பேருந்தில் படியில் நின்ற மாணவர்களை அடித்து இறக்கிவிடும் ரஞ்சனா. 
பேருந்தில் படியில் நின்ற மாணவர்களை அடித்து இறக்கிவிடும் ரஞ்சனா. 

படியில் பயணம்! பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிட்ட அதிரடி பெண் கைது!

மாநகர்ப்  பேருந்திலிருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை அடித்து இறக்கிவிட்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரைத் திட்டியதாகவும் அரசு மாநகரப் பேருந்தில் படிக்கட்டிலும் கூரையிலும் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர்களை அடித்ததாகவும் சின்னத் திரை நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நகரில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாநகரப் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் மேல்கூரையில் ஏறிக்கொண்டும், பக்கவாட்டுக் கம்பிகளில் தொங்கியபடியும் மாணவர்கள் பயணம் செய்வது சர்வ சாதாரணமான காட்சிகள் (பள்ளி, கல்லூரி நேரங்களை மாற்ற வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி  நேரங்களில் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்).

இப்படியாகத் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களைப் பார்த்து மக்கள் பதறினாலும் யாரும் எதுவும் கூறவோ, கண்டிக்கவோ முன்வருவதில்லை. அவ்வப்போது இந்த மாணவர்களில் யாராவது விழுந்து சாவதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. காயமுறுவோர் பற்றிக் கணக்கு வழக்கு இல்லை.

பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் மாணவர்கள் இப்படித் தொங்கிக் கொண்டுவருவதைப் பெரும்பாலும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அப்படியே அவர்கள் சொன்னாலும்கூட மாணவர்கள் யாரும் கேட்பதுமில்லை. மிகச் சில ஓட்டுநர்கள் மட்டும் மாணவர்கள் தொங்கிக்கொண்டிருந்தால். பேருந்தையே நகர்த்தாமல் அப்படியே நிறுத்திவிடுவார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே சலித்துவிட்டார்கள் எனலாம்.

ஆனால், பயணங்களும் விபத்துகளும் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

சமுதாயத்தில் குற்றச்செயல்கள் குறைவாக நடப்பதற்குக் காரணம் என்ன? காவல்துறையினர் வந்துவிடுவார்கள், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாலா? நிச்சயமாக அல்ல. தார்மிக அச்சம்தான். அருகிலேயே இருக்கும் மக்கள் குற்றச் செயலை அனுமதிக்க மாட்டார்கள், தட்டிக் கேட்பார்கள், கட்டிவைப்பார்கள், பிறகு காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள் என்கிற அச்சத்தால்தான் குற்றச்செயல்கள் நடப்பதில்லை அல்லது குறைவாக நடக்கின்றன. 

ஆனால், இந்த மாணவர்களின் ஆபத்தான பயண விஷயத்தில் யாருமே – அரசு, காவல்துறை, போக்குவரத்துக் கழகம், பொதுமக்கள், மிக முக்கியமாக அந்தப் பேருந்தில் செல்லும் சக பயணிகள் - அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுடைய பங்கு என்னவென்றே தெரியவில்லை. தொங்கும் இந்த மாணவர்களை இரண்டு முறை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நிறுத்தி, பெற்றோரை வரவழைத்து எழுதிவாங்கி அனுப்பினாலேகூட எல்லாம் சரியாகக் கூடிய சின்ன வாய்ப்பு இருக்கிறது.

அல்லது

மக்களே அல்லது சக பயணிகளே மாணவர்களைக் கண்டித்து இறக்கிவிட்டால் பிரச்னை முடிவுக்கு வரக் கூடும். ஆனால், எல்லாருமே சகித்துக் கொண்டு செல்லப் பழகிவிட்டார்கள். யாருமே ஒரு சொல் கேட்பதில்லை.

இத்தகைய சூழலில்தான், சென்னையில் போரூரிலிருந்து முகலிவாக்கம் செல்லும் பேருந்தில் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவர்கள் பேருந்துக் கூரையின் மேல் ஏறியும் தொங்கிக் கொண்டும் படியில் நின்றுகொண்டு ஆபத்தான முறையிலும் பயணம் செய்வதை பார்த்திருக்கிறார்.

எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்றோ, விழுந்து சாகட்டும் என்றோ, மற்றவர்களைப் போல கவலைப்படாமல், கண்டுகொள்ளாமல் செல்ல நினைக்கவில்லை ரஞ்சனா நாச்சியார் என்ற அந்தப் பெண்.

பேருந்து ஓட்டுநரிடம் சென்று வண்டியை நிறுத்த வைத்து, படியில் தொங்கிக்கொண்டு வந்த பள்ளி மாணவர்களைத் திட்டியும் அடித்தும் கீழே இறங்கச் சொல்லி, இறக்கிவிடுகிறார். (இப்படி படியில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை யாரும் தங்கமே, வைரமே எனக் கொஞ்சி இறக்கிவிட வாய்ப்பே இல்லை!). பேருந்து நடத்துநரையும்கூட திட்டுகிறார். யாரும்மா நீ என்ற கேட்கிற ஒருவரிடமும், போலீஸ் என்றிருக்கிறார். 

இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை யாரோ ஒருவர் செல்போனில் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பெண் யார் என்று  காவல்துறையினர் விசாரித்ததில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னத் திரை நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரியவந்தது.

சனிக்கிழமை காலை அவருடைய இல்லத்திற்குச் சென்று விசாரணைக்காக அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், பின்னர் பேருந்து நடத்துநர், ஓட்டுநரை பொதுமக்கள் மத்தியில் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பள்ளி மாணவர்களை அடித்ததாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ரஞ்சனாவைக் கைது செய்துள்ளனர்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் பலரும் இந்தப் பெண்ணின் - ரஞ்சனாவின் செயலை பாராட்டி வருகின்றனர். சமூக ஆர்வலர்களும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். 

மாணவர்கள் ஆபத்தான விதத்தில் பயணம் செய்வதைத் தனி ஒரு பெண்ணாகத் தடுத்து நிறுத்தி, சமூகத்தில் அக்கறை கொண்ட ஒருவராகவே செயல்பட்டிருக்கிறார். யாரும் அழைத்துப் பாராட்டுவார்கள் என்பதற்காக அல்ல. எல்லாரையும் போல அவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றிருக்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை. காவல்துறையும் ஓட்டுநரும் நடத்துநரும் செய்யத் தவறிய வேலையைத்தான் தனிநபராக அந்தப் பெண் செய்திருக்கிறார்.

மாணவர்களைத் திட்டும்போது நாயே என்ற சொல்லையும் ஒருமையிலும் பேசியிருக்கிறார். ஓட்டுநர், நடத்துநரைத் திட்டியிருக்கிறார். இதை அவர் தவிர்த்திருக்கலாம். 

இதற்காகக் காவல்துறையினர் அவரை கடுமையாக எச்சரித்து வேண்டுமானால் அனுப்பியிருக்கலாம். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குத் தொடுப்பதும் கைது செய்து சிறையில் அடைப்பதும் மிகவும் அதிகம் என்கிறார்கள் சாதாரண மக்கள்.

படியில் பயணம் நொடியில் மரணம் என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு, ஊருக்குள் எங்கே, என்ன தவறு நடந்தாலும் கண்டுகொள்ளாமல் செல்வதுதான் சாதாரண மனிதர்களுக்கு  நல்லது போல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com