வாகனம் ஓட்டும்போது செல்லில் பேசினால் யார் வேண்டுமானாலும் புகார் செய்யலாம்! தமிழ்நாடு பின்பற்றுமா?
By DIN | Published On : 11th August 2023 03:31 PM | Last Updated : 12th August 2023 12:52 PM | அ+அ அ- |

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது காவல்துறை. இந்த அறிவிப்பு வழக்கமானது என்றாலும் இது பற்றி யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் என்பது புதிது!
காரைக்கால் மாவட்டத்தில் விபத்துகளை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகக் காவல்துறை இதைச் செய்திருக்கிறது.
மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ், காரைக்கால் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடும்போது, தலைக் கவசம் அணியாமலும், கைப்பேசி பயன்படுத்திக்கொண்டும் இருசக்கர வாகனத்தில் செல்வோரை போட்டோ அல்லது விடியோ எடுத்து போக்குவரத்துத் துறைக்கு அனுப்புகிறார்.
வாகனப் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்டோர் மீது போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதுபற்றிக் குறிப்பிட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மணிஷ், காரைக்கால் மாவட்டத்தில் காவல் துறையின் அறிவுறுத்தல்கள், போக்குவரத்துத் துறையின் அறிவுறுத்தல்களை மக்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
இதையும் படிக்க | யுபிஎஸ்சி தேர்வர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தவறும்பட்சத்தில் உடனடி அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாரபட்சமின்றி எடுக்கப்படும். போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து 9489205307 என்ற கைப்பேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களைச் செலுத்துவோரை செல்போனில் படமெடுத்து 9489205307 என்ற எண்ணுக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் காரைக்காலில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது குறித்துத் தெரிவித்தால் அவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் தெரிவிப்போர் விவரமும் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.
தமிழ்நாட்டிலும் செல்போன் விஷயத்தில் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை அரசும் போக்குவரத்துக் காவல்துறையும் மேற்கொள்ளலாம்.
சாலையில் வாகனங்களைச் செலுத்தும்போது செல்போன் பேசிக்கொண்டே செல்லும் ஒவ்வொருவரும் - இரு சக்கர வாகனங்கள், கார்கள், பேருந்துகள், குறிப்பாக மாநகரப் பேருந்துகள் - மற்றவர்களின் (அல்லாமல் தங்களுடைய) உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவர்களே.
இப்படிப் பேசிக்கொண்டே செல்வதால் எப்போது வேண்டுமானாலும் விபத்தும் உயிரிழப்புகளும் நேரிடலாம். இந்தப் பழக்கத்தைத் தடுக்க காரைக்கால் பாணியைப் பின்பற்றி, செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களைச் செலுத்துவோர் பற்றி யார் வேண்டுமானாலும் புகைப்படத்துடன் தகவல் தரலாம் எனத் தமிழ்நாட்டிலும் அறிவிக்கலாம்.
இதையும் படிக்க | தோ்தல் ஆணையா்களை தோ்வு செய்யும் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லையா?
சென்னையின் மிக மோசமான போக்குவரத்துச் சூழலில், இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய வேண்டும், இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் என்று அபத்தமாக வசூலித்துக் கொண்டிருக்கும் போக்குவரத்துக் காவல்துறை இதுபோல உருப்படியாக எதையாவது செய்யலாம்.
ஏதேனும் ஓர் செல்போன் எண்ணை அறிவித்து, எங்கிருந்து, யார் வேண்டுமானாலும் செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவோரின் படங்களை அல்லது விடியோக்களை அனுப்பலாம். தகவல் அளிப்பவரின் அடையாளம் காக்கப்படும். அபராதம் விதித்த விவரமும் தெரிவிக்கப்படும் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவிக்கலாம்.
வசூலும் வந்ததாக இருக்கும். விபத்துகளும் உயிரிழப்புகளும் தடுக்கப்படும் வாய்ப்பும் பெருகும்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...