'தேர்தல் பத்திர விவகாரம்: பாஜகவின் ஊழல் வெளிவரும்: தினமணிக்கு சசிகாந்த் செந்தில் பேட்டி

‘தேர்தல் பத்திர நன்கொடை என்ற பாஜகவின் சட்டப்பூர்வ ஊழல் மக்களுக்கு தெரியவரும்.’
சசிகாந்த் செந்தில்
சசிகாந்த் செந்தில்

தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரிய எஸ்பிஐ மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஜூன் 30 வரை கால அவகாசம் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சசிகாந்த் செந்தில்
எஸ்பிஐ மனு தள்ளுபடி; நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்கள்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம்

இந்த தீர்ப்பு குறித்து தினமணி இணையதள செய்திப் பிரிவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டி:

கே: தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தததை எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்தல் பத்திர நன்கொடை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பிலேயே மார்ச் 6-க்குள் தரவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறியிருந்தனர். இதில், புதிதாக எடுக்க வேண்டிய தகவல்கள் எதுவும் இல்லை. வங்கியிடம் உள்ள தரவுகளை மக்கள் மத்தியில் சமர்பிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு. தற்போது காலஅவகாசம் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நாளை மாலைக்குள் தரவுகளை அளிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பை பார்த்து எதற்காக இவர்கள் பயப்படுகிறார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

கே: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஆளும் பாஜக மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வைக்கும் விமர்சனத்துக்கு வலுசேர்க்குமா?

உலகளவில் இந்திய தேர்தல் முறைப் பற்றி விமர்சனம் செய்யப்படுகிறது. அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்காமல், ஒரு கட்சி மட்டும் அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. கார்ப்ரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வாங்கி கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து மிகப் பெரிய ஊழல் செய்துள்ளனர். மக்களின் பணத்தை சுரண்டி கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கொடுத்து எந்தளவுக்கு பாஜக ஊழல் செய்துள்ளது என்பது தற்போது தெரியவரும்.

கே: இந்த தீர்ப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

ஊழலை சட்டப்பூர்வமாக எந்தளவுக்கு பாஜக செய்துள்ளது என்பது மக்களுக்கு தெரியவரும். இந்த பணங்கள் அனைத்து மக்கள் அளித்த ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களுக்கு அளித்த வரியாகத்தான் நாம் பார்க்க வேண்டும். மக்களிடம் இருந்து சுரண்டப்பட்ட பணமாகத்தான் பார்க்க வேண்டும். இது நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com