சுகம்தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்குமா ‘அரத்தை’…?

எனக்கு கை, கால் மூட்டு எல்லாம் வலிக்குது, எனக்கு இந்த மாத்திரை கொடுங்க, அந்த மாத்திரை கொடுங்க என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களை நாடி மருந்துகளை எடுப்பவராக இருந்தால்
சுகம்தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டுவலிக்கு நிவாரணம் அளிக்குமா ‘அரத்தை’…?



எனக்கு கை, கால் மூட்டு எல்லாம் வலிக்குது, எனக்கு இந்த மாத்திரை கொடுங்க, அந்த மாத்திரை கொடுங்க என்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்தகங்களை நாடி மருந்துகளை எடுப்பவராக இருந்தால், இந்த கட்டுரை நிச்சயம் அவர்களுக்குத் தான். 

வலி நிவாரணி மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் எவ்வளவுதான் எச்சரிக்கை விடுத்தாலும் பலரும் அதை செவிசாய்த்து பின்பற்றுவதில்லை. அந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் தான் எனக்கு அலுப்பு தீரும், வலி குறையும், உறக்கம் நன்றாக வரும் என்று தன்னைத்தானே சமரசம் செய்துக்கொண்டு, பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் பலப்பல பக்க விளைவுகளை உண்மையில் சந்திக்க நேரிடும்.

அதிகமாக பயன்படுத்தும் வலி நிவாரணி மருந்துகளால் சிலருக்கு வயிற்றுப்புண் போன்ற குடல் சார்ந்த நச்சுத்தன்மையும், சிலருக்கு மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் சார்ந்த நச்சுத்தன்மையும், இன்னும் சிலருக்கு சிறுநீரகம் சார்ந்த நச்சுத்தன்மையும் ஏற்படுத்தி துன்புறுத்தும். அதில் அதிக விளைவுகளை ஏற்படுத்துவது சிறுநீரகம் சார்ந்த நச்சுத்தன்மை தான். ஏனெனில் இது டையாலிசிஸ் எனப்படும் சிகிச்சைக்கு வழிவகுக்கும், அனால் ஜெஸிக் நெப்ரோபதியை அதாவது சிறுநீரக செயலிழப்பினை ஏற்படுத்தக் கூடியது.

வலி நிவாரணிகளை நாள்பட எடுப்பதால் சிறுநீரக செயலிழப்பும் அதைதொடர்ந்து ஏற்படும் அதிகரத்த அழுத்தமும், ரத்த குறைவும், வீக்கமும், இருதய செயலிழப்பும், நாம் சிறு வயதில் கேள்விப்பட்ட ‘வாள் போய் கத்தி வந்த ’கதையாக, தொடர் இன்னல்களை ஏற்படுத்தும். மேலும் அதிகப்படியான வலிநிவாரணி பயன்பாடு இருதய நோய், குறிப்பாக மாரடைப்புக்கான அதிக ஆபத்தை அளிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. 

என்ன நாம் சாதாரணமாக பயன்படுத்தும் வலி நிவாரணிகளால் இருதய நோய்கள் வருமா? என்பது பலருக்கும் அதிர்ச்சி தரும் செய்தி தான்.

‘டாக்டர் எங்கள் மூட்டு வலிக்கும், உடல் அலுப்புக்கும் நிவாரணம் தரும் ஒரு மருந்து, பக்க விளைவுகள் இல்லாமல் பாதுகாப்பானதாக இருக்குமா? 

அப்படி இருந்தால் உழைக்கும் வர்க்க மக்களின் உன்னதமான மருந்தாக, மருத்துவமாக நிச்சயம் அது இருக்கும்’ என்று கூற நினைப்பவர்களுக்கு உதவும் சித்த மருத்துவ மூலிகை தான்‘அரத்தை’.

நோய்களுக்கு முதல் காரணம் என்பது, நான் அடிக்கடி குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் தான். அதுவும் இத்தகைய மூட்டு வலிகளுக்கு முதன்மைக் காரணம்‘கபம்’தான். அதாவது மூட்டுகளில் சேரும் கபம், வாதமாகிய வாயுவுடன் கூடி கபவாதம் என்ற நிலையாகி இத்தகைய மூட்டு வலிகளை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. 

பெரும்பாலான சித்த மருத்துவர்களிடம் , மூட்டு வலி உள்ளவர்கள் சிகிச்சைக்கு செல்லும் போது, நீங்கள் கிழங்கு, பட்டாணி போன்ற வாயுப்பொருள்களையும், பூசணி, புடலை, சுரைக்காய், பீர்க்கு போன்ற பிழிந்தால் நீர் வரும் காய்கறிகளை தவிர்க்கவும் கூறுவது எதனால் என்று இப்போது பலருக்கு புரிய வரும். ஆம், இவற்றால் அதிகரிக்கும், வாயுவும், கபமும் நோய்க்கு காரணத்தை கூட்டி வலியை அதிகரிக்கும் என்கிறது சித்த மருத்துவம்.  

ஆக, கபத்தையும், வாதத்தையும் குறைக்கும் பொருளாக இருந்தால், இன்னும் முக்கியமாக மூட்டு வலி நோய்க்கு ஆதாரமாகும் கபத்தை குறைக்கும் மூலிகையாக இருந்தால், மூட்டு வலிக்கு சிறந்த பலனை தரும். அத்தகைய மூலிகைகளுள் ஒன்று தான் அரத்தை. அதன் பெயரிலே அந்த உண்மை அடங்கியுள்ளது.

