தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல.. அதற்கும் மேலே

உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் மனிதவளத்தை மேம்படுத்துவதே மிக அவசியம் என்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல..  அதற்கும் மேலே


சென்னை: தமிழகத்தின் தற்போதைய தேவை புதிய மருத்துவமனைகள் அல்ல.. ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் போதுமான உள்கட்டமைப்பு மற்றும் உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யும் மனிதவளத்தை மேம்படுத்துவதே மிக அவசியம் என்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், தேவையான மனிதவளத்தை ஏற்படுத்தி, உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யாமல் புதிய மருத்துவமனைகளைத் திறந்துகொண்டே இருப்பது மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்கிறார்கள் அவர்கள்.

தமிழகத்தில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு 11 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இந்தியாவில் மக்கள் விகிதாசாரத்துக்கு ஏற்ப போதுமான மருத்துவமனைகள் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மருத்துவமனைகளில் 75,000 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் படுக்கை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தமிழக பொது பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ரூ.17,902 கோடி ஒதுக்கப்பட்டது. 

முதுநிலை மருத்துவர்கள் கழக மாநிலத் தலைவர் டாக்டர் பி. சாமிநாதன் இது பற்றி கூறுகையில், தமிழகத்தில் ஏராளமான மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் அவற்றில் இருக்கும் வசதிகளை மக்களுக்கு வழங்க போதுமான மனித வளம் இல்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், இதர சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக அரசு உடனடியாக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதற்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும். 

அதுபோல, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பல்நோக்கு சிறப்பு சிகிச்சைகள் கிடைப்பதில்லை. இதனால், மக்கள் சில குறிப்பிட்ட மருத்துவ சேவைகளைப் பெற நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஊரகப் பகுதிகளிலும், பல்நோக்கு சிறப்பு சிகிசிச்சை வசதிகள் உருவாக்கித் தரப்பட வேண்டும் என்கிறார்.

தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சமூக சமநிலை கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், இதனை முற்றிலும் ஆமோதிக்கிறார். தமிழக அரசு முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்குச் செல்லவைக்கும் திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதற்கு மாறாக, உடனடியாக அந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே கிடைக்க வழிவகை செய்யும் வகையில், உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்குவதில்தான் அக்கறை செலுத்த வேண்டும் என்கிறார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டால், உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகளும் நடத்தப்படும் வாய்ப்பு உருவாகும் என்று வலியுறுத்துகிறார்.

2022 - 23ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு அறிவித்தபடி, குழந்தைப்பேறு சிகிச்சை மையங்களை அரசு மருத்துவமனைகளில் அரசு திறக்க வேண்டும். கடந்த பட்ஜெட்டில் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரியிலும் குழந்தைப்பேறு சிகிச்சை அமையங்களைத் திறக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு பணியில் அமர்த்தி வருகிறது. இதனால் தரமான சேவை கிடைப்பதும், ஒப்பந்தத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறினால், மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதும் பாதிக்கப்படுகிறது. சிகிச்சையில் ஏதேனும் தவறுகள் நேர்ந்தாலும் யாரையும் பொறுப்பேற்கச் செய்ய முடியாது என்றும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் கழகத் தலைவர் டாக்டர் கே. செந்தில் இது பற்றி கூறுகையில், அரசு மருத்துவமனைகளுக்கு போதுமான மனிதவளம் தான் தற்போதைய தேவை. அதிக நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு போதுமான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்றால் மருத்துவமனைகள் மட்டும் போதாது, அதில் மனித வளம் தேவையான அளவில் இருப்பதும் அவசியம் அதனை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com