

முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தினமணி இணையதளத்திற்கு அளித்த நேர்காணல்
மதுராந்தகம் பொதுக்கூட்டம் எப்படி இருந்தது?
நிச்சயமாக மகிழ்ச்சிதான். ஏற்கெனவே 2026 எங்களுக்கானது என்று முடிவு செய்து பணியாற்றி வருகிறோம். வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பதில் தொடங்கி பல்வேறு அணி பிரிவுகளின் கூட்டங்கள், தலைவர்களின் சுற்றுப்பயணங்கள் என கட்சி பலம் பெற்றிருக்கிறது. 2026 தேர்தலை ஏற்கெனவே நம்பிக்கையோடு அணுகி கொண்டிருந்தோம். நன்றாக ஓடிக் கொண்டிருப்பவருக்கு ஊக்கம் கொடுப்பதைப் போல தற்போது கூட்டணி அமைந்திருப்பதும், மகுடம் வைத்ததைப் போல பாரதப் பிரதமர் மோடி ராமருக்கு பெயர்போன மதுராந்தகத்திற்கு வருகை தந்து கூட்டணியை தொடங்கி வைத்ததும் உற்சாகம் கொடுத்திருக்கிறது. வெற்றியை நோக்கிய எங்களது நம்பிக்கை கூடி இருக்கிறது.
பிரதமரின் வருகைக்கு முன்பாகவே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்து கூட்டணி பணிகளை செய்தார். இந்தத் தேர்தலில் அதிமுகவை முந்தி பாஜக செயல்படுகிறது எனும் குற்றச்சாட்டு இருக்கிறதே?
அதிமுகவை முந்த வேண்டும் என நிச்சயமாக இல்லை. கூட்டணி இறுதியாவதற்கான வேலையை செய்து வருகிறோம். மரியாதைக்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் வந்து பணியாற்றுவது அவரது விருப்பத்துடனே நடந்தது. இந்த கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் ஒரு மாறுபாடு உள்ளது. இதை அடிமை கூட்டணி என முதல்வர் குறிப்பிடுகிறார். ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை பேசவிடாமல் தடுக்கின்றனர்.
யாரேனும் பேசினால் தில்லி வரை சென்று வாய்ப்பூட்டு போடுகின்றனர். திருமாவளவன் அவர்களின் கட்சியினரால் கொடியேற்ற முடிவதில்லை. தொழிலாளர்களின் தோழன் என சொல்லிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் நாளொரு தினமும் நடக்கும் போராட்டங்களை கண்டுகொள்ளாமல் பெட்டிப்பாம்பாய் உள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது திமுகதான் பெரியண்ணன் போல உள்ளது என தெரிகிறது. அன்புமணி அவர்களை கூட்டணிக்குள் அழைத்து வந்தது எடப்பாடியார்தான். டிடிவி தினகரன்- எடப்பாடி இடையே ஏற்கெனவே மோதல் இருந்ததால் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசி அதற்கான தீர்வை ஏற்படுத்தினார். பங்கிட்டு பங்குகளை முடிக்கிறோம் என வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சுமூகமாக யாருக்கும் எந்த கோபமும் இல்லாமல் ஜனநாயக முறைப்படி அமைந்த கூட்டணி எங்கள் கூட்டணி.
திமுகவிற்கு எதிராக இவ்வளவு பேரை ஒருங்கிணைத்தது ஒரு சாதனை என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக. இந்தக் கூட்டணியில் இருந்தவர்கள் எங்களோடு ஏற்கெனவே பயணித்தவர்கள். இதற்கு முந்தைய தேர்தல்களில் எங்களுடன் இணைந்தும், பிரிந்தும் இருந்துள்ளனர். ஓட்டுக்கள் பிரிந்து விடக்கூடாது என்ற மனநிலையில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. எல்லோரும் அதை தங்களது கடமையாக நினைக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் தலைவர்கள் எல்லோரும் திமுகவை தோற்கடிப்பது நமது கடமை நாட்டிற்கான தனது சேவை என நினைக்கின்றனர். யாரெல்லாம் திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
ஆனால் இது ஏற்கெனவே இருந்த கூட்டணிதானே? இது எப்படி வலிமையான கூட்டணி ஆகும்?
