
வைத்திரி: ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, ஓரிடத்தில் நிலைக்குத்திப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கிறது வயநாடு மாவட்டத்தில் இயங்கி வரும் நிவாரண முகாம்கள்.
ஜூலை 30ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட மிகப் பயங்கர நிலச்சரிவில் சிக்கி, உயிரோடு மீட்கப்பட்டதன் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல், கண் முன் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் ஏராளமான குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
அதில் சிலரை இந்த இயற்கைப் பேரிடம் ஆதரவற்றவர்களாகவும் ஆக்கிச்சென்றிருக்கிறது.
அதிகாரப்பூர்வ தகவல்படி, நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு திறந்திருக்கும் பல்வேறு நிவாரண முகாம்களில் மட்டும் 533 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் 5 பேர் பெற்றோர் இருவரையும் இழந்துவிட்டவர்கள். இன்னமும் தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதையும் மறுக்கவியலாது. மேலும், 6 குழந்தைகள், தந்தை அல்லது தாயை இழந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும், அவர்களது நெருங்கிய சொந்தங்களுடன் தற்போது உள்ளனர்.
இது குறித்து தகவல்கள் வெளியான நிலையில், கேரளம் மற்றும் இதர மாநிலங்களிலிருந்தும், குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்வது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஆனால், அரசின் விதிமுறைகள்படிதான், தத்தெடுப்பு நடைமுறைகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதுவரை ஏற்கனவே, தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து 1,900 பேர் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அவர்கள் உள்பட பலரும், நிலச்சரிவால் ஆதரவற்று விடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கார்த்திகா அன்னா தாமஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பலரும் நினைக்கிறார்கள், நேரடியாக நிவாரண முகாம்களுக்கு வந்தால் குழந்தைகளை தத்தெடுத்துச் செல்லலாம் என்று. ஆனால் அவ்வாறு செய்ய இயலாது. வயநாடு குழந்தைகளுக்கு என சிறப்பு தத்தெடுப்பு முறைகள் இல்லை. நாடு முழுவதும் பின்பற்றப்படும் தத்தெடுப்பு நடைமுறைகள் உறுதியாகப் பின்பற்றப்படும். தொடர்ந்து பலரும் இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் பல விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே ஆர்வமிருப்பவர்கள் www.cara.wcd.gov.in அல்லது சிஏஆர்ஏ எனப்படும் தத்தெடுப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
தத்தெடுக்க விரும்பும் பெற்றோரின் விவரம், அவர்கள் வசிப்பிடம் என பலவும் ஆராயப்பட்டு நடைமுறைகள் முடிந்தால்தான் தத்தெடுக்க விரும்புவோருக்கு குழந்தைகளை பார்க்கவே அனுமதி கிடைக்கும்.
குழந்தை தேர்வு செய்யப்பட்டதும், அதற்கான சான்றிதழ்கள் தயாரிக்கப்படும். ஆணையம் அனுமதி வழங்கிய பிறகு, பெற்றோரிடம் குழந்தை வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகே மாவட்ட ஆட்சியர், குழந்தையை தத்துக்கொடுப்பதற்கான இறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வழங்குவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.