யானைகளின் மரணங்கள் எழுப்பும் எச்சரிக்கை ஒலி

கடந்த 2 மாதங்களில் மட்டும் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.
பலியான யானை.. கோப்பிலிருந்து..
பலியான யானை.. கோப்பிலிருந்து..

உலக அளவில் ஆப்பிரிக்கவையடுத்து ஆசியாவில்தான் அதிக அளவு யானைகள் உள்ளன. அதில் 27 ஆயிரம் யானைகள் தென் இந்தியாவில் மட்டும் உள்ளன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் மொத்தம் 2700க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. தமிழக காடுகளிலும், அதை ஒட்டிய பகுதிகளிலும் பாரம்பரியமாக யானைகள் வந்து செல்லும் வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடங்கள், மனிதர்களின் ஆக்கிரமிப்பு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் போது, யானைகள் வழி மாறும் நிலை ஏற்படுகிறது.

இதனால், காடுகளை ஒட்டிய கிராமங்களுக்குள் யானைகள் வருவது அவ்வப்போது நடக்கிறது. மேலும் யானைகளின் வலசைப்பாதைகள்  மனிதர்களால் ஆக்கிரப்பு செய்யப்படுவதாலும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. இதற்கு முழுக்க காரணம்  மனித தவறுகளே. மனிதர்கள் யானைகளின் வழித்தடங்களை அடைத்து யானைகளுக்கு இடையூறு செய்வதாலும் காடுகளை ஒட்டியுள்ள விவசாய பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பதாலும் யானைகள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு மனிதர்கள் வாழும் பகுதிகள் நோக்கி படையெடுக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக யானைகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை அச்சுறுத்துவதும் ,விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், உடல்நலக்குறைவு ஏற்படாமல் திடீரென பலியாவதும் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்ட யானைகள் மின்சாரம் தாக்கி பலியாயின. மேலும் ரயில்களில் மோதியும், மனிதர்களால் வெடி வைத்து கொல்லப்பட்டும்,மர்ம நோய்கள் தாக்கியும், விஷ செடிகளை உண்டும், தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டும்  நாளுக்குநாள் யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

குறிப்பாக கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது. ஆனால் யானைகள் பொதுவாக ஒரே இடத்தில நிலையாய் இருப்பதில்லை. அவை நீருக்காகவும் உணவுக்காகவும் அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் சிறுமுகை வனச்சரகத்தில் நீர் நிலைகள் அதிகமாக  இருப்பதால் அங்கு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். கடந்த 2 மாதங்களில் மட்டும் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.

தற்போதுமேட்டுப்பாளையம் வனச்சரகத்தில்  பாகுபலி யானை ஒன்று வாயின் அடிப்பகுதியில் பலத்த காயத்துடன் சுற்றித்  திரிகிறது. இது அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டை சாப்பிட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதே போல அதே மேட்டுப்பாளையம் காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த மார்ச் மாதம் வாயில் காயங்களோடு சுற்றித் திரிந்த யானை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பின்னர் வெடிமருந்துகளை உண்டதால்தான் யானை வாயில் காயம் ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தநிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாடு- கேரளா எல்லைப்பகுதியில் ரயிலில் மோதி யானைகள் இறப்பதால் அதைத் தடுப்பதற்க்காக யானைகளுக்கென தனியாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவே யானைகளுக்கென்று தனியாக அமைக்கப்படும் தென்னக ரயில்வேயின் முதல் சுரங்கப்பாதையாகும். ஆனால் இது பெரிய அளவில் பயனளிக்காது. யானைகள் சுரங்கப்பாதையில்தான் செல்லும் என்று கூறிவிட முடியாது. வேலி அமைத்து பராமரிப்பதே சிறந்தது என்கின்றனர் வனத்துறையினர்.

இவ்வாறு யானைகள் இறப்பு என்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதைத்  தடுப்பதற்கான முறையான வழிகளைக் கண்டறிவது அவ்வளவு எளிதான செயலல்ல. முடிந்தவரையில் யானைகளை பாதுக்காக்க அனைவரும் முன்வர  வேண்டும்.யானையின் சாணம் மூலமாக விதைகள் விதைக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் ஒரு யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை உருவாக்குகின்றன. ஒரு வருடத்தில் ஒரு யானையின் சாணத்திலிருந்து முளைக்கும் விதைகள் ஒரு காட்டையே உருவாக்கும் சக்தி கொண்டது. 

பூமியிலிருக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு முக்கியமானது. யானைகள் தனக்கு மட்டுமின்றி மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. 

யானைகள் இருக்கும் வனப்பகுதி வளமாக இருக்கும். யானைகளின் அழிவு காடுகளின் அழிவுக்கு வழிவகுக்கும். தொடர்ந்து நிகழும் யானைகளின் இறப்பு என்பது உலக அழிவுக்கான ஒரு எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

யானைகளுக்கு மோப்ப சக்தி அதிகம். 5கிலோமீட்டர் தூரம் வரை உள்ள உணவுகளை அவை மோப்ப சக்தியின் மூலம் அறிந்துகொள்ளும். இதனால் காடுகளை ஒட்டியுள்ள நிலங்களில் பயிரிடப்படும் வாழை, கரும்பு போன்ற யானைகளின் விருப்ப உணவுகளுக்காகவும் அவை வனப்பகுதியை விட்டு வெளியேறத் தொடங்குகின்றன. விவசாயிகள் காடுகளுக்கு ஒட்டியுள்ள பகுதிகளில் யானை போன்ற வனவிலங்குகளின் விருப்பமான உணவுகளை பயிரிடுவதை தவிர்ப்பதிலிருந்து தங்களது தோட்டங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.

யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்க வேண்டும் என்பதற்காக யானைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விவசாயிகள் ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது. இது பூமிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, யானைகளின் வலசைப் பாதைகளை மாற்றாமல், இயற்கை முறையில் அரண் அமைத்து, தங்களையும் பயிரையும் பாதுகாப்பதே யானைகளின் எதிர்காலத்துக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்தின் எதிர்காலத்துக்கும் சாலச்சிறந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com