அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

'மத்தியில் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.'
அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

தமிழக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 10 ஆவது முறையாக களம் காண்கிறார். தேர்தல் பரப்புரையின் இடையே 'தினமணி'க்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

தேர்தல் பரப்புரைக்கு நீங்கள் செல்லும் இடங்களில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஏற்கெனவே நான் மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த பல திட்டங்கள், கடந்த 5 ஆண்டுகளில் முடங்கியுள்ளன. நான்குவழிச் சாலைத் திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அரசின் எந்த திட்டப் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. குமரி மாவட்டம் இயற்கை வளம் மிகுந்த மாவட்டம். இந்த மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்பட்டு, மலைகள் உடைக்கப்பட்டு கேரள மாநிலத்துக்கு கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

கனிம வள கடத்தலைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மாநில அமைச்சரோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்களவை உறுப்பினர் கனிம வள கடத்தல் பிரச்னை மட்டுமல்ல, தொகுதியின் எந்தப் பிரச்னையிலும் கவனம் செலுத்தாமல், அவரது சொந்தப் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி
அதிகாரம், பண பலத்தை மீறி வெல்வோம்: பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி

அது உங்களுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

திட்டப் பணிகளின் தேக்கத்தால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மீது கோபத்திலும், வெறுப்பிலும் உள்ளனர். இது மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

10-ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள், இதற்கு முந்தைய தேர்தல்களுக்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

குமரி மாவட்ட மக்கள் தற்போது தெளிவாக உள்ளார்கள். மாவட்டத்தின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தில் பொதுவாக மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாவட்டத்தின், தொகுதியின் வளர்ச்சியில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு என்ன, அதற்கான அவர்களது முன்னெடுப்புகள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்துதான் வாக்களிப்பார்கள். அது குறித்து அவர்கள் கேள்வியும் எழுப்புவார்கள். அதே போன்ற ஒரு நிலை தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு வளர்ச்சிதான் தேவை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த மாற்றம் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இது எங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

நீங்கள் கடந்த தேர்தலில் தோற்றதால் நான்குவழிச் சாலைத் திட்டப் பணிகளை முடக்கியதாக திமுக, காங்கிரஸ் தரப்பில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளதே...

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நான் கொண்டுவந்த திட்டத்தை நானே எப்படி முடக்குவேன்? மாவட்ட வளர்ச்சியில் திமுக, காங்கிரஸ் கட்சியினரின் போதிய அக்கறையின்மை, அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால்தான் நான்குவழிச் சாலைப் பணிகள் முடங்கின. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முழு நேரம் மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பகுதிநேரமாக பணியாற்றினால் எப்படி பணிகள் தொய்வின்றி தொடரும்? மக்கள் நலப் பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தாமல் சொந்தப் பணிகளில் ஈடுபட்டதால்தான் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைப்பது குறித்து நீங்கள் உங்கள் வாக்குறுதியில் குறிப்பிடவில்லையே...

கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மாவட்ட மக்களின் 60 ஆண்டுகாலக் கனவு. கடந்த காலங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தபோது பொதுமக்களை தவறாக வழிகாட்டி, இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டத்தால் மற்ற பல திட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே, துறைமுகம் எப்போது தேவை என்று மாவட்ட மக்கள் நினைக்கிறார்களோ அப்போது அந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று நினைக்கிறேன்.

சிறுபான்மையினரின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்காது என்று பொதுவாக ஒரு கருத்து நிலவுகிறதே...

மத்தியில் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். எங்கும் அவர்களுக்கு எதிராக எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. சிறுபான்மை, பெரும்பான்மை என்று எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவுவதில்லை, நிதியுதவி வழங்குவதில்லை, தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்கிற திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு உங்களின் பதில் என்ன?

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்குவழிச் சாலையாக இருக்கட்டும், மருத்துவக் கல்லூரியாக இருக்கட்டும், சாலைகள், பாலங்கள் என எந்தத் திட்டமாக இருந்தாலும் அவை அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமைந்தவை. இதையெல்லாம் மக்கள் எண்ணிப் பார்த்து பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

வாக்காளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

பாஜகவை பொருத்தவரை மதத்தின் பெயரிலோ, ஜாதியின் பெயரிலோ, மொழியின் பெயரிலோ அரசியலுக்காக நாங்கள் மக்களை பிரித்துப் பார்க்க மாட்டோம். எல்லா மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் நாங்கள் செய்வோம்.

கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்கள் வாக்கு மாவட்டத்தின் வளர்ச்சிக்கா அல்லது வீழ்ச்சிக்கா என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள். அதேபோல் முதல் தலைமுறை வாக்காளர்கள், தங்களது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு வாக்களிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com