காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண் 

காகிதத்தில் பொம்மை செய்து புதுமையை படைத்திருக்கிறார் கோவை இளம்பெண் ராதிகா.
காகித பொம்மைகளுடன் கோவை பெண் ராதிகா.
காகித பொம்மைகளுடன் கோவை பெண் ராதிகா.

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற பழமொழிக்கேற்ப காகிதத்தில் பொம்மை செய்து புதுமையை படைத்திருக்கிறார் கோவை இளம்பெண் ராதிகா.

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி அருகேயுள்ள பாரதிநகரை சேர்ந்தவர் ராதிகா. தனது சிறுவயது முதலே கைவினை பொருட்கள் செய்வதில் ஆர்வம் கொண்டவர் ராதிகா.. பள்ளி நேரங்களை தவிர மற்ற நேரங்களில் வீணாக பொழுதைக் கழிக்காமல் வீணான பொருட்களோடு பொழுதைக்கழித்தவர். மற்ற குழந்தைகள் போல சுறுசுறுப்பாக இருந்த ராதிகாவுக்கு 6 வயதில் ஒரு விபத்து ஏற்பட்டு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அதைபெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார் ராதிகா. மீண்டும் அவருக்கு காலில் அடிபட்டது அதற்காக அவருக்கு 7முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடைசியாகத்தான் அவர்களது குடும்பத்திற்கு தெரிய வருகிறது ராதிகாவிற்கு பிறக்கும்பொழுதே எலும்பு அடர்த்தி குறைபட்டு நோய்  இருக்கிறது என்று. அவரால் தொடர்ந்து பள்ளி சென்று படிக்க முடியவில்லை.

நான்கு சுவற்றுக்குள் முடங்கினார் ராதிகா. ஆனால் அப்போது நினைத்திருக்கமாட்டார் தனது புகழ் பல நாடுகளுக்கு பரவும் என்று. கிடைக்கும் நேரங்களை பயனுள்ளதாக மாற்ற விரும்பியவர், மற்றவர்கள் கழிவு என நினைக்கும் காகிதங்களை கொண்டு கைவினைப்  பொருட்கள் செய்யத்தொடங்கினர். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் காகிதங்கள், சோப்பு அட்டைகள், அழைப்பிதழ்கள் என செலவில்லாத பொருட்களை வைத்து வீட்டு அலங்கார பொருட்கள் செய்தார். ராதிகாவின் அண்ணன் ராஜ்மோகனும் அவரது திறமைக்கு பக்கபலமாக இருந்தார். ஒரு நாள் சமுக வலைத்தளத்தில் பார்த்த ஆப்பிரிக்க பொம்மை போல் செய்து பழக்குமாறு தங்கையிடம் கூறி அந்த விடியோவையும் காண்பித்திருக்கிறார். ராதிகாவும் ஆப்பிரிக்க பொம்மை செய்து வீட்டை அலங்கரத்திருக்கிறார்.

அதைப்பார்த்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் ராதிகாவை பாராட்டியதோடு தனக்கும் இதுபோல செய்து தருமாறு கேட்டனர். ஆர்வத்தோடு ராதிகாவும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் காகிதத்தில் பொம்மை செய்து பரிசளித்தார். அதைப் பார்த்த பலரும் இந்த காகித பொம்மைகளை விலைக்கு வாங்க முன்வந்தனர். இதன்மூலமாக பொம்மைத்தொழில் உயிர்பெறத் தொடங்கியது. 200 ரூபாய் முதலீட்டில் தொழிலை தொடங்கினார் ராதிகா. கொஞ்சம் கொஞ்சமாக தொழில் பெறுகத் தொடங்கியது. 

பொம்மை செய்வதற்காக பழைய செய்தித்தாள்கள், மூங்கில் குச்சிகள், நூல், பெயிண்டுகள், வாட்டர் கலர்ஸ் மற்றும் மூன்று வகையான பசைகளை பயன்படுத்துவதாக கூறுகிறார்.  ஒரு பொம்மை செய்வதற்கு 200 ரூபாய் வரை செலவு ஆகிறதாம். ஒவ்வொரு பொம்மைக்கான விலையும் ஒரே போல் இருப்பதில்லை. வேலைப்பாடுக்கு ஏற்றவாறு மாறுபடும். வெளிநாடுகளிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்கு ஆர்டர்கள் வந்தால் ஏற்றுமதி செலவே 10 ஆயிரத்திற்கும் மேலே வருமாம். இதனால் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஊருக்கு செல்லும்போது பொம்மை வாங்கிச் செல்கிறார்கள் என்கிறார் ராதிகா.

