டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்குமா? என்ன செய்யப் போகிறார்? இன்னும் சில நாள்களே!

அமைதிக்கான நோபல் பரிசு இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தற்போதைய நிலவரம் பற்றி...
Donald Trump
உண்டா, இல்லையா?AP
Published on
Updated on
3 min read

உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அக். 10 - வரும் வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவிருக்கிறது. வாய்விட்டு வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?

இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படவிருக்கிறது என்று இயல்பாக எதிர்பார்த்திருந்த காலம் மாறி, இந்த ஆண்டு, இவ்வளவு கெஞ்சி - வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கிறாரே, டிரம்ப்க்கு நோபல் பரிசு வழங்கப்படுமா? என்ற உலகளாவிய எதிர்பார்ப்பால் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது அறிவிப்பு.

பெரிய இடங்களிலிருந்து எல்லாம் பரிந்துரைகள் வந்திருந்தாலும் நாடுகளுக்கு இடையே நிறைய சமாதானங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தொடர்ந்து டிரம்ப் அறிவித்துக்கொண்டேயிருந்த போதிலும் நோபல் பரிசு வழங்கும் விதத்தைக் கவனித்துக்கொண்டிருப்பவர்கள் வாய்ப்பிருக்காது என்றுதான் கருதுகின்றனர்.

நிலைத்த அமைதி, பன்னாட்டு சமூகத்திடையே நல்லிணக்கம் போன்ற இலக்குகளைத்தான் நார்வே நோபல் குழுவினர் கருத்தில்கொள்கின்றனர். ஆனால், டிரம்ப்பைப் பொருத்தவரை, உலக பருவநிலை மாற்றங்கள் போன்ற பல விஷயங்களில் கொண்டுள்ள அலட்சியம் போன்ற செயல்பாடுகளே அவருக்கு சாதகமாக இருக்காது என்று நினைக்கின்றனர்.

எவரொருவரும் தன்னைத் தானே பரிந்துரைத்துக் கொள்ள முடியாது. ஆனால், முதல் முறை அதிபராக இருந்த காலந்தொட்டு நோபல் பரிசைப் பெறுவதில்  அக்கறையும் ஆவலும் கொண்டுள்ள டிரம்ப், ஐக்கிய நாடுகள் அவைப் பிரதிநிதிகளிடையே பேசுகையில்கூட, ‘நான் நோபல் பரிசு பெற வேண்டும் என்று எல்லாரும் விரும்புகிறார்கள்’ என்று அவருடைய உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.

நோபல் பரிசுப் பட்டியலில் கண்டிப்பாக அவரும் இருப்பார் என்று பரவலாக நம்பப்பட்டாலும்கூட, நார்வே நாடாளுமன்றம் நியமித்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நோபல் குழுவின் ரகசிய விவாதத்தில் டிரம்ப் பெயர் இடம் பெற்றதா? என்று தெரியவில்லை.

2018 ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் இருப்பவர்களும் வெளிநாடுகளும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களும் டொனால்ட் டிரம்ப் பெயரைப் பரிந்துரைத்திருக்கின்றனர். இந்த ஆண்டு டிரம்ப்பின் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளார். பாகிஸ்தான் அரசுகூட காலக்கெடு முடிந்த பிறகு பரிந்துரைத்தது. இந்தியாவும் பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்த்துதான் மீண்டும் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் மோதலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தாம்தான் அமைதியை ஏற்படுத்தியாக சொல்லிவந்திருப்பார் போல.

