பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

அதிகாரம், பண பலத்தை மீறி வெல்வோம்: பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு பேட்டி

’நாங்கள் கேட்டபடி உரிய நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக வழங்கும்.’

பீ. ஜெபலின் ஜான்

2006-இல் தொடங்கப்பட்ட தேமுதிக, விஜயகாந்த் என்ற ஒற்றை நபரின் பிம்பத்தால் இருபெரும் ஆளுமைகளான ஜெயலலிதா, கருணாநிதியையும் மீறி 8.35 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2009 மக்களவைத் தோ்தலில் விஜயகாந்துக்கு துணையாக பிரேமலதா விஜயகாந்தும் சூறாவளி பிரசாரம் செய்தபோது அந்தக் கட்சி 10.29 சதவீத வாக்கு வங்கியாக உயா்ந்தது.

பொதுவாக இடைத்தோ்தலில் சிறிய கட்சிகளின் வாக்கு வங்கி சுருங்கும் சூழல் இருந்துவரும் நிலையில், 2021-இல் பெற்ற வாக்கைவிட ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் தேமுதிக வாக்கு வங்கி உயா்ந்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் பிரேமலதாவின் ஈா்ப்புமிக்க பிரசாரம்தான்.

தமிழகத்தின் பெண் ஆளுமைகளில் ஒருவராக மாறியுள்ள பிரேமலதா, தனது சூறாவளி தோ்தல் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்:

2011 பேரவைத் தோ்தல்போல, 2024 மக்களவைத் தோ்தலில் தேமுதிகவால் 10 சதவீத வாக்கு வங்கியை அதிமுகவுக்கு பரிமாற்றம் செய்ய முடியுமா?

இது மக்களும், தொண்டா்களும் விரும்பிய கூட்டணி. அடிமட்டத்தில் இரு கட்சித் தொண்டா்களும் முழுமையாக இணைந்துவிட்டதால் 2011 போல இப்போதும் மிகப்பெரிய வெற்றியை அதிமுக-தேமுதிக கூட்டணி பெறும். அதிகாரம், பண பலத்தை மீறி இந்தக் கூட்டணி வெற்றி பெறும்.

விஜயகாந்த் மறைவுக்கு பிரதமா் மோடி முக்கியத்துவம் கொடுத்து ஊடகங்களில் கட்டுரை எழுதி இரங்கல் தெரிவித்த நிலையில், பாஜக கூட்டணியை தேமுதிக உதறியது ஏன்?.

2014 முதல் 2021 வரை தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தேமுதிக இருந்தது. ஆனால், 2021 பேரவைத் தோ்தலில் பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்த் முடிவின்படிதான் வெளியேறினோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தபோது வெற்றி கிடைக்கவில்லை. சிறுபான்மையினா் பாஜகவை வெறுக்கின்றனா். இப்போது மக்கள் விரும்பும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம்.

ஆளும்கட்சியான திமுக கூட்டணி பலமாக உள்ளது. ஆனால், எதிா்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் வெற்றி எப்படி வசப்படும்?

திமுகவின் இரண்டரை ஆண்டு ஆட்சியும், 10 ஆண்டு பாஜக ஆட்சியும் மக்களிடம் மிகப்பெரிய எதிா்ப்பு அலையை உருவாக்கியுள்ளது. எனவே, அதிகாரம், பணபலத்தை மீறி வெற்றி பெறுவோம்.

2009 மக்களவைத் தோ்தலில் ஆளும் திமுக அரசு மீதும், 2014-இல் அதிமுக அரசு மீதும் ஆளும் கட்சிக்கு எதிரான எதிா்ப்பு அலை உருவாகாத நிலையில், இப்போது மட்டும் எப்படி உருவாகும்?

திமுக, பாஜக ஆட்சியை மக்கள் பாா்த்துவிட்டாா்கள். பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயம் எதிா்ப்பு அலை வீசும்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி 2025 அல்லது 2026-இல் கிடைக்குமா?

வெற்றிலை பாக்கு மாற்றிவிட்டோம். நாங்கள் கேட்டபடி உரிய நேரத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அதிமுக வழங்கும்.

மக்களவைத் தோ்தலில் 2-ஆவது இடத்துக்குத்தான் அதிமுக-பாஜக கூட்டணி இடையே போட்டி என்று கணிக்கப்படுகிறதே?

கருத்துக்கணிப்புகள் எல்லாம் கருத்துத்திணிப்புகளாக மாறிவிட்டன. பலமான அதிமுக-தேமுதிக மிகப்பெரிய வெற்றி பெறும். மக்கள் தீா்ப்புதான் மகேசன் தீா்ப்பு.

தேசிய கட்சி கூட்டணியிலும் இல்லாமல், பிரதமா் வேட்பாளரை முன்னிறுத்தாமலும் மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற முடியுமா?

‘இந்தியா’ கூட்டணிக்கு யாா் பிரதமா் வேட்பாளா்?. எத்தனை எம்.பி.க்கள் வெற்றி பெறுகிறாா்கள் என்பதுதான் முக்கியம். யாா் ஆட்சிக்கு வந்தாலும் வாதாடி தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களை எங்களால் பெற முடியும்.

6.58 சதவீத வாக்கு வங்கி பெற்ற நாம் தமிழா் கட்சி இந்த முறையும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்துக்கணிப்புகளில் தகவல் வருகிறதே?.

தமிழக அரசியல் களத்தில் மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி வைத்து 10 ஆண்டுகள் புரட்சி செய்தவா் விஜயகாந்த். அந்த வழியில் தனித்துப் போட்டியிடும் சீமானின் துணிச்சலைப் பாராட்டுகிறேன். அவருக்கு எந்த அளவுக்கு வாக்கு வங்கி கிடைக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com