மணற்கொள்ளை விவகாரத்தில் கேரளாவுக்கு இருக்கும் விழிப்புணர்வு தமிழகத்துக்கு ஏன் இல்லை?

கேரள மாநிலத்தில் 45 ஆறுகள் பாய்கின்றன. ஆனாலும்கூட அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டு முதல் எந்த ஓர் ஆற்றிலிருந்தும் ஒரு கைப்பிடி மணலைக்கூட அள்ளமுடியாத அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மணற்கொள்ளை விவகாரத்தில் கேரளாவுக்கு இருக்கும் விழிப்புணர்வு தமிழகத்துக்கு ஏன் இல்லை?
Published on
Updated on
3 min read

தமிழ்நாட்டின் கனிம வளங்களை நம்பிக் கள்ள வணிகத்தில் ஈடுபடுவோர் கைவிடப்படார் என்பதே தற்போதைய புதுமொழியாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் மலைவளங்கள் கிரானைட் கற்கள் என்ற பெயரிலும், கடற்கரை வளங்கள் தாதுமணல் என்ற பெயரிலும், நதி வளங்கள் மணல் குவாரிகள் என்ற பெயரிலும், வன வளங்கள் மர வணிகம் என்ற பெயரிலும் பெருமளவில் சூறையாடப்பட்டிருக்கின்றன. சூறையாடப்பட்டும் வருகின்றன.

கட்டுரையாளர்: ஜெயபாஸ்கரன்
கட்டுரையாளர்: ஜெயபாஸ்கரன்

கனிம வளக் கொள்ளைகள் தொடர்பான நூற்றுக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களுக்கும் நிர்வாகத் தரப்புகளுக்கும் பெருஞ்சுமைகளாக மாறியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மிகத் தீவிரமாக மணற்கொள்ளைகள் நடத்தப்பட்டு வருகின்ற நமது தமிழ்நாட்டில், மொத்தம் உள்ள 33 ஆறுகளில் இருந்தும் நாள்தோறும் 90 ஆயிரம் லாரிகளில் மணல் அள்ளிச் செல்லப்படுகிறது. தமிழ்நாட்டின் ஒருநாள் மணல் தேவை அதிகபட்சம் 35 ஆயிரம் லாரிகள்தான். எஞ்சியிருக்கும் அவ்வளவு மணலும் அண்டை மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது.

கரூர் மண்டலத்தில் காவிரி ஆற்றுப் பகுதிகள் அனைத்திலும் மணற்கொள்ளை நடந்து வருவதால் அதற்கு எதிராக வெகுண்டெழுந்த ஊர் மக்கள், "காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி, "காவிரி ஆறு எங்கள் ஆறு மணற் கொள்ளையனே வெளியேறு' எனும் முழக்கத்தோடு தொடர்ந்து போராடி வழக்குகளையும், கொடூரமான தாக்குதல்களையும், கொலை மிரட்டல்களையும் சந்தித்து வருகின்றனர்.

மணற் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடையும்போது மட்டும் எங்கோ ஒரு சில இடங்களில் கண்துடைப்புக்காக மணல் அள்ளுவது தாற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

நெய்தல் நிலப்பரப்புகளின் தாதுமணற் கொள்ளைகளும், குறிஞ்சி, முல்லை நில வனங்களின் மரக்கொள்ளைகளும், கிரானைட் கற்கொள்ளைகளும் இயற்கைச் சூழல் நலன்களுக்கு மறைமுகமான ஆபத்துகளை விளைவிக்கக் கூடியவை.
ஆனால், மருத நிலப் பரப்பின் ஆறுகளில் நடக்கின்ற மணற் கொள்ளையோ நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும், வேளாண்மைத் தொழிலுக்கும் வேட்டுவைக்கக் கூடியவையாகும்.

