விஜய் நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் வெளியாகுமா? வெளியாகாதா? என்பது தமிழ்நாடு தாண்டி அதிகம் பேசப்படும் பிரச்னைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. இளசுகள் முதல் பெருசுகள் வரை, ஏன்? அரசியல் தலைவர்கள்கூட ஜன நாயகன் வெளியீடு பிரச்னை குறித்து கருத்துக் கூறாமல் செய்தியாளர் சந்திப்புகளை முடிப்பதில்லை.
கதை உருவாகி, திரைக்கதையாக மாறி, படப்பிடிப்பு தளம் தாண்டி, பின்னணி வேலைகள் என பல கட்டங்களைக் கடந்து ஒரு படம் வெளியாகும். ஆனால், விஜய்க்கான பாணி வேறு. பிரச்னைகள் உருவாகி, அதுபற்றி விவாதிக்கப்பட்டு, போராட்டங்கள், கண்டனங்கள், சமரசங்கள் என பல்வேறு கட்டங்களைத் தாண்டிதான் வெளியாகியிருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல், விஜய்யின் படங்களுக்கு பிரச்னைகளே விளம்பரம் என்ற நிலை உருவாகிவிட்டது.
இது போன்ற கடைசிநேர பிரச்னைகள் விஜய்யின் சமீபத்திய படங்களுக்கு ஏற்படுபவை அல்ல. 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதையில் இருந்தே இதே கதைதான்.
குஷி, பத்ரி, பகவதி, தமிழன், யூத் என தொடர் வெற்றிப்படங்களுக்குப் பிறகு வெளியான விஜய்யின் 38 வது படம்தான் புதிய கீதை. இப்படத்துக்கு முதலில் கீதை எனப் பெயர் வைக்கப்பட்டது.
1990களின் பிற்பாதியில் வந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் படங்களுக்குப் பிறகு தமிழ்நாடே கொண்டாடும் நடிகராக விஜய் மாறிவிட்டதால், அவரைப் பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டது. இதனால், கிறிஸ்துவரான விஜய் நடிக்கும் படத்துக்கு கீதை என்ற ஹிந்து தர்மத்தை விளக்கும் புனித நூலின் பெயர் வைக்கக் கூடாது என ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் புதிய கீதை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு படம் வெளியானது.
பிற்பகல் வெளியான காவலன்
காவலன் விஜய்யின் 51 வது படம். இதற்கு முந்தைய படமான சுறா வணிகரீதியாகப் பெரும் தோல்வியடைந்தது. இதனால் விநியோகஸ்தர்கள், பெரும் நஷ்டம் அடைந்தனர். நஷ்டத்தை விஜய் ஈடு செய்ய வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதுவரை காவலன் படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. முதலில் 2010 டிசம்பர் 17ஆம் தேதி காவலன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விநியோகஸ்தரின் பிரச்னை, நீதிமன்ற வழக்கு காரணமாக டிசம்பர் 25 கிறிஸ்துமஸுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், மறு ஆண்டு 2011 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்குத்தான் காவலன் வெளியானது. அதுவும் பிற்பகலில்தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது.
காட்சிகள் நீக்கப்பட்டு வெளியான துப்பாக்கி
ஏ.ஆர். முருகதாஸுடன் முதல்முறை விஜய் இணைந்து பணியாற்றிய படம் துப்பாக்கி. விஜய்க்கு பெரும் திருப்புமுனையாக இப்படம் அமைந்தது. ஆனால், படத்தின் பெயர் வெளியானதிலிருந்தே பிரச்னைதான். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என கள்ளத் துப்பாக்கி குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் படத்தின் பெயரைப் போன்று இருப்பதாலும், டைட்டில் வடிவமைப்பும் தங்கள் டைட்டில் வடிவமைப்பைப் போன்று இருப்பதாகவும் அதனை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னை சரி செய்த பிறகு, படத்தின் டிரெய்லரால் புது பிரச்னை. இப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்ததாகக் கூறி இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக படக்குழுவினர் கூறிய பிறகே துப்பாக்கி படத்தை திரைகளில் பார்க்க முடிந்தது.
டைட்டில் மாற்றத்துடன் வெளியான தலைவா!