இதுவரை, நாடுகளுக்கு இடையே, ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்கும் டிரம்ப், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே இரு ஆண்டுகளாக நடைபெறும் போர் முடிவுக்கு வந்தால் எட்டாவது உடன்பாடாக இருக்கும் என்றும் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

டிரம்ப் செய்துவைத்துள்ளதாக அறிவித்துள்ள சமாதானங்கள் எல்லாம் நீடித்து நிலைத்திருக்கக் கூடியவையா? தாற்காலிமாகக் கையொப்பத்துடன் முடிந்துவிடுமா? எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? இவையெல்லாமும் நோபல் குழு கருத்தில் கொள்ளக் கூடிய விஷயங்கள். பழைய பரிசுப் பட்டியலைப் பாருங்கள், பருவநிலை மாற்றங்கள் போன்றவற்றில் நம்பிக்கையே இல்லாத ஒருவருக்குப் பரிசு தருவார்கள் என்று தோன்றவில்லை என்றும் விஷயமறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

2009-ல் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஒன்பது மாதங்களிலேயே, மிகக் குறுகிய காலத்தில், பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒபாமா பரிசு பெற்றதேகூட தானும் நோபல் பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்று டிரம்ப் ஆவல்கொள்ள முதன்மையான காரணமாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

தவிர, அமெரிக்காவில் கல்விச் சுதந்திரம் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கணிசமான அளவுக்கு அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் நோபல் பரிசுக் குழுக்களில் ஒன்று ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. மேலும், இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள அல்லது திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் எல்லாமும் கல்வியையும் அறிவியல் ஆய்வுகளையும் பாழாக்கிவிடும் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் பரிசுக்குக் குறுக்கே கிடப்பவை.  

நார்வேக்காரர்களுக்கு இன்னொரு சங்கடமும் இருக்கிறது. இஸ்ரேலிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருந்த 2 டிரில்லியன் டாலர் அரசு நிதி விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. நார்வேயிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்கெனவே 15 சதவிகித வரி விதித்திருக்கிறார் டிரம்ப். பரிசு இல்லையென்றால் இது மேலும் அதிகரித்தாலும் வியப்பதற்கில்லை.

இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக, டிரம்ப் மட்டுமின்றிப் பத்திரிகையாளர் குழுக்கள், சூடான் நிவாரணப் பணியாளர்கள், ரஷியாவில் அரசால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா உள்பட 338 பரிந்துரைகள் வரப்பெற்றிருக்கின்றன.

 நவல்னயா, சூடான் நிவாரணக் குழுவினர் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில்தான் டிரம்ப் இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் பரிசு பெறுவார் என்பது பற்றி உலகளவில் இணைய உலகில் விவாதிக்கப்பட்டும் பந்தயங்கள் கட்டப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. ஆனால், நோபல் பரிசைப் பொருத்தவரை உறுதியாக, அவ்வளவு எளிதில் எதையும் கணித்துவிட முடியாது.

இதுவரை இந்த ஆண்டுக்கான மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. புதன்கிழமை வேதியியலுக்கும் வியாழக்கிழமை இலக்கியத்துக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படும். வெள்ளிக்கிழமை – அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! (அக். 13 ஆம் தேதி பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு அறிவிக்கப்படும்).

அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டால் ‘வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக’ அவருடைய ஆதரவாளர்களால் கொண்டாடப்படும். மேலும், அவர் நிறைய ‘சமாதான’ உடன்பாடுகளை மேற்கொள்ளவும் செய்யலாம்; அல்லது பரிசுதான் கிடைத்துவிட்டதே என வேறு விஷயங்களில் கவனத்தைத் திருப்பவும் செய்யலாம்.

டிரம்ப்புக்குக் கிடைக்காவிட்டால் விளைவு என்னவாக இருக்கும்? என்னவாக வேண்டுமானாலும் இருக்கும்! இவ்வளவு ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் டிரம்ப்புக்கு பரிசு மறுக்கப்பட்டால் அவர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார் என்பது அனேகமாக அவருக்கே தெரியாததாகவும் இருக்கும். ஏனெனில், தொடர்ந்து நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் தனக்கான நோபல் பரிசுக்காகச் சொல்லிவந்திருக்கிறார்.

பார்க்கலாம், இன்னும் இரண்டு நாள்கள்தான். வெள்ளிக்கிழமை விருது அறிவிக்கப்பட்டுவிடும்!

Summary

With the Nobel Peace Prize to be announced in a few days, here's is the current situation...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com