கனிம வளங்களைப் பறிகொடுப்பதில் இந்திய அளவில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்பதும், ஆற்றுமணற் கொள்ளையில் தமிழக மணல் வணிகர்களே முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பதும் ஆய்வுபூர்வமான உண்மைகளாகும்.
அரசாங்கத்தைப் பெருமளவு ஏமாற்றியும், விவசாயிகளை வஞ்சித்தும், மிரட்டியும், ஊர்மக்களை இரண்டாகப் பிரித்து மோதவிட்டும், சில இடங்களில் கிராம மக்களுக்குக் கோயில் கட்டித் தருதல், கிராமத் தேவைகளுக்கு நன்கொடை அளித்தல் போன்றவற்றைச் செய்தும், மணல் வணிகர்கள் தங்களது மணற்கொள்ளைகளை நடத்தி வருகின்றனர்.

எதற்கும் அஞ்சாமல் கேள்வி கேட்பவர்களைத் தாக்குவது, கொலை செய்வது போன்றவையும் அவ்வப்போது நடந்து வருகின்றன. எத்தகைய மனித சக்தியாலும், என்றைக்குமே உற்பத்தி செய்ய முடியாத, ஆற்றுமணலை, குவாரி ஒப்பந்த முறையில் தனியாருக்கு விற்கத்துணிந்த அரசாங்கத்தின் முடிவு மிக மிக அபாயகரமானது. இது தமிழ்நாட்டின் இயற்கை வளத்திற்கு நேர்ந்திருக்கின்ற மிகப்பெரிய அவலம்தான்.

கேரள மாநிலத்தில் 45 ஆறுகள் பாய்கின்றன. ஆனாலும்கூட அந்த மாநிலத்தில் 1994-ஆம் ஆண்டு முதல் எந்த ஓர் ஆற்றிலிருந்தும் ஒரு கைப்பிடி மணலைக்கூட அள்ளமுடியாத அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அம்மாநிலத்திற்குத் தேவையான மணல் முழுவதும் தமிழ்நாட்டின் ஆறுகளில் இருந்தே அள்ளிச் செல்லப்படுகிறது. மேலும் கட்டடங்களைக் கட்டுவதற்கு மணல் தேவைப்படாத மாற்றுத் தொழில்நுட்ப முறைகளையும் அங்கு பயன்படுத்திவருகின்றனர். அதுபோன்ற எத்தகைய விழிப்புணர்வும் நமது தமிழகத்தில் இல்லை.

ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு மொத்தம் 28-வகையான கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் அரசு விதித்துள்ளது. அத்தகைய 28-விதிகளில் ஒன்றைக் கூட குவாரி ஒப்பந்தக்காரர்கள் பின்பற்றுவதில்லை.

"நீர் நிலைகள் முற்றிலுமாக வறண்டு போனாலும் அவற்றை வேறு எத்தகையத் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மக்கள் மத்தியில் அலட்சியம் நிலவுகிறது' என்று மிகவும் வேதனையோடு தெரிவித்திருக்கிறார், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றின் ஆறுகளில் எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலோ ராட்சத எந்திரங்களையும், லாரிகளையும் பயன்படுத்தி கனிம வளங்கள் அள்ளப்படுகின்றன.

"எங்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் 34 கோடி (புதிய 2,000 ரூபாய் நோட்டுகள்) மணல் வணிகத்தில் ஒரு நாளைக்கு 1.50 கோடி எனும் கணக்கில் கடந்த 26 நாள்களில் நாங்கள் சம்பாதித்த பணமாகும். எங்களின் நிறுவனத்துக்குச் சொந்தமாக 425 லாரிகளும், 180 பொக்லைன் எந்திரங்களும் உள்ளன. அவற்றைக் கொண்டு சட்டபூர்வமாக ஆற்றுமணலை அள்ளிச் சம்பாதித்து அதற்கான வரியையும் அரசுக்குக் கட்டி வருகிறோம். எனவே எங்களுக்கு ஜாமீன் அளியுங்கள்' என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார், அண்மையில் கைது செய்யப்பட்ட பெருமணல் வணிகர் ஒருவர்.

ஒற்றை மணல் வணிகரிடம் 26 நாள்களில் இவ்வளவு பணம் குவிகிறது என்றால், அவரது 180 பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு 425 லாரிகளில் அவர் அள்ளுவது மணலையா அல்லது பணத்தையா? நாடு முழுவதும் இன்னும் ஆயிரக்கணக்கான மணல் வணிகர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆற்று மணலுக்கு மட்டுமே இந்தக் கணக்கு. மற்ற கனிமங்களான தாது மணல், கிரானைட், காட்டு மரங்கள் போன்றவை வேறு வேறாக விரிகின்ற தனித் தனிக் கணக்குகள்.