விஜய்க்கு இது 55 வது படம். விஜய் மக்கள் இயக்கம், ரசிகர் மன்றத்தைத் தாண்டி அரசியல் ரீதியாக செயல்படத் தொடங்கிய காலகட்டம். அப்போது, தலைவா டைம் டு லீட் என்ற தலைப்பில் படத்தின் போஸ்டர் வெளியானது. இதில், இடம்பெற்றிருந்த டைம் டு லீட் என்பது விஜய்யின் அரசியல் வருகையுடன் தொடர்புப்படுத்திப் பேசப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு எதிராக இது பார்க்கப்பட்டது. படம் வெளியாகும் வரை இப்பிரச்னை தொடர்ந்த நிலையில், ஆகஸ்ட் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பிறகு, படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி படத்தை வெளியிட அதிமுக அரசு தடை விதித்திருந்தது. மற்ற மாநிலங்களில் திட்டமிட்ட தேதியிலேயே படம் வெளியானது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் படம் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விஜய் விடியோ வெளியிட்டு பேசியிருந்தார். அதில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேச அனுமதி கோரி நேரம் கேட்கப்பட்டுள்ளதாக விஜய் கூறியிருந்தார். ஆனால், கடைசி வரை அந்த வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதற்கிடையே படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஒருவழியாக 11 நாள்கள் கழித்தே தமிழகத்தில் தலைவா படம் வெளியானது. படம் வெளியானபோது டைம் டு லீட் என்பது தலைப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.
ரிலீசாகி பிரச்னைகளை தீர்த்த கத்தி
இது விஜய்யின் 57வது படம். துப்பாக்கி வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் உடன் மீண்டும் இணைந்ததால் தொடக்கத்தில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற காலகட்டம். அந்த செய்திகளின் அடிப்படையில் விவசாயிகளின் பிரச்னைகள் பற்றி வெளிப்படையாகப் பேசி, கார்ப்பரேட் நிறுவனங்களை கேள்வி கேட்ட படம். இதற்கு முன்பு, பன்னாட்டுக் குளிர்பான நிறுவனமான கொகாகோலா விளம்பரத்தில் விஜய் நடித்திருந்தார். அதனைக் குறிப்பிட்டு விஜய்க்கு விமர்சனங்கள் எழுந்தன.
அதோடுமட்டுமின்றி இலங்கை அரசுக்கு ஆதரவான லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ்நாட்டில் படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இலங்கையின் அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான நிறுவனத்திடம் ஊதியம் பெற்றுக்கொண்டு தமிழரான விஜய் நடிப்பதா? என தமிழக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கு மத்தியில் அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார், தன்னுடைய கதையைத் திருடி கத்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுப்பினார். தாக பூமி என்ற குறும்படத்தின் இயக்குநர் அன்பு ராஜசேகரும் கத்தி படத்தின் கதைக்கு உரிமை கோரினார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு கதைத் திருட்டு குறித்து புகார் தெரிவித்து கடிதம் எழுதுவது, உண்ணாவிரதம் இருப்பது என கத்தி படத்துக்கு எதிரான பிரச்னை பெரிதாகிக்கொண்டே சென்றது. இந்த பிரச்னைகளுக்கு மத்தியில்தான் 2014 அக்டோபர் 22ஆம் தேதி கத்தி வெளியானது. படம் வெளியான பிறகே இப்பிரச்னைகள் முடித்துவைக்கப்பட்டன.
ஐடி ரெய்டுடன் வெளியான புலி
இது விஜய்யின் 58 வது படம். 2015 அக்டோபர் 1 ஆம் தேதி படம் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முந்தைய நாளில் விஜய் மற்றும் தயாரிப்பாளரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான பி.டி. செல்வகுமார் வீடு, அலுவலகங்களில் வருவான வரித் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவுகள் தாமதமானதால், படத்தின் அதிகாலைக் காட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட்டன. பின்னர், பிற்பகலில்தான் முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.
விநியோகஸ்தர்கள் பிரச்னையுடன் தெறி
இயக்குநர் அட்லியுடன் முதல்முறையாக விஜய் இணைந்த படம் தெறி. 2016 ஏப் 14 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி படத்தின் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்பில் அதிக விலை கோரப்பட்டது. இதற்கு விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் (ஏனெனில் இயக்குநர் அட்லி தெறிக்கு முன்பு ராஜா ராணி என்ற ஒரு படத்தை மட்டுமே இயக்கியிருந்தார். அதுவும் நவீன மெளனராகம் என விமர்சிக்கப்பட்டிருந்தது). இதனால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. பின்னர் குறித்த தேதியில் படத்தை வெளியிட வேண்டும் என்று குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையுடன் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் மட்டும் படம் வெளியிடப்பட்டது.
விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்குமான பிரச்னை படம் வெளியான பிறகும் தொடர்ந்துகொண்டிருந்தது. படத்துக்கு கிடைத்த வரவேற்பால் சமரசத்துக்கு முன்வந்த விநியோகஸ்தர்களால், 15 நாள்கள் கழித்து ஏப்ரல் 29 ஆம் தேதி செங்கல்பட்டு போன்ற புறநகர்ப் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் படம் வெளியானது.
ஒரு நாள் முன்பு சென்சார் பெற்ற மெர்சல்
அட்லியுடன் விஜய் இணைந்த இரண்டாவது படம். சென்னை மெரீனாவில் தலைமையில்லாவிட்டாலும் கட்டுக்கோப்புடன் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்த காலகட்டம். பாரம்பரியம் என்ற பெயரில் நடத்தப்பட்டுவரும் போட்டிகளால் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு போர்க்கொடி தூக்கிய நேரம்.
அப்போதுதான் ஜல்லிக்கட்டு காளை மாட்டின் தோற்றத்தில் மெர்சல் என்ற தலைப்பு வெளியானது. படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்றவை குறித்த வசனங்கள் இடம்பெற்றதால், பாஜகவினர் நேரடியாக இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில மாநிலங்களின் மருத்துவமனை அவலங்களை வசனங்களாக விஜய் பேசியிருந்தார். இதனால், விஜய்யின் மதத்தை சுட்டிக்காட்டும் வகையில் ஜோசப் விஜய் என பாஜகவினர் விமர்சித்திருந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரசு மருத்துவர்கள் குறித்துத் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக மருத்துவ சங்கமும் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் விஜய் படத்துக்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழரான விஜய்க்கு மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டதை கண்டித்து கன்னட அமைப்புகள் தியேட்டரில் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். கர்நாடகத்தில் மெர்சல் படத்தை திரையிடக் கூடாது என போராட்டத்திலும் ஈடுபட்டனர். இவ்வாறு கடும் நெருக்கடி இருந்ததால், ஒரு நாள் முன்பு வரைகூட படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவே இல்லை.
அரசியல் விமர்சனத்துடன் வெளியான சர்கார்
ஏ.ஆர். முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்த படம். புகைபிடிப்பதைப் போன்று வெளியான விஜய் போஸ்டருக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்து பிரச்னையை தொடக்கிவைத்தார். தொடர்ந்து பல பிரச்னைகள் எழுந்தன. இப்படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்னர், வருண் ராஜேந்திரனின் பெயரை படத்தில் சேர்த்துக்கொள்வதாக இயக்குநர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
படத்தில் அரசின் இலவசங்களை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதோடு மட்டுமின்றி ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததாகக் கூறி அதிமுக போராட்டத்தில் இறங்கியது. இவ்வாறு பல திசைகளில் வந்த நெருக்கடிகளை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியதும் அரசியல் கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போஸ்டரிலிருந்தே பிரச்னையான பிகில்
அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக விஜய் நடித்த படம் பிகில். 2019-ல் வெளியான இப்படத்தின் போஸ்டரில் இருந்தே பிரச்னை தொடங்கியது. முதல் பார்வை போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டை மீது கால் வைத்திருப்பதாகக் கூறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இசை வெளியீட்டு விழாவில் கருப்பு உடை அணிந்து, பாஜகவையும் அதிமுகவையும் விமர்சிக்கும் வகையில் அரசியல் வசனங்களைப் பேசினார். அதிமுக வைத்த பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணம், விளையாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது போன்றவை குறித்து மேடையில் பேசியிருந்தார். மேடையில் விஜய் பேசிய அனைத்தும் அரசியல்வாதிகளை மறைமுகமாக தாக்கிப் பேசுவதைப் போன்றே இருந்தது. இதனால், விஜய்யின் மேடைப் பேச்சு குறித்து அரசியல் தலைவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்பட்டது.
