123 ஆண்டுகளுக்குப் பின் மிக வெப்பமான பிப்ரவரி; உணவு கையிருப்பிலும் சிக்கல்?

பிப்ரவரி மாதமானது மிக அதிக வெப்பமான மாதமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
123 ஆண்டுகளுக்குப் பின் மிக வெப்பமான பிப்ரவரி; உணவு கையிருப்பிலும் சிக்கல்?

கடந்த 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு நம்மை தற்போது கடந்து சென்றிருக்கும் பிப்ரவரி மாதமானது மிக அதிக வெப்பமான மாதமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் சராசரி வெப்பநிலையானது 29.5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது. இது கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலையாகும். இதேநிலையில், வரும் மார்ச் முதல் மே மாதங்கள் அவ்வளவு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனவும் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் உணவு உற்பத்தி மிகப்பெரிய பாதிப்பைக் கண்டிருக்கிறது. கோதுமை, கடுகு, பருப்பு, மாம்பழம் உள்ளிட்ட பல்வேறு விளைபொருள்களின் விளைச்சலை இந்த கடுமையான வெப்பம் நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.

இன்னும் ஒரு சில வாரங்கள் இந்த வெப்பநிலை தொடர்ந்தால் நாட்டின் உணவு உற்பத்தித் துறை கடுமையாக பாதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஹோலி பண்டிகை வரை இந்த வெப்பம் நீடித்தால் கோதுமை உற்பத்தி 15 - 20 சதவிகிதம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக ஐசிஏஆர் பேராசிரியர் தெரிவித்துள்ளார். அவ்வாறு கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டால், ஒட்டு மொத்த ஆண்டும் உணவுப் பற்றாக்குறை நீடிக்கும். அதிகப்படியான வெப்பம் எப்போதுமே கோதுமை உற்பத்தியை மட்டுமல்லாமல் கடுகு மற்றும் தானியங்களின் உற்பத்தியை பாதிக்கும் என்கிறார்.

ஏற்கனவே கரோனா காலத்தில், இந்தியா தன்னிடமிருந்த ஏராளமான உணவு கையிருப்பை பல்வேறு திட்டங்களின் கீழ் காலி செய்துவிட்டிருக்கிறது. கடந்த ஆண்டும் கோதுமை உற்பத்தி குறைந்தது. இந்த ஆண்டும் அது நீடித்தால் நாட்டின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கோடை வெப்பம் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வட இந்திய மாநிலங்களில். வரும் மாதங்களில் வட இந்திய மாநிலங்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க எந்த வழியும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இயல்பான வெப்பநிலையை விட கூடுதல் வெப்பநிலையால் வட இந்திய மாநில மக்கள் ஏராளமான உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com