சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்குமா கீழாநெல்லி…?

கீழாநெல்லி என்றதுமே நம்மவர்களுக்கு நச்சென்று நினைவில் வருவது கல்லீரல் நோய்கள் தான். 
சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்குமா கீழாநெல்லி…?

நீங்கள் இந் தமூலிகையை பயன்படுத்தினால் சர்க்கரை உடனே குறையும், இந்த மூலிகைக்கு சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் தன்மை உண்டு, இந்த மூலிகையை பயன்படுத்த சர்க்கரை நோய் முற்றிலும் நீங்கும் என்று கூகுள் அறிவிப்பு தண்டோரா போடும் கட்டுரைகளையும், காணொளிகளையும் கண்கள் எளிதில் கடக்க முடிவதில்லை. 

அப்படியொரு இணைப்பு பதிய செய்யப்பட்டால், நிச்சயம் பார்வைகள் எண்ணிலடங்காது. ஏனெனில் காலம் காலமாக மருந்து மாத்திரைகளை உட்கொண்டு சலித்துப்போன மனமும், உடலும் ‘எத்தை தின்றால் பித்தம் தணியும்’ என்ற ஏக்கத்துடன் காத்துக்கொண்டுள்ளன என்பதுதான் உண்மை.

இன்சுலின் குத்திக் குத்தி சலித்துப்போன தோலும், சர்க்கரை வியாதியால் மறுத்துப்போன காலும், பாதிக்கப்பட்டவர்களை அதிகம் துன்புறுத்தும். இதனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதியால் ஏற்படும் பயம் ஏராளம். இவ்வாறு உடல் களைத்து, மனம் சலித்துப் போனவர்கள் தாராள மனம் கொண்டு அணுக வேண்டியது சித்த மருத்துவதைத் தான். 

சித்த மருத்துவத்தால் அதிகரித்த சர்க்கரை அளவை குறைக்கவும் முடியும், வரக்கூடிய சர்க்கரை வியாதியை தடுக்கவும், தள்ளிப் போடவும் முடியும் என்பதுதான் உண்மை. 

அதைச்சார்ந்த அச்சத்தை போக்கவும் உதவும். சித்த மருத்துவத்தில் எண்ணற்ற மூலிகைகள் சர்க்கரை வியாதிக்கு மருந்தாக, தீர்வாக சொல்லப்பட்டுள்ளன. சர்க்கரை வியாதியை ‘மதுமேகம்’ என்கிறது சித்த மருத்துவம். 

மது என்றால் தேன் அல்லது இனிப்பு, மேகம் என்றால் சிறுநீர் சார்ந்தது என்பது பொருள். ஆக, இனிப்பு சேர்ந்து வரும் சிறுநீர் நோய்கள் என்பது இதில் பொருள் விளங்கும்.

இனிப்பு சேர்ந்த சிறுநீர்க்கு காரணம் பலவாக இருப்பினும், அதில் முதல் இடத்தை பிடிப்பது தொற்றாநோய்களின் அரசன் என்று கருதப்படும் சர்க்கரை வியாதிதான். மொத்தத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மதுமேகம் என்று, இன்று நாம் கண்டு அஞ்சும் சர்க்கரை வியாதியை கணித்து, அதற்கு சிகிச்சையும் அளித்து வந்துள்ளனர் நம் முன்னோர்களான தமிழ் சித்தர்கள் என்பது நிச்சயம் பெருமைக்குரிய செய்திதான்.

சில ஆங்கிலமுறை மருத்துவர்கள், 'சித்தாவில் டயாபடிஸ் அதாவது சர்க்கரை வியாதியை பற்றி எல்லாம் சொல்லி இருக்காங்களா என்ன?'  என்று வேடிக்கையாக கேட்பதுண்டு. ஆனால் உண்மை என்னவெனில், மற்ற மருத்துவ முறைகளுக்கு முன்னதாகவே, மதுமேகம் எனும் நீரிழிவு, சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளித்து, அதனால் வரக்கூடிய பின்விளைவுகளை களைக்கும் நம்பாரம்பரிய மருத்துவத்தில் தீர்வு தந்துள்ளனர். 

மேலும், மதுமேகத்தை நோய்களுக்கு காரணமாகும் வாத, பித்த, கபத்தின் அடிப்படையில் பிரித்து அதற்க்கேற்றார்போல் தீரும், தீராது என்று கூறி சிகிச்சையும் அளித்துள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

அந்தவகையில் பித்தத்தை குறைத்து சர்க்கரையை கட்டுக்குள் கொண்டு வந்து, பித்தத்தால் அதிகரிக்கும் சர்க்கரை வியாதியின் பின் விளைவுகளையும் தீர்க்ககூடிய வல்லமை படைத்த சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்றுதான் நமக்கு அதிகம் பரிட்சயமான ‘கீழ்க்காய்நெல்லி’ அல்லது ‘கீழாநெல்லி’

கீழாநெல்லி என்றதுமே நம்மவர்களுக்கு நச்சென்று நினைவில் வருவது கல்லீரல் நோய்கள் தான். 

