ஹூதிக்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்?

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தும் தாக்குதல் குறித்து...
அமெரிக்க கடற்படை
அமெரிக்க கடற்படை AP
Published on
Updated on
3 min read

யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சிப் படை மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரு நாள்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். ஹூதிக்களால் பலன் பெற்றுவரும் ஈரான் மீதும் அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது.

ரஷியா - உக்ரைன், ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருவதால் உலக நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இது பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

இவை ஒருபுறம் இருக்க, தற்போது யேமன் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏன்? என்ன காரணம்?

கப்பல்கள் மீது தாக்குதல்

உலகின் மிகவும் பரபரப்பான வணிக போக்குவரத்து நடைபெற்றுவரும் வழித்தடங்களில் செங்கடலும் ஒன்றாக உள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியே வரும் வணிகக் கப்பல்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 2023 நவம்பர் முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை 100க்கும் அதிகமான வணிக கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஹூதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு கப்பல்களை மூழ்கடித்து 4 மாலுமிகளையும் கொன்றுள்ளனர்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலுள்ள ஹமாஸ் படையினருக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்றும், இஸ்ரேல் ஆதரவுபெற்ற நாடுகளின் கப்பல்களை மட்டுமே குறிவைத்து தாக்குவதாகவும் ஹூதி தலைமை அறிவித்தது.

அவர்களின் இந்த நடவடிக்கை அரபு நாடுகளில் போருக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவான குரலாகவும் மாறியது.

செங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பற்படை விமானம்
செங்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பற்படை விமானம்AP

சமீபத்தில் இஸ்ரேல் - காஸா இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின்போது செங்கடலில் தாக்குதல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த புதன்கிழமை (மார்ச் 13) முதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்குவதாக அறிவித்தது. அதற்கேற்ப இஸ்ரேலும் தற்போது காஸா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

(ஆனால் செங்கடலில் ஹூதி படையின் எந்தவொரு தாக்குதலும் பதிவாகவில்லை)

செங்கடலில் வணிக கப்பல்கள் மீது ஹூதிக்கள் நடத்திவரும் தாக்குதலால் அமெரிக்க பொருளாதாரம் உள்பட சர்வதேச பொருளாதாரத்தில் கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதோடு மட்டுமின்றி கப்பலில் பயணிக்கும் அப்பாவி மக்கள் உயிரிழக்க நேர்கிறது. இதனைத் தடுப்பதற்காக ஹூதிக்கள் மீது அமெரிக்கா தாக்குதலை அறிவித்துள்ளது.

செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹூதிக்களின் பலத்தை முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் யேமனில் உள்ள அவர்களின் நிலைகள், தளவாடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதே அமெரிக்காவின் திட்டம்.

செங்கடல் வணிக வழித்தடமும் யேமனும்
செங்கடல் வணிக வழித்தடமும் யேமனும்AP

ஹூதிக்கள் மீது தாக்குதல் நடத்துவது முதல்முறையா?

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவும், இஸ்ரேல் மற்றும் பிரிட்டனும் இணைந்து முன்பு ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைத் தாக்கின.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் இதுவரை 260 முறை ஹூதி கிளர்ச்சிப் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தரவுகளைச் சேகரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிறுவனம் கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது.

ஆனால், முந்தைய தாக்குதல்களில் யேமனில் பொதுமக்களுக்களின் பாதிப்பை கருத்தில்கொண்டு, வலுவான மற்றும் ஆழ்ந்த தாக்குதலுக்கு பைடன் உத்தரவு பிறப்பிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், இம்முறை ஹூதிக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் முற்றிலும் அமெரிக்காவால் மட்டுமே நடத்தப்படுகிறது.

ஹூதிக்களை நிலைகுலையச் செய்வதன் மூலமும், செங்கடலில் தாக்குதல் நடத்தும் அவர்களின் திறனை அழிப்பதன் மூலமும் சர்வதேச வணிக கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பை மீட்டெடுக்கவுள்ளதாக அமெரிக்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஹூதிக்களுக்குச் சொந்தமான துறைமுக நகரின் மீது இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துறைமுகப் பகுதியில் இருந்தே செங்கடல் வழியாகத் ஹூதிக்கள் தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேல் அப்பகுதியைக் குறிவைத்துள்ளது.

யேமனின் சனா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சூழ்ந்த கரும்புகை
யேமனின் சனா பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சூழ்ந்த கரும்புகைAP

மத்திய கிழக்கில் என்ன நடக்கும்?

யேமனின் யேடன் நகரம் மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் ஆதரவுக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஹூதிக்கள் அறிவித்தனர்.

காஸாவுக்குச் செல்லும் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுப்பதால் ஹூதிக்கள் இவ்வாறு அறிவித்தனர். ஆனால் இந்த அறிவிப்பை வெளியிட்ட திங்கள் கிழமை முதல் எந்தவொரு தாக்குதலும் பதிவாகவில்லை.

அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கில் உள்ள செளதி அரேபியா, ஐக்கிர அரபு அமீரகங்களில் எண்ணெய் வளங்களைக் குறிவைத்து ஹூதிக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களுக்கும் யேமனுக்கும் இடையே நீடித்துவரும் போர் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதிபர் டிரப்புக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றை இலக்காக வைத்து செளதி எண்ணெய் வளங்களைக் குறிவைத்து ஹூதிக்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக வளைகுடா நாடுகள் குறிப்பிடுகின்றன.

செங்கடலில் முற்றிலும் வணிகப் போக்குவரத்தை நிறுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பதால், செங்கடலில் செல்லும் அனைத்துவிதமான கப்பல்களையும் ஹூதிக்கள் குறிவைக்க வாய்ப்புள்ளது.

இப்படி யார் உயர்ந்தவர், யார் வலிமையானவர் என்பதை நிரூபிக்கும் இரு தரப்புக்கும் இடையிலான போர்த்திட்டங்களால், இறுதியில் பாதிக்கப்படுவது யார்?

இதையும் படிக்க | இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com