ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வி.சி. சந்திரகுமார்
வி.சி. சந்திரகுமார்
Published on
Updated on
2 min read

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2021 தமிழக பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெரா தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர். இதில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சாா்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிச.14 (சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக பேரவைச் செயலகம் அறிவித்தது.

இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார்.

ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.

காங்கிஸ் போட்டியிடுமா?

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என கூறியிருந்தார்.

திமுக வேட்பாளர் அறிவிப்பு

இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திமுக போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார் என கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமார் ஏற்கேனவே தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2011 முதல் 2019 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com