தினமும் இதற்காக 12 மணி நேரம் செலவிடுவதாக கூறுகிறார் சாதனைப் பெண் ராதிகா. ஒரு பொம்மை முழுமை பெறுவதற்கு 4 மணி நேரம் ஆகுமாம். அவரது பெற்றோரும் சிறுசிறு உதவிகள் செய்கின்றனர். காகிதத்தை சுருட்டுவதில்தான் அதிக நேரம் செலவாகும் அதில் பெரும்பங்கு அப்பாவிற்குத்தான் என்கிறார் சிரித்தபடி.

 ஆப்பிரிக்க பொம்மை என்பதால் அதன் கருப்பு நிறத்தை மாற்றாமல் அப்படியே செய்து வந்தார். நிறத்தை காரணம் காட்டி பல ஆர்டர்களும் கைநழுவி சென்றிருக்கின்றன. ஆனாலும்  கருப்பு என்பது என்றும் சளைத்ததல்ல என்று உணர்ந்த ராதிகா தொடர்ந்து கருப்புநிற ஆப்பிரிக்க பொம்மையையே செய்து வந்தார். மேலும் பழுப்பு நிறங்களையும் தாமிர நிறங்களையும் பயன்படுத்தினார் என்றாலும் தோலின் நிறத்தை மாற்றவே இல்லை. இப்போது பலரும் கருப்பு நிறத்தை விரும்பியே பொம்மை வாங்கி செல்கின்றனர் என்கிறார் ராதிகா.

காதணிகள், வளையல், உள்ளிட்ட அணிகலன்கள் முதல்  பூக்கூடை, பூந்தொட்டி,தோரணங்கள், சுவற்றில் தொங்கவிடப்படும் அலங்கார பொருள்கள் மற்றும் ஆப்பிரிக்க பொம்மை என 30 வகையான கலைப்பொருள்களை செய்கிறார் ராதிகா.

பொம்மை செய்வதோடு நின்று விடாமல், அதனைத் தொடர்ந்து  சமூக ஊடகங்களில் பதிவிட்டும் வருகிறார். இதன் மூலமாக இவரது கலைப்பொருள்களுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 8 நாடுகளுக்கு இவரது ஆப்பிரிக்க பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் அதிக அளவில் வருகிறதாம். தனது தொழிலில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார் ராதிகா.

என்னைப்போன்று வளரும் தொழில்முனைவோருக்கு இதுபோன்ற தொழில்களில் வருமானம் குறிக்கோளாக இருக்கக் கூடாது. முதலீடு செய்வதில்தான் ஆர்வமாக  இருக்க வேண்டும். கடந்த 7 வருடமாக என் கலைப்பொருள்கள் பிரபலமடைந்து வருகிறது. ஆனால் சொல்லும் அளவிற்கு லாபம் பெரிதாக இல்லை. என்னுடைய சுய தேவைக்காக நான் இப்போது யாரையும் சார்ந்து இருப்பதில்லை. என்னுடைய இந்த குயின்பீ  டால்ஸ்  நிறுவனம்  பார்பீ டால்ஸ் அளவிற்கு வளர வேண்டும். என்னுடைய மாணவர்கள் வருங்காலத்தில் நிச்சயம் எனக்கு போட்டியாக வருவார்கள் என்று தான் கற்றுக்கொடுத்த கலையின்மீது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ராதிகா.

இவரைப் போன்று கைவினை பொருள்கள் செய்வதில் ஆர்வமாக இருக்கும் பலருக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார். எலும்பு அடர்த்திகுறைபாட்டு நோயினால் பள்ளி செல்ல முடியாமல் வீட்டிலிருந்த ராதிகா உடல்நலம் தேறத்தொடங்கியவுடன் பல பள்ளி, கல்லூரிகளுக்கும் நேரில் சென்று மாணவ, மாணவிகளுக்கு தான் கற்றக் கலையை கற்றுக்கொடுக்கிறார்.

பொழுதைக் கழிப்பதற்காக பொம்மை  செய்யத் தொடங்கிய ராதிகா இப்போது பிஸியான தொழில்முனைவோராக வளர்ந்திருக்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com