புடின் எதிர்ப்பு அடையாளமாகும் நவால்னி மனைவி! ரஷிய அதிபர் தேர்தல் நேரத் திருப்பங்கள்

எதிர்ப்பாளர் அலெக்ஸி நவால்னியின் மரணமும் ரஷிய அரசியலில் தொடர் விளைவுகளும்...
அலெக்ஸி நவால்னியுடன் யூலியா நவால்னயா (கோப்பிலிருந்து)
அலெக்ஸி நவால்னியுடன் யூலியா நவால்னயா (கோப்பிலிருந்து) / ஏ.பி.

உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த ரஷிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள ரஷியாவில் அடுத்து என்னென்ன நடக்கப் போகிறது? நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா அவருடைய போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வாரா? செல்ல இயலுமா? உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

 ரஷியாவுக்கான அதிபர் தேர்தல் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரான அலெக்ஸி நவால்னி,  சிறையில் இறந்துவிட்டதாகக் கடந்த வாரம் ரஷிய அரசு அறிவித்தது.

 ரஷியாவில் ஆர்க்டிக் பிரதேசத்திலுள்ள தொலைதூர சிறையொன்றில் அடைக்கப்பட்டிருந்தார் அலெக்ஸி நவால்னி. ரஷிய அரசையும் புடின் நிர்வாகத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தவர், 47 வயதான வழக்கறிஞர்  நவால்னி.

2020-ல் இவருக்கு விஷம் செலுத்தப்பட்டது. ஜெர்மனிக்கு சிகிச்சைக்குச் சென்று ஓரளவு நலம் பெற்று மீண்டும் ரஷியா திரும்பிய அவர், 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான தண்டனை விதிக்கப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நவால்னி சிறையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவால்னியை புடின் நிர்வாகம் கொன்றுவிட்டதாக மேற்கு நாடுகளும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.

உயிரிழந்த நவால்னியின் உடலை இரு வாரங்களுக்குத் தர இயலாது என்றும் ரசாயன பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் நவால்னியின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னமும்கூட நவால்னியின் உடல் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. கண்டறியும் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை.

அலெக்ஸி நவால்னியுடன் யூலியா நவால்னயா (கோப்பிலிருந்து)
'நவால்னி படுகொலை செய்யப்பட்டார்': செய்தித் தொடர்பாளர் கீர் யார்மிஷ்

நவால்னியைப் போல அரசைக் கடுமையாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சித் தலைவரான போரிஸ் நெம்ஸ்தோவ், 2015-ல் மாஸ்கோவில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

24 ஆண்டுகளாக ரஷியாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆட்சி செய்துவரும் விளாடிமிர் புடின், அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் மூலம் மீண்டும் அதிபராகி மேலும் 6 ஆண்டுகள் அதிகாரத்தைத் தக்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்.

முழு அதிகாரத்தையும் தன் கைவசம் வைத்திருக்கும் அதிபர் விளாதிமிர் புடினை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடியவர்கள் தடை செய்யப்படுகின்றனர்.

உக்ரைன் போருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் எதிர்க்கட்சித் தலைவரான போரிஸ் நடேஷ்தினின் மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய சூழ்நிலையில்தான் ரஷிய அதிபர் விளாதிமிர் புடினின் மிகப் பெரிய எதிரியாக உருவாகிறார், சிறையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா!

எப்போதும் கணவருக்குப் பின்னாலேயே இருந்து பழக்கப்பட்டவர் யூலியா நவால்னயா. கடந்த வாரத்தில் சிறையில் அலெக்ஸி நவால்னியின் இறந்ததைத் தொடர்ந்து, முன்னரங்கிற்கு வந்து உறுதியெடுத்துள்ளார் - “அலெக்ஸி நவால்னியின் பணிகளை நான் தொடருவேன்!.”

ஒருகாலத்தில் குழந்தைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்வதுதான் தன்னுடைய முதன்மையான பணி என்று சொன்னவர்தான் இந்த நவால்னயா. ஆனால், இப்போது அரசியலில் ஈடுபடப் போவதாக உறுதிபடத் தெரிவித்துள்ள நவால்னயாவின் புதிய பணி வரலாற்றில் மிகவும் குழப்பமான இந்தக் காலகட்டத்தில் ரஷிய எதிர்க்கட்சியை வழிநடத்துவதுதான்.

அலெக்ஸி நவால்னியுடன் யூலியா நவால்னயா (கோப்பிலிருந்து)
ரஷியா நவால்னி மரண விசாரணை நீட்டிப்பு

ரஷியாவில் எதிர்க்கட்சிகள் சிதறுண்டு கிடக்கும் நிலையில், நவால்னியின் மரணம் பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வென்று இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அதிபராகத் தொடர வேண்டும் எனத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்திவரும் விளாதிமிர் புடினுக்கு சவால் விடும் அளவுக்கு, கணவர் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்களை வழிநடத்துவதுடன், எவ்வாறு எதிர்க்கட்சிகளுடன் நவால்னயா இணைந்து செயல்படப் போகிறார் என்பதுதான் பெரும் கேள்வி.

