சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

டேட்டிங் மற்றும் சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் மூலம் மோசடியில் ஈடுபடும் ஆடம்பர கேலிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்கள் பற்றி..!
சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!
Published on
Updated on
2 min read

இளம் பெண்களை வைத்து வாடிக்கையாளர்களைப் பெருக்கும் நோக்கில் சில ஆடம்பர கேலிக்கை விடுதிகள் மற்றும் உணவகங்கள் புதிய மோசடி முறையைக் கையிலெடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது. 

மும்பை போன்ற பெருநகரங்களில் கல்லூரி பெண்களை பகுதிநேர வேலை எனக் கூறி இந்த மோசடியில் ஈடுபட வைக்கின்றனர். அதன்படி இளம் பெண்களை புதிய இன்ஸ்டாகிராம் அல்லது டேட்டிங் ஆப்களில் புதிய கணக்கை உருவாக்கச் சொல்கின்றனர். அந்த புதிய கணக்கிலிருந்து சில ஆண்களுக்கு வலை விரிக்கச் செய்கின்றனர். அப்படி வசதியான ஆண்களைக் குறிவைத்து, அவர்களிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த வலையில் விழும் ஆண்களும் அதை நம்பி, அந்தப் பெண்களுடன் குறுஞ்செய்தியில் ஆரம்பித்து போன்கால் வரை பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இந்த முதல்படி முடிந்த பின்னர், பிடித்த உணவு, பிடித்த பார் என ஆரம்பித்து அவர்களை “டேட்டிங்”கிற்கு அழைக்கிறார்கள்.

இப்படி இரண்டாம் படியும் முடிந்த பிறகு, டேட்டிங் செல்லப்போகும் இடங்களையும் அந்தப் பெண்களே தேர்வு செய்கிறார்கள். அதுதான் அந்த ஆடம்பர பார்கள், அல்லது உணவகங்கள்! தாங்கள் பணிபுரியும் அந்த இடங்களுக்கு அந்த ஆண்களை பிடித்த இடம் எனச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். அங்கு இருக்கும் எல்லா விலையுயர்ந்த உணவிலிருந்து, மதுவரை எல்லாவற்றையும் அந்த ஆணை ஆர்டர் செய்ய வைக்கிறார்கள். இவ்வளவு தூரம் வந்துவிட்டு, கஞ்சத்தனம் காட்டினால் நன்றாக இருக்காது என பல ஆண்கள் இருக்கும் பணத்தையெல்லாம் இங்கு கொட்டி, கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறார்கள். 

எல்லாம் வாங்கி முடித்த பிறகு அந்த ஆணை கட்டணத்தையும் கட்ட வைக்கின்றனர். அந்த கட்டணத்தில் 17 முதல் 20 சதவீத பணம் அந்தப் பெண்ணிற்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதன்பின் அதே ஆணையோ, அல்லது வேறு ஆணையோ இந்த ஹோட்டலுக்கு அழைத்து வரும் பணியை அந்தப் பெண்கள் தொடரவேண்டும்! 

இந்த திடுக்கிடும் நூதன திருட்டு சமீபத்தில்தான் அதிகமாக வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. முக்கியமாக பெங்களூரு,  மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த மோசடிகள் பெருகிவருவதாக தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் எவ்வளவு நகரங்களில் எத்தனை ஆண்கள் இப்படி வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவராத சோகம்!

அமைதியாக இருந்த ஆணுடன், வழியில் வந்து ஒரு பெண் ஆசை வார்த்தைகள் பேசி, அவனை டேட்டிங்கிற்கும் அழைத்தால் அதற்கு “நோ” சொல்லும் ஆண்கள் வெகுக் குறைவுதான். அதிலும், துணை தேடும் போராட்டத்தில் இருக்கும் ஆண்கள் சட்டென உணர்ச்சிவசப்பட்டு இந்த வலையில் எளிதாக விழுந்துவிடுகின்றன. இருக்கும் பணத்தை இழப்பதோடு, இந்த போலி டேட்டிங்-களால் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். 

ஆண்கள் மட்டுமின்றி படிக்கும் பெண்களும் தவறாக வழிநடத்தப்படுவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. படிக்கும் வயதில், குறைந்த நேரத்தில் அதிக பணம் எனும் மாயைக்குள் சிக்கி, வாழ்க்கையில் வழி தவறிப்போகும் வாய்ப்புகள் அதிகமாகும் அபாயமும் இருக்கிறது. அதுமட்டுமன்றி தெரியாத ஆண்களுடன் பழகும்போது அதுவும்கூட பல பிரச்னைகளை உருவாக்கலாம். 

இதுபோன்ற செயல்களில் இளம் பெண்களைப் பயன்படுத்தும் கேலிக்கை விடுதி மற்றும் உணவகங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

ஆகையால், சமூக வலைதளங்களிலும், டேட்டிங் செயலிகளிலும் சந்திக்கும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமானது என்பதையும், படிக்கும் வயதில் பகுதிநேர வேலை என்ற பெயரில் தவறான செயல்களில் ஈடுபடுத்தப்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் இந்தக் கால இளம் வயதினர் புரிந்தாக வேண்டியுள்ளது.

Summary

About luxury hotels and restaurants that engage in fraud through young women on dating and social networking sites..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com