ரயில்களில் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்: நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்?
ரயில்களில் அமருவதற்கு இடம் கொடுக்காமல் இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்களால் பயணிகள் பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் விடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரயில் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.
தொழில் சார்ந்தும் தொழிலுக்காவும் சென்னை, திருநெல்வேலி, மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், தில்லி, மும்பை என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிகள் ரயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள், பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். இதனால் ரயில் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும்.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களும் விடுமுறை அளித்துள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அதிகயளவில் வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் ரயில் நிலையம் கூட்ட நெரிசலில் பரபரப்பாக காணப்பட்டது.
இதனால் வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு ரயிலில் சாதாரண பெட்டியில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிகள் தவித்தனர். அங்கு ஏற்கனவே இடம் பிடித்து இருந்த வட மாநிலத்தவர்கள் அவர்களின் பொருள்கள், உடமைகளை வைத்துக் கொண்டு பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என பயணிக்கும் பயணிகளை யாரையும் அமர இடம் கொடுக்காமலும், அது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் கடும் சிரமத்துக்கிடையே பயணம் செய்தனர்.
இருக்கைகளில் பொருட்களை வைத்துக் கொண்டு குழந்தைகள் முதியவர்கள் அமருவதற்கு கூட இடம் கொடுக்காமல் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட வட மாநிலத்தவரின் செயலைக் கண்ட அந்த ரயிலில் பயணம் செய்த ஒருவர், வடமாநில ரயில் பயணிகளின் இந்த செயலை தனது செல்போனில் விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சிடைய வைத்துள்ளன.
முன்பதிவு பெட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வடமாநிலத்தவர்கள்
சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்வர்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்து பயணிக்கவே விரும்புகிறார்கள். இதனால் பண்டிகை மற்றும் பண்டிகை அல்லாத நாள்களில் முன்பதிவு அதிகமாக நடக்கிறது. முன்பதிவுகள் ஆன்லைனிலேயே முடிந்துவிடுவதால் ரயில் நிலையம் வந்து முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவுதான்.
இந்த நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் முன்னதாகவே வந்து தங்களுக்கான இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறார்கள்.
முன்பதிவு கிடைக்காத பயணிகள் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வந்து ரயில் வந்ததும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கையை பிடித்து அமர்ந்து கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் முன்பதிவு பெட்டி எது, முன்பதிவு செய்யப்படாத பெட்டி எது என்பது கூட தெரியாமல் காலியாக உள்ள பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொண்டு வாக்குவாதம் செய்கின்றனர். அதிலும் வடமாநிலத்தவர்களே அதிகம்.
கடைசி நேரத்தில் ரயில் நிலையம் வரும் பயணிகள் கிடைத்த பெட்டியில் ஏறிக்கொண்டு இருக்கை இருந்தாலும் இல்லை என்றாலும் தரையிலேயே அமர்ந்து கொண்டும் படுத்தும் தூங்கி விடுகிறார்கள்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களிலும் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே. இவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் கண்டு கொள்வதில்லை. வடமாநிலத்தவர்களின் செயல்களால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் இயற்கை உபாதைக்கு செல்வதற்கு கூட சிரமப்படுகிறார்கள்.
எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அனைவரது ரயில் பயணமும் இனிமையாக அமையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?