இந்தியாவில் மின் வாகனங்கள் அதிகம் விற்காதது ஏன்?

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையிலும் மக்கள் ஏன் மின் வாகனங்களைச் சீண்ட மறுக்கிறார்கள்?
இந்தியாவில் மின் வாகனங்கள் அதிகம் விற்காதது ஏன்?

நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ விதமான பகீரத முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவந்தபோதிலும் அரசு நினைப்பது மட்டும் நடக்கவில்லை என்பதுடன் மின்வாகன விற்பனையும் தவழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் மக்கள் ஏன் மின் வாகனங்களைச் சீண்ட மறுக்கிறார்கள்? 

நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தினால் வாகனங்களின் பெருக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலும் சரி, சுற்றுச்சூழல் மாசுபாடும் சரி அதிகரித்து வருகிறது. 

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மூலம் இயங்கும் வாகனங்கள், கார்பன்-டை-ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளிப்படுத்துகின்றன. 

இந்நிலையில் சுற்றுச்சூழல் நிலைமையை கருத்தில்கொண்டு காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் மின்சார வாகனங்கள் நாட்டில் முதல்முதலாக 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டன. 

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அறிக்கையின்படி, கடந்த 2 ஆண்டுகளில் (2020-22) மின்சார வாகனங்களின் விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளது.

2020ல் 1.2 லட்சம் வாகனங்களும், 2021ல் 3.3 லட்சம், 2022ல் 10.2 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதுபோல 2023ல் 13.7 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச எரிசக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஆண்டைவிட இந்தாண்டில் 35% அதிகமாக விற்பனையாகும் என்று கூறுகிறது. ஜூன் 2023 வரை 7 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 

தொடர்ந்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் அதன் பயன்பாடு என்னவோ மிகவும் குறைவாக உள்ளது. 

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், நாட்டில் மின்சார வானங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் மிகவும் குறைவாக உள்ளதுதான் எனத் தெரிகிறது. 

வரிச் சலுகைகள், மானியங்களுடன் மின்சார வாகனங்களைப் பெற அரசு ஊக்கப்படுத்தினாலும் சார்ஜிங் உள்கட்டமைப்பு இல்லாததால் மக்கள் இதனை வாங்கத் தயங்குகின்றனர். 

தில்லி உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அதிகம் இருந்தாலும் ஊரகப் பகுதிகளில் குறைவாக அல்லது முற்றிலும் இல்லாதது மின் வாகனங்கள் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது. 

அரசின் திட்டங்கள்

டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட இந்திய நிறுவனங்களும் சரி, கியா, எம்ஜி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களும் சரி மின் வாகனங்களை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. ஏனெனில் உற்பத்தி செய்பவர்களுக்கும், நுகர்வோர்களுக்கும் அரசு சில திட்டங்கள் வாயிலாக சலுகைகளை வழங்கி வருகிறது. 

கனரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் மின்சார வாகனங்களை விரைவாக பயன்படுத்தத் தொடங்குதல் மற்றும் உற்பத்தி (FAME -The Faster Adoption and Manufacturing of Electric Vehicles) என்ற திட்டத்தில் மின் வாகனங்களை வாங்குவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. 

2015ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம்(FAME II) குறித்த அறிவிப்பு 2019 ஏப்ரலில் வெளியானது. 

இதன்படி 2 kWh திறன் பேட்டரி கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு கிலோ வாட்-க்கு(KWh) ரூ. 15,000 அல்லது வாகன விலையில் ரூ. 15,000 மானியம் வழங்கப்படுகிறது. 

5 kWh திறன் பேட்டரி கொண்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு கிலோ வாட்-க்கு(KWh) ரூ. 10,000

15 kWh திறன் பேட்டரி கொண்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு கிலோ வாட்-க்கு(KWh) ரூ. 10,000

250 kWh திறன் பேட்டரி கொண்ட மின் பேருந்துகளுக்கு ஒரு கிலோ வாட்-க்கு(KWh) ரூ. 20,000 என மானியம் வழங்கப்படுகிறது. 

மேலும் மின் வாகனங்கள் வங்கிக் கடன் மூலமாக வாங்கும்பட்சத்தில் வட்டி சலுகை, வருமானவரி சலுகை, சாலை வரி தள்ளுபடி, வாகன பதிவு கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகின்றன. 

மேலும் உள்நாட்டில் மின் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அதன் பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. 

சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை 

நாட்டில் தற்போது 20 லட்சம் மின் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 6,586 சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன. 

மாநில வாரியாக சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை

அந்தமான் நிக்கோபார் - 3
ஆந்திரப் பிரதேசம்- 222
அருணாச்சல பிரதேசம்- 9
அசாம் - 48
பிகார்- 83
சண்டீகர்-6
சத்தீஸ்கர்- 46
தில்லி- 1845
கோவா-44
குஜராத்-195
ஹரியாணா-232
ஹிமாச்சல பிரதேசம்-27
ஜம்மு-காஷ்மீர்-24
ஜார்கண்ட்-60
கர்நாடகம்-704
கேரளம்-192
லட்சத்தீவு-1
மத்திய பிரதேசம்-174
மகாராஷ்டிரம்-660
மணிப்பூர்-16
மேகாலயா-19
நாகாலாந்து-6
ஒடிசா-117
புதுச்சேரி-4
பஞ்சாப்-126
ராஜஸ்தான்-254
சிக்கிம்-1
தமிழ்நாடு-441
தெலங்கானா-365
திரிபுரா-18
தாதர் நகர் ஹவேலி, டாமன் & டையூ-1
உத்தர பிரதேசம்-406
உத்தரகண்ட்-48
மேற்கு வங்கம்- 189

மொத்தம் - 6,586

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com