2019 வேறு. தமிழ்நாட்டில் அப்போது கூட்டணிக்குள் நிறைய பிரச்னைகள் இருந்தன. 2021இல் டிடிவி தினகரன் இல்லை. 2024இல் அவர் எங்கள் கூட்டணியில் இருந்தார். ஆனால் அதிமுக இல்லை. தற்போது டிடிவி தினகரன், அதிமுக ஆகியோர் எங்கள் கூட்டணியில் உள்ளனர். திமுகவிற்கு எதிராக உள்ள மனநிலையை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வாக்கு சதவிகித எண்ணிக்கையில் நாங்கள் திமுகவைவிட அதிகமாகவே உள்ளோம். எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு இடையேயான மோதல் தற்போது மறைந்து அனைவரும் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். முதல்வர் சொல்வதை போல நிலைமை இங்கு இல்லை. மக்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். மக்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. அவர்கள் மாற்றத்தை வேண்டுகின்றனர். அந்த மாற்றத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணி கொடுக்கும்.
தேமுதிக இன்னும் கூட்டணிக்குள் வரவில்லை. அதேபோல ராமதாஸ், ஓபிஎஸ் ஆகியோரும் கூட்டணியில் இல்லை. சிறியக் கட்சிகளை கொண்டு எப்படி திமுகவை உங்களால் வெல்ல முடியும்? சமீபத்தில் தேமுதிகவின் சுதீஷ் அவர்களுடன் பேசி உள்ளீர்கள்? என்ன நடந்தது?
சுதீஷ் உடனான பேச்சு குறித்து சொல்வது நாகரிகமாக இருக்காது. எல்லோரும் இணையக்கூடிய காலம் வந்து விட்டது. இன்றைக்கு திமுக கூட்டணி பலம் பொருந்தியதாக உள்ளது. எனவே அங்கு இணைபவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. அதே சமயம் எங்களது கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கு அங்கீகாரம் அதிகமாகவே கிடைக்கும். தேமுதிகவும் எங்களுடன் இருந்த கட்சிதான். அவர்களுக்கும் திமுகவை தோற்கடிக்க வேண்டிய கடமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அதை அவர்களும் உணர்ந்தே உள்ளனர்.
அப்படியெனில் தேமுதிகவை கூட்டணிக்குள் எதிர்பார்க்கலாமா?
அனைத்து கட்சிகளையும் எதிர்பார்ப்பது இயற்கை தானே. இவர் வேண்டாம் அவர் வேண்டாம் என்பது இல்லை. எல்லோரும் இணைந்து செயல்படுவது நல்லது என்பதே எனது கருத்து. பாஜகவின் கருத்தும் அதுதான்.
ஓபிஎஸ் அவர்கள் என்டிஏ கூட்டணியில் இணைவாரா?
தினகரன் தனியே வேறு கட்சி வைத்திருந்தார். ஓபிஎஸ் அவர்களுக்கு உட்கட்சியில் சில பிரச்னைகள் இருப்பதால் அதை எவ்வாறு தீர்க்கப் போகின்றார் எனத் தெரியவில்லை. எனிலும் திமுக அமைச்சர் சேகர்பாபு அவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேள்விப்பட்டேன். இது ஒரு நெருடலான விஷயம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான திமுகவில் இணைய விருப்பம் இல்லாததால் தனது அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகினார் குன்னம் ராமச்சந்திரன்.
அந்த மனநிலை ஓபிஎஸ் அவர்களுக்கும் இருக்கும் என நான் நினைக்கிறேன். அப்படி இருந்தால் அவர் திமுக செல்ல முடியாது. திமுகவைத் தோற்கடிக்க ஜெயலலிதா அவர்கள் விரும்பியதால் எடப்பாடி பழனிசாமி உடன் இணைந்து செயல்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதே பொறுப்பு மற்றவர்களுக்கும் இருக்கும் என நான் நினைக்கிறேன்.
முழு நேர்காணலைக் காண:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.