ரஷியாவில் தொடர்ந்து பேச்சு, கருத்து சுதந்திரத்தை, எதிர்ப்புக் குரல்களை  ஒடுக்கிவரும் அதிபர் புடின், எதிர்க்கட்சியினரையும் விமர்சிப்போரையும் சிறைகளிலும் அடைத்து முடக்குகிறார்.

புடினை எதிர்த்து நிற்பது நவால்னயாவுக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, கணவருடன் இணைந்து நின்று அனுபவம் பெற்றவர்தான் நவால்னயா. யூலியாவும் நவால்னியும் 20 ஆண்டுகளுக்கும் முன்னர் திருமணம் புரிந்துகொண்டனர். சோவியத் ஒன்றியம் கலைந்ததற்குப் பிறகு நடந்த பெரிய போராட்டங்களில் கணவருக்குத் தோள்கொடுத்து நின்ற காலத்தில் அடிக்கடி சிறைத் தண்டனைகளையும் சந்தித்தவர் நவால்னயா.

தன்னுடைய கணவரைக் கொன்றுவிட்டார் புடின் என்று குற்றம் சாட்டியுள்ளார் நவால்னயா. ஆனால், ‘ஆதாரமில்லாதது’, ‘தரம் தாழ்ந்தது’ என்று இந்தக் குற்றச்சாட்டை ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்திருக்கிறார்.

விஷம் கொடுக்கப்பட்டதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்ற பிறகு 2021-ல் ரஷியா திரும்பியதும் நவால்னியின் உயிருக்குள்ள ஆபத்து பற்றி அவருடைய மனைவியுடனும் நெருக்கமான குழுவினருடனும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக நவால்னி தம்பதியரின் நீண்ட கால நண்பரும் நவால்னியின் லஞ்ச ஒழிப்பு இயக்கத்தின் இணை நிறுவனருமான விளாடிமிர் அஷுர்கோவ் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் தன் கணவருடைய பணியைத் தொடரப் போவதாக நவால்னயா தெரிவித்திருப்பது ஒரு பெரிய முடிவுதான் என்றார் அவர்.

திருமணத்தின்போது அடித்தளமாக நவால்னி நம்பியிருந்தவர் நவால்னயா. தீவிர அரசியலில் நவால்னயா ஈடுபடுவதில்லை, வெளிப்படையாக வருவதில்லை என்பதிலும் அவர்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருந்தது என்றார் அஷுர்கோவ்.

வெளிநாட்டில் இருந்துகொண்டு நல்லதோர் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது மிகவும் கடினமானதாகவே இருக்கும் எனத் தெரிந்துதான் ஜெர்மனியிலிருந்து ரஷியாவுக்குத் திரும்பினார் நவால்னி.

ஆனால், இன்றைய நிலைமையில் அவருடைய மனைவி நவால்னயாவும் ரஷியாவுக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல, செல்வது அவருடைய பாதுகாப்புக்கு உகந்ததும் அல்ல. கணவர் நவால்னிக்கு நேர்ந்த அதே பிரச்சினைதான், வெளிநாட்டில் இருந்தவாறு தன் கணவருடைய இயக்கத்தை ரஷியாவில் எவ்வாறு நடத்துவது?

கடந்த வெள்ளிக்கிழமை நவால்னியின் மரணம் பற்றிய செய்தி வெளியான சிறிது நேரத்தில் இதேபோன்ற நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை – பெலாரஸின் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்வியட்லானா ஸிகானௌஸ்காயா - சந்தித்தார் நவால்னயா.

ஸ்வியட்லானா ஸிகானௌஸ்காயாவின் நிலைமையும் இதேதான். 2020-ல் நடைபெற்ற பெலாரஸ் அதிபர் தேர்தலின்போது தன்னுடைய கணவரான, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்யார்கே ஸிகானௌஸ்கி சிறையில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தவர் ஸ்வியட்லானா ஸிகானௌஸ்காயா. பெலாரஸில் நீண்ட காலமாக அதிபராக இருக்கும் அலெக்சாந்தர் லுகாஷென்கோவுக்கு எதிராகத் தீவிரமாகவும் வெற்றிகரமாகவும் பிரசாரம் செய்தார் ஸ்வியட்லானா. ஆனால், மேற்கு நாடுகள் எல்லாம் மோசடியாக நடந்த தேர்தல் என விமர்சித்தபோதிலும், தேர்தலில் தாமே மீண்டும் வெற்றி பெற்றதாக அதிபர் அறிவித்துவிடவே, புதிய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு நாட்டைவிட்டே வெளியேறிவிட்டார் ஸ்வியட்லானா.