அரத்தையை, அரம்+த்+ஐ என்று பிரிக்கலாம். ‘ஐ’என்றால் சித்த மருத்துவ மறை பொருளாக கபத்தை குறிக்கும். அரம்+த்+கபம் (ஐயம்) = கபத்தை அறுக்கும் பொருள்.

சித்த மருத்துவ மூலிகைகளின் பெயர்க் காரணங்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் இருப்பது நம் மருத்துவத்தின் தனிச் சிறப்பு. இதனை ‘தொண்டையிற் கட்டும் கபத்தை தூர துரத்திவிடும்’ என்கிற அகத்தியர் குணவாகப் பாடல் வரிகள் உறுதி செய்கிறது.

காரத்தன்மையுடைய அரத்தையில் இரண்டு வகைகள் உள்ளன. சிற்றரத்தை, பேரரத்தை என்பது தான் அவை. இவை இரண்டின் மருத்துவ குணங்களும் ஏறக்குறைய ஒன்றுதான். அரத்தை மூலிகையில், வேர்தான் மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. 

அரத்தை வேரை கையில் எடுத்தமட்டில் வலி நோய்கள் அனைத்தும் தூள்தூளாய் சிதறி ஓடும் என்பதை ‘சோபை தட்டசூர் வாத சோணித நோய் - நேரின் அரத்தையெடு துகளதாம்’ என்கிற தேரையர் குணவாகப் பாடல் வரிகளால் அறியலாம்.  

அரத்தையின் வேர்த்தண்டுக் கிழங்கில், அத்தியாவசிய எண்ணெய்கள், ஃபிளாவனாய்டுகள், பினாலிக் அமிலங்கள், சபோனின்கள் மற்றும் டெர்பீனாய்டுகள் போன்ற பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளன. 

அதே நேரத்தில் முக்கிய செயலியல் மூலக்கூறான கேலங்கால் அசிடேட், கேம்ப்ஃபெரால் மற்றும் சினியோல் ஆகியவையும் உள்ளன. 

அரத்தையின் மருத்துவ குணத்திற்கு மிக முக்கிய உறுதுணையாக இருப்பது அதில் உள்ள ‘டையரில்ஹெப்டனாய்டு’ என்கிற வேதிப்பொருள் தான். கிட்டத்தட்ட 48 வகையான டையரில் ஹெப்டனாய்டு வகை வேதிப்பொருள்கள் உள்ளன.

அரத்தையில் உள்ள பல்வேறு வேதிப்பொருட்களால் இது வீக்க முருக்கியாகவும், வலி நிவாரணியாகவும், மூட்டுவாதத்தை குறைப்பதாகவும், பல்வேறு வைரஸ், பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படும் கிருமிக் கொல்லியாகவும், கட்டிகளை கரைப்பதாகவும், ஒவ்வாமையை தடுக்கும் ஆற்றலும்,  கல்லீரலை பாதுகாப்பதாகவும் உள்ளது. 

மேலும் சித்த மருத்துவத்தில் காய்ச்சல், உடல்வலி, பீனிசம் எனப்படும் சைனுசைடிஸ், மூட்டுவலி, இருமல், ஆஸ்துமா எனும் சுவாசகாசம் போன்ற பல்வேறு நோய் நிலைகளில் அரத்தையை ஆதாரமாக கொண்டு செய்யப்படும் ‘அரத்தை குடிநீர்’பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரத்தையில் உள்ள வேதிப்பொருட்கள் நம் உடலில் மூட்டுவீக்கம், வலிக்கு காரணமாகும் சைக்ளோ ஆக்சிஜனேஸ்-2 (COX-2), TNF-ஆல்பா, இன்டர்லூகின்-6 (IL-6) மற்றும் இன்டர்லூகின்-1 ஆகிய நொதிகளின் செயல்பாட்டையும், வெளிப்பாட்டையும் தடுப்பதன் மூலம், வலிகளுக்கு சிறந்த நிவாரணம் தரும் இயற்கை பொருளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறந்த குழந்தைகளுக்கு தலையில் உள்ள முன் உச்சி, பின் உச்சி குழிக்கள் மூடுவதற்கு முன், கபம் சேர்ந்து அவர்களுக்கு நீர்க்கோவை வராமல் தடுப்பதற்காக காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘ராசனாதி சூரணம்’ என்பது இந்த அரத்தை சூர்ணம் தான். 

நமக்கே தெரியாமல் நம் முன்னோர்கள் காலம் தொட்டே பயன்படுத்தி வரும் அரத்தை, மேல் குறிப்பிட்ட அத்துணை மருத்துவ குணங்களையும் உடையது. 

அத்தகைய அரத்தையை நாம் பயன்படுத்த தொடங்கினால் வலி நிவாரணிகளுக்கு பிரியாவிடை கொடுக்க முடியும். ஏனெனில் சித்த மருத்துவ கூறும் இயற்கை வலி நிவாரணி இந்த அரத்தை. இது நம் பாரம்பரியத்தோடு ஒன்றிணைந்தது என்பதை மறுக்க முடியாது.

மருத்துவரின் ஆலோசனைக்கு: +91 8056040768 இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com