இது எப்படி சர்க்கரை வியாதிக்கு உதவும்? என்று கேட்பவர்களுக்கு சொல்வது என்னவெனில் கல்லீரல் பித்தத்தை சுரக்கும் உறுப்பு. கல்லீரல் நோய்கள் என்றால் பித்தநோய்கள் என்பது இதில் இலைமறை காய். கல்லீரல் நம் உடலில் நடைபெறும் அனைத்து வளர்ச்சிதை மாற்றத்திற்கும் ஆதாரமான உறுப்பு. சர்க்கரை வியாதியோ ஒரு வளர்ச்சிதை மாற்ற நோய். சர்க்கரை வியாதிக்கும், கல்லீரலுக்கும் என்ன தொடர்பு என்றும், ஏன் மதுபானப் பிரியர்கள், குடிமகன்கள் அனைவரும் சர்க்கரை வியாதியால் அவதியுறுகின்றனர் என்றும் இப்போது புரியும். ஆக, கல்லீரலை பாதுகாப்பதும் சர்க்கரை வியாதிக்கு போடும் தடை.

அத்தகைய கல்லீரலை சீர்செய்யும், பித்தத்தை சமப்படுத்தும், பித்தநோய்களை தீர்க்கும் இந்த கீழாநெல்லி தான் பித்தம் சார்ந்த மதுமேகத்திற்கும் தீர்வு என்கிறது சித்த மருத்துவம். அதுமட்டுமின்றி மதுமேக நோயாளிகளுக்கு பித்தத்தால் வரக்கூடிய கால் எரிச்சல் போன்ற பின் விளைவுகளுக்கும் சிறந்த தீர்வாகும். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்தே, சித்த மருத்துவத்தில் இந்த கீழாநெல்லி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 

இது நீரிழிவு, காமாலை போன்ற வியாதிகளுக்கு நல்ல பலன் தரும் என்பதை ‘கீழாநெல்லிக் குணந்தான் கேளாய் மதுமேகம் தாழாக் காமாலை களை சண்ணுந்’ எனும் அகத்தியர் குணவாக பாடல் வரிகளால் அறியலாம்.

கீழாநெல்லியில் அல்கலாய்டுகள், பிளவனாய்டுகள், பாலிபீனால்கள், லிக்னன்கள், டேனின்கள், ட்ரைடெர்பீன்கள் ஆகிய பலவேதிப்பொருட்கள் உள்ளன. முக்கிய பிளவனாய்டுகளான ருடின், குர்செடின், கெம்ப்பெரால்ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீழாநெல்லியில் ‘பில்லாந்தின்’ எனும் கசப்பு பீனோலிக் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் பல்வேறு ஆராய்ச்சிக்குட்ப்பட்ட, நீரிழிவு நோயில் நல்ல பலனை தரக்கூடிய ‘மதுமேக சூரணம்’எனும் சித்த மருந்தில் கீழாநெல்லி சேருவது சிறப்பு.. நீரிழிவு நோயில் சர்க்கரை அளவை குறைப்பதோடு, ஆன்டிஆக்ஸிடன்ட் செய்கை உள்ள படியால் சர்க்கரை நோயாளிகளுக்கு பின் விளைவாக ஏற்படும் ‘நியூரோபதி’ எனும் நரம்பு சார்ந்த நோயில் நல்ல பலன் தரும்.

‘கீழாநெல்லி தைலம்’எனும் சித்த மருந்து பித்தத்தை தன்னிலைப்படுத்தி மேக நோய்களை தடுக்கும் தன்மையுடையது. வாரம் இருமுறை கீழாநெல்லிதைலம் பயன்படுத்தி எண்ணெய் குளியல் எடுக்க பித்தம் குறைவதோடு, சர்க்கரை வியாதி வருவதை தள்ளிப் போடமுடியும்.

கீழாநெல்லி சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆறுசுவைகளுள் கார்ப்பு, உப்பு சுவை நீங்கலாக மற்ற நான்கு சுவைகளும் உடையது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கீழாநெல்லி இலைகளை அரைத்து தினசரி காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள காமாலையை நீக்குவதோடு, கல்லீரலை வன்மைப்படுத்தி, சர்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டு வரும். 

கீழாநெல்லி நம் வீட்டு அருகே கிடைக்கக்கூடிய எளிய மூலிகைதான். அதனால்தான் என்னமோ அதன் மிகப்பெரிய பயன்களை நாம் ருசிக்க மறந்துள்ளோம். 

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவசியம் பயன்படுத்தி பயனடைய வேண்டிய அதிசய மூலிகை இது. பயன்படுத்தி பாருங்கள் நிச்சயம் பலனடைவீர்கள். சித்த மருத்துவம் நமக்கான கொடை.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com