'வந்தே பாரத்'துக்குப் பலியாகும் வைகை எக்ஸ்பிரஸ்!

புதிதாகத் தொடங்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக எக்ஸ்பிரஸ் காரணமாக பாதிக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் பற்றி...
'வந்தே பாரத்'துக்குப் பலியாகும் வைகை எக்ஸ்பிரஸ்!

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் முதன்முதலாக சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயிலை செப். 24 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காணொலி வழியே பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.

புதிய ரயில் வசதி கிடைக்கிறதே என்று மகிழ்ச்சியடைய முடியாத நிலையை ரயில் பயணிகளிடையே ஏற்படுத்தியிருக்கிறது வைகை எக்ஸ்பிரஸ் நேரத்தில் செய்யப் போகும் மாற்றம்! 

வந்தே பாரத் ரயிலின் பயண நேரத்தைக் கையாள்வதற்காக  மதுரை - சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேர அட்டவணையில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 15 நிமிடங்களை தெற்கு ரயில்வே சில மாற்றங்களைச் செய்திருக்கிறது.

இதுபற்றிய வைகையின் பயண கால அட்டவணை ரயில்வேயின்  தேசிய ரயில்கள் விசாரணை முறைமை (National Train Enquiry System - NTES) என்ற  அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 46 ஆண்டுகளாக மதுரை மக்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயிலாக   ஓரளவு குறைவான கட்டணத்தில் வைகை எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ், மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2.25  மணிக்கு, அதாவது, 7 மணி 15 நிமிடங்களில் சென்னை சென்றடைகிறது.

எதிர்த்தடத்தில் சென்னையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு, அதாவது, 7 மணி 25 நிமிடங்களில் மதுரை சென்றடைகிறது. 

புதிய மாற்றத்தின்படி தற்போதைய பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட வேண்டும் என்பதற்காக வரும்  அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் காலை 6.40-க்கே புறப்பட்டு பிற்பகல் 2.10 மணிக்கு அதாவது 7 மணி 30 நிமிடங்களில்  சென்னை வந்தடையும். சென்னையிலிருந்து வழக்கம்போல பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.30 மணிக்குதான் அதாவது 7 மணி நேரம் 40  நிமிடங்களில் மதுரையைச் சென்றடையும்.

கடந்த ஆகஸ்ட்15 ஆம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தனது 46-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரத்தை 7 மணி நேரமாகக் குறைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாகவும் தெற்கு ரயில்வே படிப்படியாக நிறைவேற்றும் என்றும் மக்கள்  எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில்தான், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்காக ஏற்கெனவே சென்றுகொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரத்தை மேலும் 15 நிமிடங்கள் அதிகரித்திருக்கின்றனர்.

செப். 25 மாலை  6.32-க்கு திருச்சி வந்த வைகை எக்ஸ்பிரஸ் (12635) அங்கிருந்து 6.45-க்கு புறப்பட்டிருக்க வேண்டும். மாறாக, சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலுக்காக அரை மணி நேரம் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலைத் திருச்சியில்  நிறுத்திவைத்து 7.05 மணிக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

இரண்டு தடங்களிலும் இதேபோன்றுதான் வந்தே பாரத் ரயிலுக்காக வைகை  எக்ஸ்பிரஸ் ரயில் தடுக்கப்படுகிறது என்று ரயில் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கெனவே, வைகை எக்ஸ்பிரஸ் இரவு 9.15 மணிக்கு மதுரை வந்து சேரும் நிலையில் மதுரையின் புறநகர் பகுதிகளுக்கோ அருகிலுள்ள மாவட்டங்களுக்கோ செல்லக் கூடியவர்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். சற்று முன்னதாக மதுரை வந்து சேர்ந்தால் நல்லதென எதிர்பார்க்கின்றனர்.

புதிய திட்டத்தின்படி வைகை வந்து சேருவது மேலும் தாமதமாவதால்  பயணிகள் கூடுதல் இன்னலுக்குதான் ஆளாவார்கள். 

எனவே,  இந்த நேர அட்டவணையை மீண்டும் பழைய முறையில்  மாற்றியமைத்து, வைகை எக்ஸ்பிரஸின் பயண நேரத்தை முன்னர்  இருந்தவாறே திட்டமிட வேண்டும்.

சென்னையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண  அட்டவணையில் ஏற்கத்தக்க மாற்றம் செய்து மதுரைக்கு 8.30 மணிக்குள் வந்து சேர்ந்தால் மதுரையிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்றும் மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏழை  எளிய மக்கள் நினைத்தும் பார்க்க முடியாத அதிஉயர் கட்டணத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் அதிவேக ரயிலுக்காக எல்லோரும் இயல்பான கட்டணத்தில் எளிதில்  சென்றுவந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸில் கைவைப்பதா? என்பதுதான் பெரும் கேள்வி.

இந்த அதிவேக வந்தே பாரத் ரயிலுக்காக இன்னும் வேறு  எந்தெந்த ரயில்களின்  நேரங்களில் கைவைக்கப் போகிறார்கள் என்பது பற்றி உடனடியாகத் தெரியவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com