ரயில்வேயின் காகித உறையில்கூட தமிழ் இல்லை!

ரயில்வேயில் தமிழ் மொழி அருகிவருவது குறித்து..
ரயில்வே காகித உறை
ரயில்வே காகித உறைதினமணி
Published on
Updated on
2 min read

ரயில் பயணங்கள்கூட ஏதோ வெளிநாட்டில் பயணம் செல்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது; திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்தியும் ஆங்கிலமும்தான், தமிழில் எதுவும் இல்லை!

நாம் வசிப்பது தமிழ்நாடு, தமிழ்நாட்டிற்குள்ளேயே இருக்கும் ஒரு நகரத்திலிருந்துதான் இன்னொரு நகரத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைக்கூட அருகிலுள்ள பயணிகளை வைத்தோ, நம்முடைய பயணச்சீட்டையே மீண்டும் ஒருமுறை திருப்பிப் பார்த்தோதான் உறுதி செய்துகொள்ள வேண்டும் போல. நிலைமை அப்படியிருக்கிறது.

இப்படி நடப்பதெல்லாமும் நாடாளுமன்றத்திலுள்ள நம் மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது தமிழ்நாடு அரசுக்கோ தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.

ஏற்கெனவே, ரயில்வேயின் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் கடந்து, ரயில் நிலையங்களின் அறிவிப்புகள் எல்லாமுமே மும்மொழித் திட்டத்துக்கு மாற்றப்பட்டுவிட்டன. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்ற வரிசையில்தான் அறிவிக்கப்படுகின்றன.

சென்னை மின்சார ரயில்களுக்குள்ளேயே ஒலிபரப்பாகும் நிலையங்கள் பற்றிய அறிவிப்புகள் எல்லாமும் மும்மொழி பார்முலாதான். இவையெல்லாவற்றையும்கூட ஓரளவில் பொறுத்துக்கொள்ளலாம். ஏனெனில், இப்போது தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலுமே கணிசமான அளவுக்கு வட மாநிலத்தினர் வந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதால், அவர்களுக்கும் உதவியாக இருக்கட்டுமே என்பதால்.

அல்லாமல் இப்போது பெரும்பாலான ரயில்களில் வரும் டிக்கெட் பரிசோதனையாளர்கள் ஹிந்தியிலோ அல்லது ஏதோவொரு வட இந்திய மொழியிலோதான் பேசுகிறார்கள். இங்குள்ள பயணிகள், தமிழிலிலோ, ஆங்கிலத்திலோ பேசினால், தகவல் தெரிவித்தால் அவர்கள் எரிச்சலடைகிறார்கள். தமிழ்ப் பயணிகளுக்கும் பிற மொழிப் பணியாளர்களுக்கும் இடையே தேவையற்ற பதற்றம் நேரிடுகிறது. தமிழ் பேசுகிற ரயில்வே அலுவலர்களின் நடமாட்டம் குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைந்துபோய்விட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் - ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களிலும் ரயில் நிலையங்களின் வேறு பல இடங்களிலும் தமிழ் அறியாதவர்கள் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் மொழி மட்டுமே அறிந்த தமிழ்நாட்டுப் பயணிகளின் நிலைமைதான் இப்போது மிகவும் கவலைக்குரியதாக மாறிக்கொண்டிருக்கிறது.

கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் ஏதோவொரு வகையில் ஹிந்தி பயன்படுத்திக் கொண்டுவிடுகிறது. தமிழ் மட்டுமே அறிந்த தமிழ்நாட்டு மக்கள் இன்னும் எங்கெங்குதான் ஹிந்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், என்னென்ன காரணங்களைச் சொல்லியெல்லாம் அறிமுகப்படுத்துவார்கள் என்று தெரியவில்லை.

இதனிடையே, ரயில்வேயில் ரயில் பெட்டிகளின் கழிப்பறைகள் உள்பட பல இடங்களில் முற்றிலுமாகத் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளை மட்டுமே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

ரயில்களில் குளிர்வசதி கொண்ட பெட்டிகளில் இரு வெள்ளைப் விரிப்புகள் வைத்து வழங்கப்படும் பழுப்புநிற காகித உறைகளில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன. மருந்துக்குக்கூட தமிழ் இல்லை. இத்தனைக்கும் இந்த உறைகளை அச்சிட்டு வழங்கியிருப்பது மதுரை கோட்ட ரயில்வேதான்.

ஏதோ மதுரையிலிருந்து வட மாநிலங்களிலுள்ள நகர்களுக்குச் செல்லும் ரயில்கள் என்றால்கூட ஓரளவு அனுசரித்துக்கொள்ளலாம். ஆனால், சென்னை – மதுரை இடையே சென்றுவரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் போன்ற தமிழ்நாட்டு நகர்களுக்கு இடையே செல்லும் ரயில்களிலேயே ஆங்கிலம், ஹிந்தி மட்டும்தான். தமிழுக்கு இடமில்லை!

இந்தத் தகவல்கள் எல்லாமும் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதில்கூட ரயில்வேக்கு கவலையுமில்லை. அக்கறையுமில்லை. ஹிந்தி தெரியாதா, போ. இவையெல்லாம் மாறி, தமிழ்நாட்டிற்குள் ரயில்வேயின் இதுபோன்ற மக்கள் தொடர்பான அறிவிப்புகளில், அறிவிக்கைகளில் இனிமேலாவது தமிழ் இடம் பெறுமா?

இதையும் படிக்க | ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.