வானுயர எழும்புகின்ற கட்டடங்கள் ஆற்று மணலுக்குக் கட்டப்படுகின்ற கல்லறைகளாகவே மாறுகின்றன. ஏனெனில், சிமெண்ட் கலந்த அந்த மணற் குவியல்கள் இனி எந்தக் காலத்திலும் மீண்டும் ஆற்றுக்கு வந்து நீரோடு சேர்ந்து நகரப்போவதில்லை.

கிரானைட், பவளப்பாறைகள் போன்ற மற்ற கனிமங்களுக்கும் இதே நிலைதான். இயற்கையே நினைத்தால்கூட மீண்டும் உருவாக்கிக் கொள்ள வாய்ப்பில்லாத இதுபோன்ற நிரந்தர வளங்களை பாதுகாப்பதுதான் உண்மையான அறிவியல் வளர்ச்சியாக இருக்க முடியும். அந்த நிலையை எட்டுவதற்கான முதற்படியாக ஆற்று மணல் வணிகத்தை அரசுகள் முற்றிலுமாகக் கைவிட வேண்டும்.

நமது ஆற்று மணல் வணிகம் என்பது கட்டடங்களையும், குவாரி ஒப்பந்தக்காரர்களையுமே உயர்த்தியிருக்கிறது. நமது சமூகத்தையும், விவசாயிகளையும், சுற்றுச்சூழல் நலன்களையும் படுபாதாளத்தில் வீழ்த்தியிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் உயர்தர அடுக்குமாடி குடியிருப்புகள் லட்சக்கணக்கில் நீண்டகாலமாக விற்பனையாகாமல் இருப்பதாக கட்டுமான உலகில் ஒரு சலிப்பும் முனகலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் பல கோடிக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக நம்மிடையே உள்ளனர். செல்வத்தின் அடையாளமாகவும், ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தப்படாமலும், ஆண்டுக்கு ஒரு சில நாள்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும், நமது நாட்டில் கோடிக்கணக்கான கட்டடங்கள் உள்ளன. இவற்றுக்கெல்லாம் தேவைப்படுவதாக அடி ஆழம் வரை சுரண்டப்பட்டதென்னவோ நமது ஆறுகளின் மணல் பரப்புகள்தான்.

யாருடைய வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் யாருடைய வளங்களைப் பறிகொடுப்பது என்பதே இன்று நம்முன் நிற்கும் கேள்வியாகும்.

வேளாண்மையின் வீழ்ச்சியில் இருந்தும் சுற்றுச் சூழல் நலத்தின் வீழ்ச்சியில் இருந்தும் எந்த நாடும் வளர்ச்சியடைந்துவிட முடியாது. ஆற்றுமணல் விற்பனை என்பது ஒரு வகையில் ஆறுகளையே விற்பதுபோன்ற ஒரு நடவடிக்கைதான். எனவே அவற்றை குவாரிகளாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து பணம் ஈட்டுகின்ற பாழ்வணிகத்தை நமது தமிழக அரசு உடனடியாகக் கைவிடவேண்டும். அதன் வழியிலான வருவாய்க்கும் ஆற்றுமணல் பயன்பாட்டிற்கும் மாற்று காணப்பட வேண்டும்.

இயற்கையின் மீது நடத்தப்படுகின்ற கொடூரத் தாக்குதல்போல, மணற் கொள்ளைக்கு பலியாகின்ற நீண்ட ஆறுகள் காலப்போக்கில் ஆங்காங்கே தென்படுகின்ற நூற்றுக்கணக்கான குட்டைகளாக மாறி காலப்போக்கில் அவையும் கைவிடப்படும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பல்வேறு வகையில் சீரழிக்கப்படுகின்ற மக்களை அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது மீட்டெடுக்க முடியும். ஆனால் அழிக்கப்பட்டுவிட்ட இயற்கையை எந்தக் காலத்திலும் மீட்டெடுக்கவே முடியாது என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com