
மனிதர்களுக்குப் பொதுவாக வலது கைப் பழக்கம் இருக்கும், சிலருக்கு இடது கைப் பழக்கம் இருக்கும். அபூர்வமாக சிலர் இரு கைகளையும் பயன்படுத்தக் கூடியவர்களாகவும் இருப்பார்கள், ஆனால், எட்டு கரங்களை (அல்லது கால்களைக்) கொண்ட ஆக்டோபஸ்கள்?
எட்டு கரங்கள் (அல்லது கால்கள்) இருந்தபோதிலும் எந்தக் கரத்தை அதிகமாக ஆக்டோபஸ்கள் பயன்படுத்துகின்றன? முன் பக்கத்திலிருக்கும் கரங்களைத்தான் கூடுதலாகப் பயன்படுத்துகின்றன என்று ஆய்வொன்றில் கண்டறிந்திருக்கின்றனர்.
முதலில் தெளிந்துகொண்ட வேண்டிய தகவல் - ஆக்டோபஸ்கள் மீன்களின் வகையைச் சேர்ந்தவையல்ல; இவை விலங்கினமாகத்தான் வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால், உலகம் முழுவதும் மீன்களுடன்தான் பிடித்துவரப்பட்டு மீன் சந்தைகளில்தான் விற்பனைக்கும் கிடைக்கின்றன. உணவாகக் கொள்ளப்படுகின்றன.
தமிழில் பெரும்பாலும் கணவாய் என்று இவை சுட்டப்படுகின்றன. வட மாவட்டங்களில் கடம்பா என்று கூறுகின்றனர். இவற்றில் ஓட்டுக் கணவாய், பீலிக் கணவாய் என்ற வகைகள் இருக்கின்றன (உலகளவில் இன்னும்கூட நிறைய). ஆக்டோபஸ்களைத் தலைக்காலிகள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
எட்டு கரங்களில் ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதற்காகக் கணவாய்கள் (ஆக்டோபஸ்கள்) நகர்கிற, நீந்துகிற, நின்றுகொண்டிருக்கிற, எவற்றையேனும் எடுக்கிற, ஒன்றோடான்று அணைந்துகொள்கிற ஏராளமான விடியோ பதிவுகளைக் கொண்டு அறிவியலாளர்கள் ஆய்வு செய்தனர்.
ஆக்டோபஸ்களின் எட்டு கரங்களும் எல்லாவிதமான வேலைகளையும் செய்கின்றன – நம்பவே முடியவில்லை, அற்புதம் என்கிறார் மசாசுசெட்ஸ், ஹுட்ஸ் ஹோலின் கடல்வாழ் உயிரியல் ஆய்வக ஆய்வாளர் ரோஜர் ஹன்லோன்.
கணவாய்களின் (ஆக்டபஸ்களின்) கரங்கள் / கால்களின் மூட்டுகள் அல்லது இணைப்புகள் எல்லாம் பிற விலங்கினங்களைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பவை அல்ல.
ஆனால், இங்கே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று வகைக் கணவாய்களின் நடவடிக்கைகளிலிருந்து, இவை முன்புறமுள்ள நான்கு கரங்களைத்தான் பிரதானமாக (கிட்டத்தட்ட 60 சதவிகிதம்) பயன்படுத்துகின்றன என்பது அறியப்பட்டிருக்கிறது. பின்னுள்ள நான்கு கரங்களும் பெரும்பாலும் நிற்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
“முன் பகுதி கரங்கள்தான் தேடல் தொடங்கிப் பெரும்பாலான வேலைகளை மேற்கொள்கின்றன. பின்பக்கக் கரங்கள் அதிகளவில் நடப்பதற்காகத்தான் பயன்படுகின்றன” என்கிறார் இயற்கை வரலாற்றுத் தேசிய அருங்காட்சிய விலங்கியலாளர் மைக் வெச்சியோன்.
அட்லாண்டிக் பெருங்கடலிலும் கரீபியன் கடலிலும் 2007 தொடங்கி 2015 வரையிலான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட விடியோ பதிவுகளைக் கொண்டு
ஆய்வுகளை மேற்கொண்டனர். அனேகமாக ஆக்டோபஸ்களின் கரங்கள் பற்றி முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட பெரிய ஆய்வு இதுவே.
ஏற்கெனவே ஆய்வகச் சூழலில் வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில் நடந்துகொண்டதைப் போல அல்லாமல், அவற்றின் இயற்கையான சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் வலது கரங்களுக்கோ, இடது கரங்களுக்கோ ஆக்டோபஸ்கள் எவ்வித முக்கியத்துவமும் தரவில்லை எனத் தெரிய வந்திருக்கிறது.