கரோனாவுக்குப் பிறகு வெளியான மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதல்முறையாக நடித்திருந்த படம் மாஸ்டர். கரோனா ஊரடங்கிற்கு பிறகு 50 சதவிகித இருக்கைகளுடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வெளியான முதல் தமிழ்ப் படம். கரோனாவால் பல இழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், படம் வெளியாவது பொதுமக்களிடையேகூட விமர்சிக்கும் வகையிலேயே இருந்தது.
நெய்வேலியில் இதன் படப்பிடிப்பு நடந்தது. நிலக்கரி சுரங்க நிர்வாகம் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது விஜய் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டது. நெய்வேலியில் இருந்து அதிகாரிகளின் காரிலேயே சென்னைக்கு விஜய் அழைத்துச்செல்லப்பட்டது பேசுபொருளானது.
ஆனால்,வெற்றிகரமாக படப்பிடிப்பு முடிந்த பிறகு படப்பிடிப்பு தள வாகனத்தின் மீது ஏறி ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி, மறைமுக பதிலடியாகவே பார்க்கப்பட்டது.
இஸ்லாமியர்கள் எதிர்ப்பில் பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் முதல்முறையாக நடித்த படம் பீஸ்ட். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என காட்டப்படுவதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் பீஸ்ட் படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் போராட்டத்தில் ஈடுபட்டது.
தமிழ்ப் புத்தாண்டையொட்டி 2022 ஏப்ரல் 13ஆம் தேதி பீஸ்ட் படம் வெளியான நிலையில், மறுநாளே பீஸ்ட் படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தைவிட உடன் வெளியான கன்னட படமான கேஜிஎஃப் -2 மேல் என ரசிகர்களே கருத்து தெரிவித்தனர்.
தெலுங்கில் பிரச்னையான வாரிசு
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்த படம் வாரிசு. பொங்கலையொட்டி 2023 ஜனவரி 11ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால், இதற்கு முன்பு 2019-ல் வெளியான ரஜினிகாந்தின் பேட்ட படத்தை தெலுங்கில் அதிக திரைகளில் வெளியிடக் கூடாது, நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என தில் ராஜு கூறியிருந்தார்.
அவரின் இப்பேச்சு வாரிசு படத்திற்கு எதிரொலித்தது. நேரடி தெலுங்கு படத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தில் ராஜு கூறியிருந்ததால், விஜய்யின் வாரிசு படத்துக்கு தெலங்கானா, ஆந்திரத்தில் அதிக திரைகளைக் கொடுக்கக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடைசிப் படமான ஜன நாயகன்
விஜய்யின் சமீபத்திய படங்களில் அரசியல் சார்ந்த கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும், முழு நேர அரசியலுக்கு வந்த பிறகு வெளியான படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், வசூல் ரீதியாக வெற்றிகரமான படமாகவே அமைந்தது.
விஜய்யின் கடைசிப் படம் எனக் கூறப்படும் ஜன நாயகன் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது படக்குழு.
ஆனால், படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வசனங்கள் இருப்பதால், மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என வாதிடப்பட்டது. ஒரு படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் வரை மறு ஆய்வுக்கு உட்படுத்த தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் இருப்பதாக தணிக்கை வாரியம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனினும், படம் வெளியாக வேண்டிய நாளான இன்று தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மறு ஆய்வு தேவையில்லை என்று கூறி யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் திட்டமிட்டபடி ஜனவரி 9ஆம் தேதி ஜன நாயகன் வெளியாகாது என படத் தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்துவிட்டிருந்தது.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால், பல இடங்களில் முன்பதிவே தொடங்கவில்லை. விஜய் படம், அதுவும் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் உள்பட பலதரப்பினரிடையேயும் இறுதியாக ஒருமுறை ஜன நாயகனை (விஜய்யை) திரையரங்கில் பார்த்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.
மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாக இன்னும் கொஞ்சம் தாமதமாகும். ஏனெனில், ஜன நாயகனுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, விஜய் படத்தை வைத்து செய்யப்படும் அரசியல் முடிவுக்கு வந்த பிறகே, படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படம் பொங்கல் விடுமுறையிலேயே வெளியாகுமா? இல்லை, நடிகர் ரவி மோகன் கூறியதைப்போல, விஜய் படம் வெளியாகும் நாள்தான் ரசிகர்களுக்கு பொங்கலா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.