
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு எந்த ஓர் இந்திய குடிமகனுக்கும் அரசியல் கட்சி தொடங்க முழு உரிமை உண்டு. அந்த வகையில் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில்தான் திரை நட்சத்திரங்களைக் கொண்டாடும் நிலை உள்ளது. அதில்கூடத் தவறில்லை. ஆனால், அவரை தங்களுக்குத் தலைவராக, வழிகாட்டியாகப் பார்ப்பதில்தான் சிக்கல் உள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுப் பிரச்னைகள், மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள், சமூகத்தின் விளம்பு நிலை மக்களுக்காகப் போராடும் பல கட்சிகள் மற்றும் முதுபெரும் அரசியல் தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, என்.சங்கரய்யா, பழ.நெடுமாறன் போன்ற அப்பழுக்கற்ற தலைவர்களுக்கு கிடைக்காத வரவேற்பு, திடீரென்று கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு கிடைப்பது என்பது அறமா?.
விஜய் ஒரு நடிகர் என்ற வகையில் எனக்கும் அவரைப் பிடிக்கும். அவருக்கு தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். ஆனால், மக்கள் பிரச்னைக்காக களத்துக்கு வந்து போராடாமல், சமூக ஊடகம் வாயிலாக அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் அவரை முதல்வராக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவர் தனக்கு கிடைத்த திரைத் துறை வெளிச்சத்தை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறார்.
இதற்கு முன்பும், தமிழகத்தில் எம்ஜிஆர் தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களைச் சம்பாதித்து, அதன் பிறகு அரசியல் கட்சி தொடங்கி முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால், அவர் திரைத் துறையிலிருந்து நேரடியாக புதிய கட்சியைத் தொடங்கவில்லை. அரசியலில் அவர் மேற்கொண்ட தீவிர களப் பணியும், அதன்மூலம் கிடைத்த லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள், ரசிகர்களின் ஆதரவும் புதிய கட்சியைத் தொடங்கியபோது இயல்பாகவே எம்ஜிஆருக்கு கைகொடுத்தன.
திரைப்படத்தைத் தாண்டி மக்களுக்காக, மக்கள் பிரச்னைக்காக எம்ஜிஆர் பல்வேறு கட்டங்களில் குரல் கொடுத்தார், பல்வேறு உதவிகளைச் செய்தார். அதனால்தான் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். ஆகவே, எம்ஜிஆருடன் ஒவ்வொரு நடிகரும் தங்களை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல.
எந்தப் பொதுப் பிரச்னைக்காகவும் குரல் கொடுக்காமல், நேரடியாக போராட்டக் களத்துக்கு வராமல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்றுதான் கூறுவேன். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக-வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், ஆட்சி மாற்றம் என்ற இலக்கையெல்லாம் அடைய முடியாது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக இருக்கிறது. பலம் மிக்க கட்சியான திமுகவுக்கு தமிழகத்தில் உள்ள 64,000 பூத் கமிட்டிகளிலும் நிர்வாகிகளை நியமிக்க முடியும். ஆனால், தவெக-வுக்கு விஜய்யைத் தவிர பிரபலமான அரசியல் முகங்களோ, கட்சிக்கான கட்டமைப்போ இல்லை. இந்த நிலையில் திமுகவுக்கு மாற்றாக தனது கட்சியை விஜய் முன்னிறுத்துவது நடைமுறைக்குப் பொருந்தாத செயலாகும்.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக, அதிமுக என்றுதான் தேர்தல் களத்தில் போட்டி அமையுமே தவிர, இப்போதைய சூழலில் விஜய் தலைமையிலான கூட்டணி அந்த இடத்தைத் தொட முடியாது.
தவெக நடத்திய இரு மாநாடுகளிலும், விஜய்யை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரது ரசிகர்கள் கூட்டம் திரண்டது. அவை தவெக-வின் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரணமானதல்ல. 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு என்ன பிரச்னை என்று சிந்திக்க வேண்டும். அதற்கான தீர்வு குறித்து அரசு நிர்வாகத்துக்கு தெரிவித்துச் செயல்படுத்த வேண்டும். ஆனால், வாரத்தில்ஒருநாள் மட்டும் பிரசாரம் என விஜய் கூறுவது குறித்து மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு, அவர் நமக்காக உழைப்பாரா, பொதுப் பிரச்னையில் அவரது நிலைப்பாடு என்ன என்று ஆராய்ந்தறிந்து பொதுமக்கள் வாக்களிப்பார்கள். அந்த வகையில் தமிழக வாக்காளர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஆகவே, வரும் பேரவைத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை தவெக பிரிக்குமே தவிர பெரிய விளைவை ஏற்படுத்தாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.