இந்தச் சந்திப்பின்போது, ஒரு சொல்கூட பேசிக்கொள்ளாமலே எங்களால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டுள்ள ஸ்வியட்லானா ஸிகானௌஸ்காயா, தன்னுடைய கணவர் நிலை பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது, அவர் உயிருடன்தான் இருக்கிறாரா, இல்லை, இறந்துவிட்டாரா, எதுவும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏறத்தாழ நாலாண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டிலிருந்தவாறு செயல்பட்டு வரும் ஸ்வியட்லானா, இவ்வாறு செயல்படுவது மிகவும் சிரமம்தான். தாய்நாட்டிலுள்ள மக்களுடன் தொடர்பை இழந்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ரஷியாவில் - பெரும்பாலான ரஷியர்கள் இன்னமும் அரசுக்கு சொந்தமான அச்சு – காட்சி ஊடகங்களின் வழிதான் செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நிலைமையில், இது மிக மிகக் கடினம்.

ரஷியாவின் மிகவும் புகழ்பெற்றவராக – அனைவரையும் கவரும் தன்மைகொண்ட - எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் அரசுத் தொலைக்காட்சிகளில் ஒருபோதும் அலெக்ஸி நவால்னி காட்டப்பட்டதில்லை. அவருடைய மரணச் செய்தியேகூட துணுக்காகவே தெரிவிக்கப்பட்டது.

அனேகமாக, நவால்னயா விஷயத்திலும் இதே அணுகுமுறையைத்தான் – அரசுக்குச் சொந்தமான ஊடகங்களில் நவால்னயா பற்றிய செய்திகளை முற்றிலுமாக மறைத்துவிடுவதன் மூலம் - ரஷிய அரசு மேற்கொள்ளும் எனக் கருதப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷியா போரைத் தொடங்கிய பிறகு ரஷியாவுக்குள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்துபோய்விட்டன. பேச்சு சுதந்திரம் இறுக்கப்பட்டுவிட்டது. விமர்சிப்பவர்கள் சிறையிலிடப்படுகிறார்கள். சாதாரண மக்கள்கூட ஆண்டுக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள்.

நவால்னி மறைவையொட்டி பூக்களை வைத்து அஞ்சலி செலுத்திய நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, புடினுக்கு எதிராக மக்கள் திரளுவதென்பதே – ஒன்றுதிரட்டுவதென்பதே -  சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது.

நவால்னியின் மறைவுக்குப் பிறகு தலைப்புச் செய்திகளில் நவால்னயா இடம் பெற்றுக்கொண்டிருந்தாலும் இதே நிலையும் இதே வேகமும் இதே ஆர்வமும் தொடர வேண்டும். ரஷியாவுக்குள் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நவால்னி ஆதரவாளர்களை அப்படியே கலைந்தோ, கலகலத்துப் போய்விடாமலோ, ஒருங்கிணைத்து வைத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கவுன்சில் உறுப்பினர்களைக் கடந்த திங்கள்கிழமை சந்தித்தார் நவால்னயா. ரஷியாவில் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் முடிவுகளை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அங்கீகரிக்கக் கூடாது; புடினுக்கு நெருக்கமானவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும், நாட்டைவிட்டு வெளியேறி பிற நாடுகளில் வசிக்கும் ரஷியர்களுக்கு மேலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக மேற்கு ஊடகங்களிலும் இணையதள - சமூக ஊடகங்களில் நவால்னியின் லஞ்ச ஒழிப்பு இயக்கம் சிறந்த இடத்தைப் பெற்றுவந்த போதிலும் ரஷியாவுக்குள், ரஷிய மக்களிடையே அந்தளவுக்கு பரந்த ஆதரவுத் தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. அரசியல் மாற்றத்தை உருவாக்குவது பற்றியோ, எப்படிச் செயல்படுவோம் என்கிற உத்தியோ இன்னமும் உருப்பெறவில்லை.

பெலாரஸின் ஜனநாயகத் தலைவராகப் பல நாடுகளால் கருதப்படும் ஸ்வியட்லானா ஸிகானௌஸ்காயா, ஜனநாயக அமைப்புகளைக் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிடுவதுடன், பெலாரஸிலுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார். இடைக்கால அமைச்சரவை, அனைத்துக் கட்சிகள் மற்றும் அனைத்து இயக்கங்களுக்கான தளங்கள் எல்லாமும் இவற்றில் அடங்கும். இவற்றையே நவால்னயாவும் செய்வது சரியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷியாவிலுள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கூடிய சக்தியாக நவால்னயா இருப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அஷுர்கோவ், அவர் பெருமதிப்புப் பெற்றவராக இருக்கிறார் என்றார்.

அவர் முன் இருக்கும் சவால்கள் கடினமானவைதான் என்றாலும், கணவரை இழந்த துயரத்திலும் அவருடைய உடலைப் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தாலும், அவரால் வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிக்க முடியும் என்கிறார் அஷுர்கோவ்.

அலெக்ஸியைக் கொன்றதன் மூலம், என்னில் பாதியை, என் இதயத்தில் பாதியை, என் ஆன்மாவில் பாதியைக் கொன்றிருக்கிறார் புடின் என்று குறிப்பிடும் யூலியா நவால்னயா மேலும் சொல்கிறார்: ஆனால், இன்னமும் என்னிடம் மற்றொரு பாதி இருக்கிறது, அதைக் கைவிடும் உரிமை எனக்கில்லை என அது சொல்கிறது (எனவே, கணவரின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வேன்!).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com