநோய் என்பதும் குறிப்பிடத்தக்கது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் மரணத்திற்கு இரண்டாவது அதிக காரணம் புற்றுநோய்தான். அத்தகைய புற்றுநோயினைத் தடுக்க இந்த சித்த மருத்துவ மூலிகை பெரிதும்பயன்படும். 

வில்வ இலையும், பழமும் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். லுபியோல், யூஜெனோல், லிமோனென், சிட்ரல், ருடின் மற்றும் அந்தோ சயினின்கள் போன்ற வேதிப்பொருள்கள் புற்றுநோய் தடுப்பு செய்கையைக் கொண்டிருப்பதாக அறியப்படுகின்றது.

நாள்பட்ட வயிற்றுப் புண் நிலையே புற்றுநோயாக மாறக்கூடும் என எச்சரிக்கிறது நவீன அறிவியல்.

சித்த மருத்துவத்தில் வில்வபழத்தைக் கொண்டு செய்யப்படும் வில்வாதி லேகியம் வயிற்றுப்புண் ஆற்றும் தன்மையுள்ளது. இது பித்தத்தையும் குறைக்கும். சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள வில்வபழத் தைலம், எண்ணெய் தேய்த்து குளிக்க பித்தத்தை குறைத்து கண்ணுக்கு குளிர்ச்சி தரும். 
ஆகவே, அடிக்கடி வயிற்றுப்புண்ணால் அவதியுறும் பலரும் இந்த வில்வபழத்தை எடுத்துக்கொள்ள நல்ல பலன் தரும்.

அதேபோல், வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களும் வில்வ இலையுடன், மிளகு சேர்த்து கசாயமாக்கி எடுத்துக்கொள்ள நோய்நிலையில் நல்ல முன்னேற்றம் தரும்.

சிவத்துருமம் என்ற பெயரைக் கொண்ட வில்வம் எளிய சித்த மருத்துவ மூலிகை. இதன் மிகப் பெரிய பயன் மக்களைச் சென்றடையவே சிவன் கோவில்கள் தோறும் இதை வைத்து, நம்மை பயன்படுத்தக் கூறியிருப்பது, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப்போன மறை முகசெய்தி. 

ஆக, இத்தகைய வில்வம் என்பது சித்த மருத்துவம் நம் குடலுக்கு தந்த இயற்கை கொடை. அதை பயன்படுத்தினால் சீரண மண்டலத்தின் பாதுகாப்பு நிச்சயம் உறுதி.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com