மலைகளில் ஒளிந்திருக்கும் ஆபத்து: மண்சரிவைத் தடுக்க கூடுதல் கவனம் தேவை
தமிழகத்தில் பருவமழைக் காலம் தொடங்கும்போதெல்லாம், மலை மாவட்டங்களில் மண்சரிவு குறித்த அச்சம் அதிகரிப்பது குறித்து...

பிரதிப் படம்
தமிழகத்தில் பருவமழைக் காலம் தொடங்கும்போதெல்லாம் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் மண்சரிவு குறித்த அச்சம் அதிகரிக்கிறது.
அண்மையில் நீலகிரி மாவட்டம் பர்லியார், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு நிகழ்வுகள், மலைப்பகுதிகளின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளன.
இயற்கையாகவே மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள மலைப் பகுதிகளில், மனிதர்களின் தலையீடுகள் இந்த ஆபத்தை மேலும் அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் புவியாளர் பிரபாகரன் வீரஅரசு எச்சரிக்கிறார்.
இயற்கைச் சூழலும் மனிதத் தலையீடும்...
மண் சரிவு ஏற்படுவதற்கு இயற்கைக் காரணிகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு மனிதத் தலையீடுகளும் காரணமாகின்றன. நிலநடுக்கம், புவித் தட்டுகளின் நகர்வு, அதீத மழைப்பொழிவு உள்ளிட்ட இயற்கைக் காரணிகளால் மண்சரிவு ஏற்படுகிறது.
நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 24 மணி நேரத்தில் சுமார் 240 மி.மீ. மழைப்பொழிவைத் தாங்கக்கூடிய நிலை உள்ளது. இதைத் தாண்டி மழை பதிவாகும்போது, மண்ணின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டு மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஒரே நாளில் 350 மி.மீ. மழை பெய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல், திருவண்ணாமலையில் 330 மி.மீ. மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர். இத்தகைய நிகழ்வுகள், அதீத மழைப்பொழிவால் ஏற்படும் பேரிடர்களின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
தேயிலை, காபி சாகுபடியால் பாதிப்பு
மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்காக நிலத்தின் இயல்பான அமைப்பை மாற்றுவது, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மண்ணின் உறுதித்தன்மையைப் பாதிக்கின்றன. அதேபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக மேலாண்மை செய்யாமல் நிலத்தடியில் செலுத்துவதால், நிலத்தடி நீர்மட்டத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு மண் சரிவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
மலைப் பகுதிகளில் இயற்கையாக வளரும் மரங்களின் வேர்கள் மண்ணைப் பிணைத்து வைத்திருப்பதுடன், மழைநீர் வேகமாக வழிந்தோடுவதையும், மண் அரிப்பையும் கட்டுப்படுத்த உதவுகின்றன.
ஆனால், வணிக நோக்கில் இயற்கை மரங்கள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தேயிலை, காபி போன்ற பயிர்கள் ஒற்றைப் பயிர் முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதனால், மண்ணின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பு பாதிக்கப்படுவதுடன், மண் அரிப்பும் தீவிரமடையக்கூடும்.
எனவே, மலைப் பகுதிகளில் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான அனுமதிகளை அரசு கட்டுப்படுத்துவதுடன், நிலத்தின் தன்மை, சரிவின் அளவு, நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்கிறார் பிரபாகரன் வீரஅரசு.
சுற்றுலாவையும் முறைப்படுத்த வேண்டும்
உதகை, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால், கட்டடங்கள், சாலைகள், வாகனப் போக்குவரத்து, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்டவற்றின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. இதைக் கருத்தில்கொண்டு, சுற்றுலா நடவடிக்கைகளை நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உதகையை சுற்றுலாத்தலமாகப் பிரபலப்படுத்த மலர்க் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போதைய சூழலில், ஏற்கெனவே அதிகம் பிரபலமான மலைப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்குப் பதிலாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் அறிந்திராத, சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய பிற இடங்களையும் பொறுப்பான முறையில் சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தலாம்.
இதன்மூலம் உதகை, கொடைக்கானல் போன்ற இடங்களில் சுற்றுலா அழுத்தத்தைக் குறைத்து, இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இத்தகைய நடவடிக்கைகளை அரசு படிப்படியாகவும் நீண்டகால நோக்குடனும் செயல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
நவீன தொழில்நுட்பத்தில் பாதுகாப்பான கட்டடங்கள் சாத்தியம்!
மலைப் பகுதிகளின் இயற்கை அமைப்பைப் பாதுகாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான கட்டடங்களை அமைக்க முடியும் என்று கிரெடாய் அமைப்பின் நீலகிரி மாவட்டத் தலைவர் சாய் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 67 சதவீதம் வனப் பகுதியாகவும், 19 சதவீதம் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களாகவும் உள்ளன. உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பு 3.47 சதவீதம் மட்டுமே.
மலைப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதற்குப் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மண் சரிவைத் தடுக்கும் தடுப்புச் சுவர்கள், உரிய தாங்கு அமைப்புகள் உள்ளிட்டவற்றை நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அமைப்பதன் மூலம் கட்டடங்களின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
சீனாவின் ஹாங்காங், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட பகுதிகளில் மலைச் சரிவுகளில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைப் போன்று, உரிய ஆய்வுகளின் அடிப்படையில் தமிழக மலைப் பகுதிகளிலும் பாதுகாப்பான கட்டடங்களை அமைக்க முடியும்.
நீலகிரியில் தற்போது 7 மீட்டர் உயரம் வரை மட்டுமே கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. இதை தமிழக அரசு 10 மீட்டராக உயர்த்த வேண்டும். கட்டுமானத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பயன்படுத்தி, மலைப் பகுதிகளின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றார் சாய் கிஷோர்.
பேரிடர் கண்காணிப்புக் குழுக்கள் தயார்: அமைச்சர் எஸ். கமலி
பருவமழையை முன்னிட்டு நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பேரிடர் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நீலகிரி மாவட்டப் பொறுப்பு அமைச்சரும், கால்நடைத் துறை அமைச்சருமான எஸ். கமலி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. மண் சரிவைத் தடுப்பதற்கான தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மலைப் பகுதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்குமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சூழ்நிலைக்கேற்ப சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பலத்த மழை, மண் சரிவு உள்ளிட்ட பேரிடர்களுக்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக எச்சரிக்கை விடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களும் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன. எங்கு மண்சரிவு ஏற்பட்டாலும், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றார் அவர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

