தங்கம் விலை ரூ. 1 லட்சம் தொடும்? குறைய வாய்ப்பு உண்டா?

சவரன் விலை ரூ. 91 ஆயிரத்தைத் தொட்ட நிலையில் நாள்தோறும் உயர்ந்துகொண்டே செல்லும் தங்கத்தின் விலை, குறையும் வாய்ப்பு பற்றி...
தங்கம் விலை
தங்கம் விலை ANI
Published on
Updated on
3 min read

தங்கம் விலை தலைகீழாக மாறிவிடும், 30 சதவீதம் விலை வீழ்ச்சியடையும் என்று சொன்ன கணிப்புகளையெல்லாம் ஒதுக்கிவிட்டுப் பல மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து, அதன் போக்கில் உயர்ந்துகொண்டே செல்கிறது.

நாள்தோறும் சவரனுக்கு சில நூறுகளில் விலை உயர்ந்து, இன்று ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்தை எட்டிவிட்டது. தற்போதைக்கு தங்கம் விலை குறைவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. பண்டிகைக் காலம், போனஸ், தீபாவளி சீட்டு போன்றவற்றுடன் தீபாவளிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 7000 ஆக இருந்தது, ஒரே ஆண்டில் ஒரு கிராமுக்கு ரூ. 4000 வரை விலை உயர்ந்து இன்று கிராம் ரூ. 11 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது என்றால், ராக்கெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

தங்க நகைக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவு, டாலர் மதிப்பு சரிவு, அரசியல் நிலையற்ற தன்மை போன்றவை தங்கம் விலையை வேகம் குறையாமல், உச்சத்துக்குக் கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன.

சர்வதேச நிலவரங்களின் காரணமாக, பல உலக நாடுகளின் மத்திய வங்கிகளும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து தங்கம் வாங்குவதைக் குறைக்கப் போவதில்லை என்கின்றன தரவுகள்.

தங்கம் வாங்குகிறார்களோ இல்லையோ, இன்றைய தங்கம் விலை குறித்து கவலைப்படாத மக்களே இருக்க மாட்டார்கள். இதுவரை ஒரு நாளில் ஒருவேளை மட்டும் உயர்ந்து வந்த தங்கம் விலை, இப்போது காலையும் மாலையும் இரண்டு வேளை உயர்ந்து மேலும் மிரட்சியை ஏற்படுத்துகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு என்ற தலைப்பு நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறது. இன்றைய தலைப்பும் இதுதான், அக்டோபர் 8ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைக் கண்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 91 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

புதன்கிழமை காலை ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.800 உயர்ந்த நிலையில் மாலை மேலும் ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 91,080 ஆக உள்ளது. இப்போது கிராம் ரூ. 85 உயர்ந்து ரூ.11,385க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் தங்கம் விலை, டாலருக்கு நிகராக முக்கியத்துவம் பெற்று, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தைகள் நிலையற்ற தன்மையை சந்தித்தபோதும், சர்வதேச அளவில் பெரிய பேரிடர்கள் நேரிட்டாலும், தங்கம் அதன் மதிப்பை இழக்காமல் இருந்ததே, இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தக் காரணமானது.

1980 - 2001 வரை பார்த்தால், தங்கம் விலை தன்னுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டது. அப்போது பங்குச் சந்தைகளைப் போல தங்கம் விலை மகத்தான லாபத்தைப் பார்க்கவில்லை. ஆனால், 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்கம் விலை 500 சதவீத லாபத்தைக் கண்டது. பங்குச் சந்தைகள் அதனுடன் போட்டியிட முடியவில்லை.

ஒரு பக்கம், கச்சா எண்ணெய் மற்றும் டாலர் போன்றவை விலை சரியும் அபாயம் ஏற்படும்போது, அதற்கு நேரெதிராக தங்கம் விலை உயர்கிறது.

அரசுக் கொள்கைகள், அரசியல் பின்னணிகளும், இந்தியாவில் தங்கம் விலை உயரக் காரணங்களாக மாறுகின்றன. மிகப் பெரிய அரசியல் நிகழ்வு, பொருளாதார மாற்றம் போன்றவை சர்வதேச அளவில் எதிரொலித்து, அதன் காரணத்தால் தங்கம் விலை உயரலாம் அல்லது குறையலாம்.

இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்துக்கான காரணம்

தங்கத்தின் தேவை அதிகரிப்பு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

திருமணம், நிகழ்ச்சி, பண்டிகைக் காலங்களில் தங்கம் வாங்குவது அதிகரிக்கும். அப்போது மதிப்பும் உயரும்.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மாறும்போது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சொர்க்கமாக தங்கம் இருப்பதால், அதிக முதலீடுகள் நடக்கும்; விலையும் உயர்கிறது.

