சதுப்பு நிலங்களை ஆக்ரமித்த சட்டவிரோத கட்டடங்கள்: சிஏஜி எச்சரிக்கை

நீலத்திலும் பச்சை நிறத்திலும் பரவலாக நீர் நிரம்பிக் காணப்படும் தென்சென்னையின் பள்ளிக்கரணை-வேளச்சேரி சதுப்பு நிலப்பகுதிகள் கான்கிரீட் கட்டடங்களாலும் ஆக்ரமிப்புகளாலும் நிரம்பி வழிகிறது.
சதுப்பு நிலங்களை ஆக்ரமித்த சட்டவிரோத கட்டடங்கள்: சிஏஜி எச்சரிக்கை


சென்னை: நீலத்திலும் பச்சை நிறத்திலும் பரவலாக நீர் நிரம்பிக் காணப்படும் தென்சென்னையின் பள்ளிக்கரணை-வேளச்சேரி சதுப்பு நிலப்பகுதிகள் கான்கிரீட் கட்டடங்களாலும் ஆக்ரமிப்புகளாலும் நிரம்பி வழிகிறது.

இதனால், கடந்த 20 ஆண்டுகளில் பள்ளிக்கரணை பகுதிகளில் இருந்த ஏரியின் பரப்பளவு பெருமளவு சுருங்கி இருப்பது குறித்து இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கை எச்சரிக்கை செய்வதாக அமைந்துள்ளது.

சிஏஜி வெளியிட்ட அறிக்கையின்படி, 2005ஆம் ஆண்டின் நிலப்பரப்பு வரைபடத்தை 2021ஆம் ஆண்டு நிலப்பரப்பு வரைபடத்துடன் ஒப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், சதுப்பு நிலப்பகுதிகளுக்குள் எவ்வாறு குடிசைகளும், கான்கிரீட் குடியிருப்புகளும் ஆக்ரமிக்கப்பட்டுள்ளன என்றும் இந்த ஆக்ரமிப்புகளால், நீர்நிலைகள் கடுமையாக மாசடைந்திருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு நீர்நிரம்பி வழிந்த சதுப்பு நிலப்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளை குடியிருப்புகள் ஆக்ரமித்து இருப்பது 2021ஆம் ஆண்டு வரைபடம் உணர்த்துகிறது.

இந்த சதுப்புநிலப்பரப்பை சிஏஜி அறிக்கை வேளச்சேரி சதுப்பு நிலப்பரப்பு என்று கூறுகிறது. அதேவேளையில், இதனை ஒருங்கிணைப்பு அமைப்புகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பரப்பு என்கின்றன. இது வேளச்சேரி ஏரிக்கு பின்னால் அமைந்துள்ளது.

1956ஆம் ஆண்டு 5500 ஹெக்டேரில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் 2023ஆம் ஆண்டு சுருங்கி 550 ஹெக்டேராக மாறிவிட்டது. குடிசைகள், குடியிருப்புகளை தாண்டி இந்த சதுப்பு நிலப்பரப்பில் 191 ஏக்கரை குப்பைகள் கொட்டும் இடம் ஆக்ரமித்துக் கொண்டு, அங்கு நாள் ஒன்றுக்கு 2,000 டன் குப்பைகள் கொட்டி, மிச்சமிருக்கும் நீர்நிலையையும் மாசுபடுத்தி வருகிறது.

இதுபோலவே, கோவிலம்பாக்கம் ஏரி குறித்து சிஏஜி வெளியிட்ட ஒப்பீட்டு தரவுகளில் 2002ஆம் ஆண்டையும், 2021ஆம் ஆண்டையும் பார்த்தால், அந்த ஏரி ஆக்ரமிப்புகளால் சுருங்கி குளம்போல காட்சியளிக்கிறது.

இந்த ஆக்ரமிப்புக் கட்டடங்கள் வெறும் சதுப்பு நிலப்பரப்புகள் ஆக்ரமிப்பதோடு நின்றுவிடாமல், மிச்சம் விட்டுவைக்கும் நீர்நிலையையும் மாசடையச் செய்யும் முக்கியக் காரணிகளாக மாறிவிடுகின்றன. இது அடுத்த அபாயத்துக்கு இட்டுச் செல்கின்றன.

இப்படி மாதந்தோறும் ஆக்ரமிப்புகள் பற்றி செய்திகளும் கட்டுரைகளும் வெளியாகிக் கொண்டே இருந்தாலும், அரசு ஏன் ஆக்ரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது மட்டும் விடைகாணாத கேள்வியாக இருந்து வருகிறது. 

முதலில், நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம், அதற்கு ஆக்ரமிப்புகளை தடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் ஆக்ரமிப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளும் அவசியம். ஏரியை ஆக்ரமித்துவிட்டு, மழைக்காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று கதறும் மக்களுக்கு ஆறுதலும் நிவாரணமும் கொடுப்பதற்கு பதில், ஆரம்பத்திலேயே ஆக்ரமிப்புகளைத் தடுப்பதுதான் சாலச்சிறந்தது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com