ஆக்டோபஸ்கள் தொடர்பான இந்த ஆய்வின் முடிவுகளை சயின்டிபிக் ரிப்போர்ட்ஸ் விரிவாக வெளியிட்டிருக்கிறது.
ஆக்டோபஸ்கள் கூச்ச சுபாவமும், மறைந்தே இருக்கிற இயல்பைக் கொண்டவை. பெரும்பாலும் மறைவான இடங்களிலேயே இருக்கும். எனவே, இவற்றைப் படம் பிடித்துப் பதிவு செய்வதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும்.
நகர்ந்து செல்வதற்கும் சுற்றியுள்ள சூழலை உணர்ந்துகொள்ளவும் பயன்படுத்தப்படுகிற ஆக்டோபஸ்களின் கரங்கள் பல்வேறு திறன்களைக் கொண்டவை. ஒவ்வொரு கரமும் நூறு முதல் இருநூறு வரையிலான நுண் உறிஞ்சிகளைக் கொண்டவை, ஏறத்தாழ மனிதர்களின் மூக்கு, உதடுகள், நாக்கைப் போல என்கிறார் ஹன்லோன்.
ஏதாவது சண்டையில், எதிரிகளால் தாக்கப்படும்போது இந்தக் கரங்கள் துண்டிக்கப்பட்டால், இவை மீண்டும் வளரத் தேவையான ஏற்பாடுகள் இருக்கின்றன.
உங்களுக்கு எட்டு கரங்கள் இருந்து, எல்லா கரங்களும் எல்லாம் செய்யும் திறனையும் கொண்டிருந்தால், ஏகக் குழப்பமாகி, என்ன செய்வதென்று அறியாமல் குழம்பித்தான் போய்விடும் என்று வியக்கிறார் ஹன்லோன்.
அட, கணவாய் மீனுங்கோ என்று சொல்லிவிட்டுப் போகிற ஆக்டோபஸ்கள் எண்ணற்ற அதிசயங்களையும் அபூர்வங்களையும் தங்களுக்குள் பொதிந்து வைத்திருக்கின்றன.
பூமியில் 33 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கூடிய ஆக்டோபஸ் (குடும்ப) போன்ற விலங்கினத்தின் படிவங்கள் கண்டறியப்பட்டிருக்கின்றன.
ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்கள். இவற்றில் இரு இதயங்கள், ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடும் (சுவாசிக்கும்) பணியைச் செய்கிற செவுள்களுக்கு விரைவாக ரத்தத்தைச் செலுத்தும் பணியை மட்டுமே செய்கின்றன. மூன்றாவது இதயமோ, ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை அதன் உடலுக்கு, உடல் உறுப்புகளுக்கு விநியோகிக்கின்றன. ஆக்டோபஸ்கள் நீந்தும்போது, இந்த மூன்றாவது இதயம் துடிப்பதை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாம்.
ஆக்டோபஸ்களின் நியூரான்களில் (மூளை செல்களில்) மூன்றில் இரண்டு பங்கு அவற்றின் தலையில் இல்லை; மாறாக, எட்டு கரங்களில்தான் இருக்கின்றன. இதனால், சிக்கிய இரையை ஒரு கரம் சிதைத்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு கரம் வேறு ஏதேனும் இரை கிடைக்கிறதா எனத் தேடிக் கொண்டிருக்கும்! ஆக்டோபஸ்ஸின் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு கரம் மட்டுமேகூட தனியே தப்பிச்செல்ல முயற்சிக்கும் எனக் கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆக்டோபஸ்களின் ரத்தம், நீல நிறம்; ஆழ்கடலுக்குள் வசிப்பதற்கு வசதியாக. மனித ரத்தத்தில் இருக்கும் இரும்புச் சத்தை ஆதாரமாகக் கொண்ட ஹீமோகுளோபினுக்குப் பதிலாக, ஆக்டோபஸ்களில் செம்புச் (காப்பர்) சத்தை ஆதாரமாகக் கொண்ட ஹீமோசயானின் என்ற புரதம் இருக்கிறது. ஆக்டோபஸ்களின் மூளையும்கூட அவற்றின் அளவுடன் ஒப்பிட பெரிய அளவே. ஆக்டோபஸ்களின் இனப்பெருக்கம் பற்றிய விவரங்கள் தனிக்கதை!
ஒரு சின்ன உயிருக்குள்தான் எத்தனை அதிசயங்கள்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.