Enable Javscript for better performance
உண்மையான பெண்ணியவாதிகள் யார்? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!- Dinamani

சுடச்சுட

  

  உண்மையான பெண்ணியவாதிகள் யார்? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

  By DIN  |   Published on : 18th May 2018 03:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  banu

  'வரலாறு படைத்த வைர மங்கையர்' என்னும் தலைப்பில் மூன்று தொகுதிகளில் ஐம்பத்திரெண்டு பெண்மணிகளின் பங்களிப்பை பேராசிரியர் பானுமதி தருமராஜன் ஆவணப்படுத்தியுள்ளார். இன்றைய பெண்ணியவாதிகள் தங்களது முன்னோடிகள் குறித்து அறிந்து கொள்ள தனது கள, ஆவண ஆய்வின் அடிப்படையில் வரலாற்று உண்மைகளைத் தொகுத்து தந்துள்ளார் பேராசிரியர் பானுமதி தர்மராஜன். அவர், நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

  'உலகம் தோன்றிய நாளிலிருந்து பெண்கள் பல சிக்கல்களை, பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாட்டின் விடுதலைக்காக, பெண்களின் உரிமைகளுக்காக ஒவ்வொரு நாட்டிலும் பெண்களின் பங்களிப்பு உண்டு. அது இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பொருந்தும்.

  பெண்களின் முன்னேற்றம், சாதனைகள் பெருகி வந்தாலும் புதுப்புது சிக்கல்களும் சவால்களும் கால மாறுதல்களுக்கு ஏற்றவாறு ஏற்பட்டு வருகின்றன. இன்றைய பெண்களின் வளர்ச்சிக்கு, கடந்த காலத்தில் பெண்ணியம் பேசிய, பெண்ணுக்கு நீதி கேட்ட பெண்ணியவாதிகள்தான் காரணம்.

  சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும் பின்பும் பெண்ணியவாதிகளின் உழைப்பு, செய்த தியாகங்கள், நமது வரலாற்றில் உரிய இடம் பெறவில்லை. அப்படியே வெகு சிலரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருந்தாலும் அவை சில சொற்களில் அல்லது சில வரிகளில் நின்று விட்டன. பெண்ணியவாதிகளின் பங்களிப்பு முறையாக, சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அந்தக் குறையைக் கணிசமான அளவில் தீர்த்து வைக்கவும், சென்ற அதற்கு முந்தைய தலைமுறையில் ஆளுமை திறமை, வல்லமை கொண்டிருந்த பெண்மணிகள் குறித்து இன்றைய தலைமுறையினரும், வரும் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற நோக்கத்தில் பல வரலாற்று குறிப்புகளைத் தேடி எடுத்து... தமிழகத்தில் அந்தப் பெண்மணிகள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று தகவல்கள் திரட்டி அதன் அடிப்படையில் இந்த நூல்களை உருவாக்கியிருக்கிறேன்.

  பெண்ணியம் குறித்த பிரச்னைகள் தீர்ந்து விட்டனவா என்றால் முழுமையாகத் தீர்ந்து விடவில்லை. பெண்களை மதித்து சரிசமமாக நடத்தாத வரையில் பெண்களின் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு வீட்டில் ஒரு பெண்ணுக்கு வெளியே பிரச்னை ஏற்பட்டால் அந்தப் பெண் வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு ரோஷம் வரும். அக்கம் பக்கத்து ஆண்களும் குரல் கொடுப்பார்கள். அதுவே சில வீதிகள் தாண்டிவிட்டால் அந்தப் பெண்ணுக்காக குரல்கள் எழும்பாது. பெண்களை மதிக்க வீட்டிலேயே கற்றுக் கொடுக்கணும். வீடுகளில் குழந்தைகள் முன் பெண்கள் மதிக்கப்படணும். அப்படி ஒவ்வொரு வீட்டிலும் இந்த சூழல் உருவானால்தான் ஆண் குழந்தைகள் பெரியவர்களாக வளரும் போது பிற பெண்களை மதிக்க தொடங்குவார்கள். அடுத்த தலைமுறையை இப்படி வளர்த்தால் மாற்றம் நிச்சயம் வரும்.

  வீட்டிலும் சரி... விருந்திலும் சரி.. முன்பெல்லாம் ஆண்கள் உணவருந்திய பிறகுதான் பெண்கள் சாப்பிடணும். இப்போது அதெல்லாம் மாறிவிட்டது. அந்தக் காலத்தில் வேலை செய்யும் பெண்கள் சம்பளம் வாங்கும் போது அலுவலகத்தில் கையொப்பமிட்டு சம்பளம் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் சம்பளத்தை வாங்க வெளியே கணவன் காத்திருப்பார். இப்போது சம்பளம் வங்கிக் கணக்கில் மாதா மாதம் வரவு வைக்கப் படுவதால் பெண்களின் "டெபிட் கார்டு' பெரும்பாலும் கணவர்கள் கையில்தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் பெண்களின் முன்னேற்றம் ஓரளவு வந்திருக்கிறது. பொருளாதாரச் சுதந்திரம் ஓரளவு கிடைத்திருக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் பெரிதாக மாற்றங்கள் வரவில்லை.

  இந்தியாவில் பெண்களின் ஜனத்தொகை ஏறக்குறைய ஆண்களின் ஜனத்தொகைக்குச் சமமாக உள்ளது. எல்லாத்துறையிலும் ஐம்பது சதவீதம் ஒதுக்கீடு தர வேண்டிய தருணம் வந்து விட்டது. ஆனால் இங்கே 33.33 சதவீத இட ஒதுக்கீடே இன்னும் சாத்தியமாகவில்லை. பஞ்சாயத்து நிர்வாகத்தில் பெண்கள் சிறப்பாகச் செயல்படும் போது, இதர நிர்வாகத் துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். பெண்கள் சாதித்துக் காட்டுவார்கள்.

  எப்படி வெற்றிகரமான ஆணின் பின்னால் ஒரு பெண் இருக்கிறாரோ.. அதுபோல் சாதனை புரியும் பெண்ணுக்குப் பின்னால் பலமாக ஆண் இருக்கிறார். இப்படி மனைவியின் வெற்றிக்காக உதவும் கணவர்களையும் பாராட்ட வேண்டும். அப்போதுதான், மற்ற ஆண்களும் தன் மனைவியின் உயர்வுக்கு தங்களின் பங்களிப்பினை மனமுவந்து செய்வார்கள்.

  இப்போது பரவலாகப் பேசப்படுவது பாலியல் அத்துமீறல்களும் பலாத்காரங்களும் தான். இதிலிருந்து பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ள தற்காப்பு கலை ஒன்றை பழகி வைத்துக் கொள்வது நல்லது. ஜன நடமாட்டம் இல்லாத இடங்களைத் தவிர்ப்பதும் அவசியம். இதனால் வழிப்பறியைக் குறைக்கலாம். பாலியல் வன்முறைக்கு கடும் தண்டனை குறைந்த காலத்திற்குள் நீதிமன்றத்தால் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் பிஞ்சுப் பெண் குழந்தைகளையும், இளம் பெண்களையும் காப்பாற்ற முடியும்.' என்கிறார் 69 வயதாகும் சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பானுமதி தருமராஜன்.
   - அங்கவை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai