அது அப்போ, இது இப்போ! ரஜினியின் 'அன்பான சமூக விரோதிகள்'!

தூத்துக்குடியில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த இரண்டு முரண்பட்ட பேட்டிகள் பற்றி...
தூத்துக்குடியும் ரஜினிகாந்த்தும்!
தூத்துக்குடியும் ரஜினிகாந்த்தும்!

இயக்குநர் ஞானவேல் இயக்கும் இன்னமும் பெயர் வைக்கப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்புவதற்காகத் திங்கள்கிழமை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ரஜினிகாந்த், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியவைதான் கவனிக்கத் தக்க வரிகள்:

“புவனா ஒரு கேள்விக் குறி படப்பிடிப்பிற்காகக் கடந்த 1977 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களுக்கு வந்திருக்கிறேன். அதன் பிறகு படப்பிடிப்பிற்காக இப்போதுதான் வருகிறேன். இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாக உள்ளனர். ஆனால், அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாக உள்ளது.”

படப்பிடிப்புக்காகத்தான் 1977-க்குப் பிறகு இப்போது வந்திருக்கிறார்  ரஜினிகாந்த். ஆனால், உள்ளபடியே அரசியலுக்காக அல்லது அரசியல் மாதிரி ஏதோவொன்றுக்காக இதே தூத்துக்குடிக்கு 2018 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியும் வந்திருந்தார்.

ஒட்டுமொத்தமாக அந்தப் பயணத்தையே மறக்க விரும்புகிறாரோ அல்லது  அந்தப் பயணத்தில் தாம் பேசியதையெல்லாம் மறக்க விரும்புகிறாரோ  தெரியவில்லை.

தமிழக வரலாற்றில் மறக்க முடியாத துயர வடுவான -  தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது காவல்துறையினர் கண்மூடித்தனமாக நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றவர்களைப்  பார்த்து நிதியுதவி வழங்குவதற்காக வந்திருந்தார்  நடிகர்  ரஜினிகாந்த்.

தூத்துக்குடியில் வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்ல, சமூக விரோதிகள் என்ற மிகப் பெரும் கண்டுபிடிப்பை விசாரணைக்கு முன்னரே  செய்தியாளர்களிடம் அறிவித்தார் ரஜினிகாந்த்.

மேலும் அவருடைய கருத்துகள்:

"நல்ல காரியத்துக்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் புனிதப் போராட்டம் ரத்தக் கறையில் முடிந்துள்ளது. தூத்துக்குடி போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டது சாமானிய மக்கள் அல்லர். சில விஷக் கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிட்டனர். அந்த சமூக விரோதிகளை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்துக்கு ஆபத்து. சமூக விரோதிகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரும்புக் கரம் கொண்டு அடக்கிவைத்திருந்தார்.

"தமிழகம் போராட்ட பூமியாக இருந்தால் யாருக்கும் எந்தத் தொழில் வாய்ப்பும் கிடைக்காது. ஏற்கெனவே விவசாயம் குறைந்துவிட்ட நிலையில் வேலை வாய்ப்பும் இல்லையென்றால் என்ன செய்வது?

"காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டோரின் புகைப்படங்களை வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசின் ஒருநபர் விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை."

சுடுகாடாகிவிடும்

என்ன நினைத்தாரோ, தூத்துக்குடியில் பேசிவிட்டுத் திரும்பியபோது, சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களுடன் பேசிய அவர், மேலும் சூடாகிக் கருத்துகளைக் கொட்டினார்.

"எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகிவிடும். மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாளில் நடந்தது போல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் புகுந்து கெடுத்திருக்கின்றனர்.

"காவல்துறையினரைத் தாக்கியதும் ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதும் குடியிருப்புகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்ததும் இந்த சமூக விரோதிகள்தான். இது எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்க  வேண்டாம். எனக்கு நன்கு தெரியும், அவ்வளவுதான்.

"சமூக விரோதிகள் போலீசாரை அடித்த பிறகுதான் பிரச்சினை  பெரிதாகியுள்ளது. காவல்துறை மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடியாது. எதற்கெடுத்தாலும் போராட்டம் என மக்கள்  இறங்கினால் தமிழகம் சுடுகாடாகிவிடும்."

ரஜினிகாந்தின் பல கண்டுபிடிப்புகளுக்கும் பதிலாக இருந்தது, நாலரை  ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன்  அறிக்கை!

மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ் மற்றும் மூன்று வருவாய்த் துறை அலுவலர்கள் மீதும் போராட்டக்காரர்களைக் கண்மூடித்தனமாகச்  சுட்டுக்கொன்ற காவலர் சுடலைக்கண்ணு, காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட 17 காவல்துறையினர் மீதும் துறைசார்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அருணா ஜெகதீசன் பரிந்துரைத்தார் (இந்த அறிக்கையின்  மீது இதுவரை என்ன செய்திருக்கிறது தமிழக அரசு என்பது தனிக்கதை!).

ரஜினி போன்ற பிரபலங்களுக்கு அவர்  அறிவுரையும் கூறியிருந்தார்:

"நடிகர் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டுச் செயல்படுவார்  என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது பொதுமக்கள் அதைக் கூர்ந்து கவனிப்பார்கள். எனவே அவர், தான் கூறும்  தகவலை உறுதி செய்ய வேண்டும்.

"சமூகத்தில் பல்வேறு விளைவுகளை  ஏற்படுத்தும் கருத்து ஒன்றை அவர் கூறியிருக்கிறார். அவர் தகவல்களைக் கூறுவதற்கு முன்பாக அவற்றைச் சரிபார்ப்பது நல்லது.

"பிரபலங்கள் கூறும்  கருத்துகள் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த வாய்ப்புள்ளது. அவை இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. மாறாக அதிகமான  பிரச்சினைகளை உருவாக்கும்.

"பிரபலங்கள் நிதானத்துடனும்  பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறுவதைப் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க  வேண்டும்".

தூத்துக்குடியில் தற்போது, இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள், என்று மக்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் தந்துள்ள நடிகர்  ரஜினிகாந்த்திடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் புகுந்த  'அன்பான சமூக விரோதிகள்' பற்றியும் நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிவுரைகள் பற்றியும் யாராவது கேள்வி கேட்டார்களா? எனத் தெரியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com