
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய நபராக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூா் ராணாவை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையே வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் நாடுகடத்தியுள்ளனர் இந்திய அதிகாரிகள்.
அமெரிக்க லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் இருந்த ராணாவை அந்நாட்டு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை மாலை (அமெரிக்க நேரப்படி) அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு இடையே, ராணாவை நாடுகடத்துவது மிகச் சவாலான பணியாக இந்திய அதிகாரிகளுக்கு இருந்தது.
இதற்காக இந்திய வெளியுறவுத் துறை, தேசிய புலனாய்பு முகமை (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) இணைந்து ’ஆபரேஷன் ராணா’வை உருவாக்கினர்.
மூத்த என்ஐஏ அதிகாரிகள் மற்றும் என்எஸ்ஜி வீரர்கள் அடங்கிய குழு ராணாவை அழைத்துக் கொண்டு, தனி விமானம் மூலம் புதன்கிழமை காலை (அமெரிக்க நேரப்படி) லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து புறப்பட்டனர்.
அந்த விமானத்தின் விவரங்கள், விமானத்தின் பயண வழித்தடம், தரையிறங்கும் இடம், நேரம் என அனைத்தும் ரகசியம் காக்கப்பட்டது.
தில்லியில் விமானம் தரையிறங்கும்வரை மும்பையில் இறங்குமா? தில்லியில் இறங்குமா? என்ற குழப்பம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் நீடித்து வந்தது.
விமானத்தின் நிகழ்நேரக் கண்காணிப்பு (லைவ் டிராக்கிங் - Live Tracking) தகவல்கள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. மேலும், உயர்நிலை புலனாய்வு அதிகாரிகள் விமானத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
அதேபோல், பயணத்தின்போது தற்கொலை முயற்சிகள் எதுவும் நடக்காதவாறு ராணாவின் கைகள், என்ஐஏ அதிகாரிகளின் கைகளுடன் சேர்த்து விலங்கிடப்பட்டிருந்தன.
லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து தில்லி வரும் வழியில், எரிபொருள் நிரப்புவதற்காக ஒரு இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கு தரையிறக்கப்பட்டது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
தில்லி பாலம் விமானப் படை தளத்தில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை பிற்பகலில் தரையிறங்கிய விமானத்தில் அழைத்துவரப்பட்ட ராணாவை அதிகாரப்பூர்வமாக என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
பாலம் விமானப் படை தளத்தில் கைது செய்வதற்காகவும் பாதுகாப்புப் பணிகளுக்காகவும் வந்த அனைத்து அதிகாரிகளின் செல்போன்களும் முன்கூட்டியே பாதுகாப்புக்காக அலுவலகத்தில் சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
மேலும், பாலம் விமானப் படை தளத்தின் மாற்று வழியில், உள்ளே இருப்பவரின் முகம் தெரியாதவாறு வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் ராணாவை அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராணாவுக்கு 18 நாள்கள் என்ஐஏ காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பலத்த பாதுகாப்புடன் என்ஐஏ தலைமை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராணாவிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபரேஷன் ராணா, இந்திய உளவுத் துறை மற்றும் பாதுகாப்புப் படையின் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படுகிறது.
தஹாவூா் ராணா யார்?
கடந்த 2008-ஆம் ஆண்டு, நவம்பரில் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் 166 போ் உயிரிழந்தனா். 238 போ் படுகாயமடைந்தனா்.
இதில் மூளையாகச் செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.
கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணாவுக்கு லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஹா்கத்-அல்-ஜிஹாதி இஸ்லாமி உள்பட பாகிஸ்தானைச் சோ்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளது.
ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் மூலம்தான், மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு உளவு - திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா்.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் பல ஆண்டுகளாக மத்திய அரசு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கியது. ஆனால், நாடு கடத்தலுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை ராணா தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், நாடு கடத்துவதற்கு எதிராக ராணா தாக்கல் செய்த மனுக்களை அமெரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது. இதையடுத்து, அவா் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சிறப்பு விமானத்தில் வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.