
பிகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்தப் பேரவைத் தேர்தல் நாட்டில் உள்ள அரசியல்கட்சிகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 243 தொகுதிகளைக் கொண்டது பிகார் பேரவை. நவம்பர் 6ஆம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், 11ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் வாக்குப் பதிவு நடைபெறும்.
மற்ற எந்த மாநிலங்களைவிடவும், பிகார் பேரவைத் தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. பிகாரின் பழமையான அரசியல் கட்சிகளின் தலைவர்களாக தற்போதைய முதல்வர் நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் இருக்கும் நிலையில், புதிதாகக் கட்சித் தொடங்கியிருக்கும் பிரசாந்த் கிஷோரால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே, கட்சிகளுக்குள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, முதல்வர் வேட்பாளர் என பல சலசலப்புகள் எழுந்துவிட்ட நிலையில், ஆபரேஷன் சிந்தூர், ஜிஎஸ்டி குறைப்பு போன்றவற்றுக்குப் பிறகு நாட்டில் நடக்கும் முதல் தேர்தலாக இது அமைந்துள்ளது.
இங்கு தேசிய ஜனநயாகக் கூட்டணிக்கும் மகாகத்பந்தன் கூட்டணிக்கும்தான் நேரடி போட்டி என்று கூறப்பட்டாலும் பிரசாந்த் கிஷோர் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் கைகெடுக்குமா?
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் நடைபெறும் தேர்தல் என்பதால், மத்திய அரசு மீது மக்களுக்கு ஆதரவு அதிகரித்து அது வாக்குகளாக மாறுமா என்பது இந்த தேர்தலில் தெரியும். ஏற்கனவே, பிரதமர் மோடி செல்லும் இடங்களில் எல்லாம் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசாமல் வருவதில்லை. காங்கிரஸ் கட்சியும் இதனை பாஜக அரசியலாக்குவதாகக் குற்றம்சாட்டி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாஜக மீது 55 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஆதரவு அதிகரித்திருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இது உண்மையா என்பதை பிகார் தேர்தல் சொல்லலாம்.
பிரசாந்த் கிஷோர் போட்டி
அரசியல் ஆலோசகராக அறியப்படும் பிரசாந்த் கிஷோர், இந்த முறை பிகார் தேர்தலில் போட்டியிடுகிறார். ஏற்கனவே, இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தாலும், இந்த முறை ஏதேனும் மாற்றம் நிகழும் என அவர் கருதுகிறார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங், தன்னுடைய அரசியல் கட்சியான ஆப் சப்கி ஆவாஸ் கட்சியை பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியுடன் இணைத்துவிட்டார். இதனால், பிகாரில் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என்று கூறப்படுகிறது.
அரசியலில் நிதீஷ் மகன்
பிகார் தேர்தலில் நிதீஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவரை வரவேற்று நிதீஷ் குமார் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டி வருகிறார்கள். ஆனால், நிஷாந்த் குமார் வருகை கட்சிக்கு பலம் சேர்க்கும் என்பதற்கு பதிலாக, எதிர்க்கட்சியினர், இதனை நிதீஷ் குமாருக்கு எதிராக திருப்பியிருக்கிறார்கள். நிதீஷ் குமார் உடல்நிலை மோசமாக உள்ளது, அவர் மனநிலையும் சரியாக இல்லை என்று பிரசாந்த் கிஷோர் நேரடியாகவே தாக்கிப் பேசுகிறார்.
இதையே ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வியும் சூசகமாகப் பேசியிருந்தார். 15 ஆண்டுகள் பழமையான வாகனமே ஓடத் தகுதி இல்லை என்றால், 20 ஆண்டு கால ஆட்சி எதற்கு என்று கேட்டிருந்தார்.
முதல்வர் வேட்பாளர்கள்..
வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளரே முக்கியம் என்று கூறப்படுகிறது. எந்தக் கட்சியில், மக்களுக்கு விருப்பமான முகம் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இப்போதைக்கு மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் இருக்கிறாராம்.
5வதுமுறை அடித்த யு டர்ன்
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போதுதான், நிதீஷ் குமார், ஐந்தாவது முறையாகக் கூட்டணியை மாற்றியிருந்தார். மகாகத்பந்தன் கூட்டணியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஒரு தேர்தலுக்கு முன்பு, இவ்வாறு கூட்டணி மாறுவது நிச்சயம் நிதீஷ் குமார் மீதான பிம்பத்தை உடைக்கவே செய்யும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஆனால், இப்படி கூட்டணி மாறி மாறித்தான், அவர் பிகார் அரசியலில் நிலைத்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் பச்சைக்கொடி காட்டுகிறார்கள்.
வரலாறு முக்கியம்!
வரும் நவம்பர் தேர்தல் தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் எடுக்க வேண்டிய கொள்கை மாற்றங்களுக்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பிகாரில், பல அரசியல் மாற்றங்கள், எழுச்சி போன்றவையும் உதாரணமாக, 1974ஆம் ஆண்டு பிகாரில் ஊழலுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணனை தலைமையாகக் கொண்டு எழுந்த மிகப்பெரிய மாணவர் அமைப்பு, அம்மாநில அரசியலையே மாற்றியமைத்தது. அதன்பிறகு, 1990ஆம் ஆண்டுகளில், பிகாரில் இதுவரை இருந்த தேசிய கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து, மாநிலக் கட்சிகளின் கை ஓங்கத் தொடங்கியது. ஆனால், அதன்பிறகு, பிகாரில் அப்படியொரு எழுச்சி ஏற்படாமல், பல ஆண்டுகளாக ஒரு தேக்க நிலை காணப்படுகிறது.
தற்போது, பிகார் பெரிய அளவில் வளர்ச்சிப் பாதைகளை சந்திக்காமல் ஏற்கனவே அரசுகள் அரைத்த மாவையே அரைத்து வருவதால், நிச்சயம் மாநிலம், தன்னுடைய எழுச்சிக்காக புதிய புரட்சியைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.