காலநிலையில் ஏன் இத்தனை பெரிய மாற்றங்கள்?

சில சூழலியல் மாற்றங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் எல் நினோ. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

முன்பு எப்போதும் இல்லாத வகையில், உலக காலநிலை என்பது மிகப் பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. வெள்ளமானாலும் வறட்சியானாலும் அது வழக்கத்திற்கு மாறாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே வருகிறது. இவை அனைத்திற்கும் புவி வெப்பம் அடைதல் முக்கிய காரணமானாலும், அவை நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தாமல் சில சூழலியல் மாற்றங்களால் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் எல் நினோ. 

எல் நீனோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது. அதாவது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையானது சராசரி வெப்பநிலையினை விட அதிகமானதாக இருக்கும்.  அந்த பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வை தான் எல் நினோ என்று சொல்கிறார்கள்.  சரியாக கூறவேண்டும் என்றால், உலக வெப்ப நிலை சராசரியை விட 1 முதல் 2 சதவீதம் கூடுதலாக இருக்கும். 

கடத்த ஆண்டு லா நினாவால் உலகம் பாதிக்கப்பட்டநிலையில், இந்த ஆண்டு எல் நினோவால் பாதிக்கப்பட இருக்கிறது. ஆம்,  இது வருகிற ஜூலை மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் 80% எட்ட வாய்ப்புள்ளதாக ஐநா சபையும், உலக வானிலை ஆய்வு மையமும் கடந்த மே மாதம் அறிவித்தது. எல் நினோ நீரோட்டம் உருவானால், உலகில் இதுவரை இல்லாத வகையில் வெப்ப நிலை அதிகரிக்கும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது. சென்ற ஆண்டு 1.15° செல்சியஸ்சாக இருந்த உலகவெப்பநிலை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.1°முதல்1.8° செல்சியஸ்வரை வரை அதிகரிக்கும் என தெரிகிறது. இதனை அமெரிக்க அரசின் ஒரு அங்கமான தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகமும் (National Oceanic and Atmospheric Administration) உறுதி செய்துள்ளது.

சரி, இந்த எல் நினோ எப்படி உருவாகிறது என்றால், இந்த உலகம் 71% நீர் பரப்பையும், 29% நிலத்தையும் கொண்டுள்ளது. இந்நீர்பரப்பில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட 29% நிலத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும். இப்பெரும் நீர் பரப்பில் 50% நீரைக் கொண்டது பசிபிக் பெருங்கடல் ஆகும். இக்கடலில் கிழக்கில் இருந்து சூடான காற்று  மேற்கை நோக்கி வீசிக்கொண்டிருக்கும் மேற்கில் இருந்து குளிர்ந்த காற்றும் மேல் எழும், இவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, உலகம் முழுவதும் மழைப்பொழிவு சீராக வைத்திருக்கும் இவ்விரண்டில் எதாவது ஒன்று நடக்க தாமதம் ஆனாலும், எல் நினோ உருவாக வாய்ப்புள்ளது. 

பொதுவாக எல் நினோ 2 முதல் 7 ஆண்டுகால இடைவெளியில் உருவானாலும், சமீப காலங்களில் அவை மிகக் குறைந்த இடைவெளியில் உருவாவது பூமி மிக விரைவாக வெப்பமடைந்து வருவதையே காட்டுகிறது. 

கடைசியாக 2015-16 ஆம் ஆண்டு எல் நினோ உருவானது, இக்காலங்களில்  உலகம் பல்வேறு காலநிலை மாற்றங்களை சந்தித்தது, குறிப்பாக இந்தியாவில்  வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்கள், வரலாற்றில் இதுவரை பதிவுசெய்யப்படாத அளவிற்கான வெப்பநிலையையும் தமிழகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய  வெள்ள  பாதிப்புகளையும் ஒரே ஆண்டில் கண்டது. 

ஏன் நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட,  தென் மாநிலங்களில் சுட்டெரிக்கும்  கோடை வெயில் மே மாதம் தாண்டி ஜூன் மாதத்திலும் அதன் உக்கிரத்தை காட்டிக்கொண்டிருக்கிறது, ஆனால் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவை எல் நினோ பாதிப்புகளின் சிறிய தொடக்கம் தான் எனவும், இதன் விளைவுகள் இன்னும் தீவிரமானதாக இருக்கும் எனவும் ஆராச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இதை வெறும் காலநிலை மாற்றம் என்று மட்டும் நம்மால் கடந்துசெல்ல முடியாது. ஏனேனில்,  இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 16% பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இந்த எல் நினோவால், ஏற்படப்போகும் கடும் வெள்ளம் மற்றும் வறட்சியின் காரணமாக  விவசாயத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்,  அது இந்திய பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும்.

எடுத்துக்காட்டாக 2001ஆம் ஆண்டு முதல் 2020 க்கு இடைப்பட்ட இந்த இருபது வருடத்தில்,  இந்தியா ஏழு எல் நினோ ஆண்டுகளைக் கண்டுள்ளது. இவற்றில் நான்கு ஆண்டுகள் வறட்சியை ஏற்படுத்தியது, (2003, 2005, 2009-10, மற்றும்  2015-16 ஆகிய ஆண்டுகள்),  இந்த வருடங்களில் பருவமழையை ஒட்டி விதைக்கப்படும்,  நெல், நிலக்கடலை போன்ற காரீஃப்  பயிர் விதைகளின் விளைச்சல் கடுமையான காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டு, அதன் உற்பத்தி 3 முதல் 16 சதவீதம் வரை குறைத்து, இது இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரித்தது. ஏனேனில் கரீஃப்  பயிர் விதைகள் நாட்டின் வருடாந்திர உணவு விநியோகத்தில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது. இது இந்தமுறையும் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது.
 

வறட்சியோ வெள்ளமோ எது வந்தாலும், அது மக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கத்தான் செய்யப்போகிறது. இதை நம்மால் தடுக்கவே முடியாது, ஆனால் கூடுமானவரை அதன் கால அளவை நகர்த்தி செல்லலாம்,  இதற்கு நம் ஒன்று தான் செய்ய வேண்டும். அது இயற்கையை ஒன்றும் செய்யாமல் இருப்பது. உலகம் வெப்பமயமாகாமல் இருப்பதற்கான வழிகளை நம் செய்ய வேண்டும். ஏற்கனவே உலக வெப்ப நிலை அதிகரிப்பு பாரிஸ் ஒப்பந்தத்தை தாண்டி (1.5° க்கும் குறைவாக இருக்கவேண்டும்) பதிவாகிக்கொண்டிருக்கிறது.  இதே நிலை நீடித்தால் அது உலக அழிவிற்கு வழிவகுக்கும். இயற்கையை நம்மால் கணிக்க முடியாது, ஏனேனில் இயற்கை மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com