தங்கம் விலை இனி குறையுமா?

பொருளாதார நிபுணர்கள் பலரின் தேனொழுகும் கணிப்பாக இருப்பது தங்கம் விலை குறையும் என்பதே.

தங்கம் விலை 30 - 35 சதவீதம் அளவுக்குக் குறையும். ஏற்கெனவே 2007 - 2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில்கூட இதுபோல வரலாறு காணாத உயர்வுகளை சந்தித்துவிட்டு மீண்டும் தங்கம் விலை 45 சதவீதம் அளவுக்கு குறைந்தது.

ஆனால், தற்போது தங்கம் விலை குறைய ஓராண்டு வரை ஆகலாம். அதுபோல, வெள்ளி விலையும் கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்குக் குறையலாம் என்றும், வெள்ளி விலையில் ஏதோ ஒரு திரைமறைவு வேலை நடந்துகொண்டிருக்கிறது என்றும் கணிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, உலக அளவில், அமெரிக்கா தலைமையில், ஒரு மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயமும், இதனால், வெள்ளி விலை குறையும் நிலையும் ஏற்படலாம் என்கிறார்கள். அதாவது, பொருளாதார மந்தநிலையால் செமிகண்டக்டர்கள், மின்னணு வாகனங்கள் உற்பத்தி சரிந்தால், வெள்ளி விலையும் குறையலாம் என்பது அவர்களது கணிப்பு.

தற்போது கடும் உயர்வுகளைச் சந்தித்து வரும் மஞ்சள் உலோகத்தின் விலைப் போக்கு நிச்சயம் நிலையற்றது, அதில் அதிகம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், மிகப் பெரிய விலை வீழ்ச்சியை சந்திக்கத் தயாராக வேண்டும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இவர்கள் சொல்வது எல்லாம் ஏதோ எதிர்மறையான பேச்சுகளைப் போல இருந்தாலும், ஏழை எளிய மக்களின் காதுகளில் தேன்வந்து பாய்வது போலவே இருக்கிறது.

தங்கம் கடந்த வந்த பாதை

1925 ஆம் ஆண்டு 10 கிராம் தங்கம் ரூ.18-க்கு விற்கப்பட்டுள்ளது. 1964 ஆம் ஆண்டு இதன் விலை ரூ. 63.25 ஆக இருந்துள்ளது.

முதல்முறையாக 1979 - 1980களில்தான், 10 கிராம் தங்கம் ஆயிரத்தைத் தொட்டிருக்கிறது. நிச்சயம் அப்போதும், தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு என்றுதான் பத்திரிகைகளில் தலைப்பு வெளியாகியிருக்கும். 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரத்தையும் 2021 ஆம் ஆண்டு 10 கிராம் ரூ. 50 ஆயிரத்தையும் எட்டியிருக்கிறது.

அதாவது, சில பத்து ரூபாய்களில் இருந்த தங்கம் விலை முழுதாக நூறு ரூபாயைத் தொட 40 ஆண்டுகள் (1967) ஆகியிருக்கிறது. அந்த நூறு ரூபாய் ஆயிரம் ரூபாயாக உயர பத்து ஆண்டுகள் (1980) ஆனது.

தங்கம் விலை பத்தாயிரத்தைத் தொட 27 ஆண்டுகள் (2007) ஆகியிருக்கிறது. பத்து கிராம் பத்தாயிரத்தில் இருந்து இன்று 17 ஆண்டுகளில் அதாவது 2025 ஆம் ஆண்டில் பத்து மடங்கு அதிகரித்து ரூ. 1,10,290 ஆக உயர்ந்துள்ளது.

தங்கம் விலைக்கு நிகராக வெள்ளி விலையும் உயர்ந்து வருவதால், ஏழைகள் குறைந்தபட்சம் அணியும் சிறு மெட்டியும் கொலுசும் கூட பல ஆயிரங்களில் விற்கப்படுகிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் விலையும் ஏழைகளுக்கு மெட்டி விலையும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், விலையேற்றப் பட்டியலைப் பார்க்கும் எவரும், தங்கம் விலை விரைவில் ரூ.1 லட்சத்தைத் தொடும் என்றே நினைப்பர்.

உயரும் என்ற மக்களின் அச்சம் நிஜமாகத் தெரிகிறது. விலை வீழ்ச்சியடையும் என்ற பொருளாதார நிபுணர்களின் கூற்று பலிக்குமா?

தீபாவளிக்குள் தங்கம் சவரன் விலை ரூ. 1 லட்சத்தைத் தொட்டால் வியப்பதற்கில்லை என்றாலும் பொங்கல்வாக்கிலாவது குறையத் தொடங்கினால் சரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com