முகநூல் பதிவைப் பார்த்து சாலைச் சீரமைப்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி!

தனது துறை சார்ந்த விஷயம் இல்லையென்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை அந்தப் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.
முகநூல் பதிவைப் பார்த்து சாலைச் சீரமைப்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை ஐ.பி.எஸ் அதிகாரி!
Published on
Updated on
2 min read

‘சென்னைட்டிஸ்’ எனும் முகநூல் பக்கத்தில், சென்னையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை பழுதாகியுள்ளது... அதனால் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது, எனும் பதிவை புகைப்படத்துடன் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அதைக் கண்ட சென்னையைச் சேர்ந்த அரவிந்தன் ஐபிஎஸ் எனும் காவல்துறை அதிகாரி உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்தச் சாலையை சரி செய்துள்ளார். அதுமட்டுமல்ல முகநூலில் சாலைப்பழுது புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்த நபருக்கும் உடனடியாக தொடர்பு கொண்டு சாலை சரி செய்யப்பட்ட விஷயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

மக்கள் நலப் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் சம்மந்தப்பட்ட துறையைச் சார்ந்தவர்களே நடவடிக்கை எடுக்காமலிருக்கும் இன்றைய நாட்களில், தனது துறை சார்ந்த விஷயம் இல்லையென்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அரவிந்தன் ஐபிஎஸ் அவர்களை அந்தப் பகுதி மக்கள் மனதாரப் பாராட்டினர்.

சென்னை தி.நகர் காவல் துணை ஆணையராக தற்போது அரவிந்தன் பணியாற்றி வருகிறார். தனது அலுவல் மட்டுமல்ல அதைத் தாண்டி அரவிந்தன் ஐபிஎஸ் சமூகப் பொறுப்புள்ள பல நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்துவதில் மிகுந்த ஆர்வமுள்ளவராகக் காணப்படுகிறார். கடந்த 18 ஆம் தேதி சென்னையிலுள்ள பின் தங்கிய மாணவர்களை அழைத்து அவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். “ஒரு சிறு வழிகாட்டுதல் இருந்தால் போதும், இவர்கள் தங்களது கனவை அடைந்து விடுவார்கள். இவர்களை மேம்படுத்தும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது” என அரவிந்தன் ஐபிஎஸ் அந்நிகழ்வில் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினர் பற்றிய எதிர்மறைச் செய்திகளே இதுவரை ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே காவல்துறையில் அரவிந்தனைப் போன்று சமூகப் பொறுப்புள்ள நல்லிதயம் கொண்ட அதிகாரிகளும் பணியாற்றி வருகிறார்கள் என்பது பொதுமக்களிடையே அரிதான விஷயமாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com